கமல்- சாரு- சில வெற்றுப் பேச்சுகள்!

கமல்- சாரு- சில வெற்றுப் பேச்சுகள்!

கமல் ஹாசனும் சாரு நிவேதிதாவும் நண்பர்களாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர்கள் யாருக்கு நண்பர்களாக இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த மன ஒப