32°C
விளம்பரம்
Advertisement

தவிக்க வைக்கப் போகும் தண்ணீர் பிரச்னை!

admin சேலம் Published: March 2, 2014 4 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




ஆண்டுதோறும் பெய்யும் பருவமழை இவ்வாண்டு பொய்த்துவிட்டது. கடந்த காலங்களில் பெய்த மழையின் சராசரி அளவுகூட இந்த ஆண்டு இல்லை. குறிப்பாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடும் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. பூமியை சல்லடைக் கண் போல் துளைத்து பல நூறு அடிகளுக்குக் கீழ் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளின் எண்ணிக்கை கணக்கிலடங்காது. பாரம்பரிய வேளாண் பயிர்களான கம்பு, சோளம், வரகு, திணை, கொள்ளு, சாமை போன்ற பயிர்கள் தமிழகக் கிராமங்களில் பெயரளவிற்குக் கூட இல்லை. குறைந்த நிலத்தடி நீரைக் கொண்டு சொற்ப காலத்தில் பயன் தரக் கூடிய புகையிலை, மக்காச்சோளம், தக்காளி ஆகியவைகளே தென் மாவட்டங்களில் உள்ள பெரும்பான்மையான கிராமங்களில் பயிரிடப்படுகின்றன.
water demand
நகர்ப்புறங்கள் அதிகமானதின் காரணமாக பெரும் பகுதி விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு ரியல் எஸ்டேட் வியாபாரம் பெருகிவிட்டது. முதற்கட்டமாக குடிசை வாசிகளுக்கு ஒற்றை விளக்கு எரிய இலவச மின்சாரம், அதன்பின் 5 ஏக்கர் வரை நிலம் உள்ள விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், தற்போது அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம். இதனால் விவசாயிகளுக்கு பலன் ஏற்பட்டிருந்தாலும், இந்த சலுகை அதிகமான ஆழ்துளை கிணறுகள் அமைக்க வழி வகுத்தது என்பதும் மறுக்க முடியாத உண்மை.

“இயற்கையின் வனப் பை எண்ணி மகிழ்ந்து பூரிப்படைந்த நாம் அவற்றை நிலைநிறுத்தி வைத்துள்ளோமா’ என எண்ணிச் செயல்பட வேண்டிய தருணம் வந்துவிட்டது. நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள்தொகை, தொழிற்சாலைகள் அடுக்குமாடிக் கட்டடங்கள் ஆகியவற்றிற்கேற்ப நாம் நீர் மேலாண்மையினைக் கையாண்டுள்ளோமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

மிகப்பெரும் ஜனநாயக நாடுகளில் ஒன்றான இந்திய நாட்டின் மக்கள்தொகை தற்போது 120 கோடி. மக்கள்தொகையில் சீன நாட்டிற்கு அடுத்தபடியாக நாம் இருக்கிறோம். சர்வதேச கம்பெனிகள், பாட்டில் பானங்கள் தயாரிப்பதற்கான தண்ணீர், தனியார் நிறுவனங்கள் கேன்களில் அடைத்து விற்கப்படும் தண்ணீர் ஆகியவற்றின் காரணமாக நிலத்தடி நீர் வெகுவாக உறிஞ்சப்படுகிறது. பண்டைக் காலத்தில் கிராமங்களிலிருந்து அரசு உத்தியோகம் மற்றும் வியாபார நிமித்தமாக நகர்ப்புறங்களுக்கு செல்பவர்களை கிராம மக்கள் வழி அனுப்புகையில், பட்டனத்தில் தண்ணீர் ஒன்றைத் தவிர, எல்லாவற்றையும் விலைக்கு வாங்கித்தானே ஆக வேண்டும் என்பார்கள். இன்று நிலைமை அவ்வாறில்லை. பாலை விட குடிதண்ணீர் கேன்களுக்கு அதிகம் செலவழிக்க வேண்டிய நிலைமைக்கு ஆளாகியுள்ளோம். கும்பமேளாவில், புனித கங்கையில் நீராடச் செல்லும் சாதுக்கள் கூட குடிநீர் பாட்டில்களை கையில் ஏந்திச் செல்லும் காட்சியினை தற்போது காண்கிறோம்.

இதற்கு தீர்வுதான் என்ன? இரண்டாம் உலக யுத்தத்தில் இப்பூமி உருண்டையே, புகை மண்டலமாகக் காட்சியளித்தது. பல நாடுகளில் மக்கள் மாண்டு மடிந்தனர். அதனால் ஏற்பட்ட பொருளாதாரச் சீர்குலைவை மீட்டெடுக்க அரும்பாடு பட வேண்டியதாயிற்று. இந்த பூமிப் பந்தில் குன்றி மணி அளவில் உள்ள நாடு இஸ்ரேல். யுத்தத்தின் பேரழிவுகளை சந்தித்த பின், புதிய உத்திகளைக் கையாண்டதால் இன்று உன்னத நிலையினை அடைந்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் அவர்கள் வகுத்துக் கொண்ட நீர் மேலாண்மைதான்.

ஆயிரக்கணக்கில் மரங்கள் நடப்பட்டு அவை நாளடைவில் கோடிக்கணக்கில் பல்கிப் பெருகி பரிணமித்தது. ஒரு மரம் பல நூறு லிட்டர் நிலத்தடி நீரைச் சேமித்து வைக்கிறது. ஆச்சரியப்படக்கூடிய விஷயம் என்னவென்றால் பல ஆண்டுகள் இஸ்ரேல் நாட்டில் நிலத்தடி நீர் குறைந்து விடாமல் பாதுகாக்கப்படுகிறது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், பூகோள ரீதியாக பெரும்பாண்மை பரப்பு பாலைவனமாக உள்ள இஸ்ரேல் நாட்டின் மக்கள்தொகை, சென்னை நகர மக்கள்தொகைக்கு இணையானது. இன்று கூட்டுறவு முறை பண்ணை விவசாயம், பால்வளம், உயர்ரக பழங்கள் ஆகியவற்றின் உற்பத்தி உலகில், இஸ்ரேல் முன்னணியில் உள்ளது. தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குகிறது.

தற்போது இந்தியாவில் மழை அதிகமாகப் பொழியும் சிரபுஞ்சியில் நீர் மேலாண்மையினைக் கையாள நாம் இஸ்ரேல் நாட்டின் தொழில்நுட்பத்தை நாடியுள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள மக்கள்தொகைக்கு ஏற்ப காடுகளின் சதவிகிதம் இல்லை. மிகவும் குறைந்துள்ளது. இதனால் புவிவெப்பம் ஏற்படுவதுடன் நிலத்தடி நீரும் வெகுவாகக் குறையும் வாய்ப்புள்ளது. எனவே குறைந்து வரும் நிலத்தடி நீரை மேம்படுத்த, அதிக எண்ணிக்கையில் மரங்களை நட்டு வளர்ப்பதுடன் அரசு துறைகளான வருவாய், பொதுப்பணித் துறை பதிவேடுகளின்படி, ஏரி, குளங்கள், ஆறுகள், நீர் நிலைகள், ஓடைகளை ஆக்கிரமிப்பு செய்திருப்பவர்களை அவசரச் சட்டம் பிறப்பித்து, தயவு தாட்சயனமின்றி அப்புறப்படுத்த வேண்டும். அவை தூர்வாரி பாதுகாக்கப்பட வேண்டும். நிலத்தடி நீரை வெகுவாக உறிஞ்சும் வேலிக்காத்தான் என்ற சீமைக் கருவேல மரத்தை தமிழ்நாடு முழுவதும் வேரோடு அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் மண்ணின் தன்மைக்கேற்ப மரங்களை நட்டு ஐந்து வருடங்கள் வரை பாதுகாக்க வேண்டும். ஒவ்வொரு கிராமங்களிலும் மாதம் இருமுறை அல்லது ஒரு முறையாவது மரம் வளர்த்தல் நிலத்தடி நீரைப் பாதுகாத்தல் குறித்து குறும்படங்களை திரையிட்டுக் காண்பித்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பன்னாட்டு நிறுவனங்கள் பானங்கள் தயாரிக்க நிலத்தடி நீரை உறிஞ்சுவதை தடை செய்ய வேண்டும். தனியார் வியாபாரம் செய்யும் குடிநீர் கேன்களை அரசே அதற்கென தனிவாரியம் அமைத்து நடத்துவது பற்றி பரிசீலிக்கலாம். மழை நீர் சேகரிப்பினை பெயரளவில் இல்லாமல் முறையாகச் செயல்படுத்த கண்காணிக்க வேண்டும். மூன்றாவது உலக யுத்தம் ஏற்படுமானால் அது தண்ணீருக்காகத்தான் ஏற்படும் என்று கூறப்படுகிறது. எனவே இன்றைய அத்தியாவசிய தேவை நீர். அது கற்பனையாகிவிடக் கூடாது.

க. பாலுச்சாமி, சென்னை

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்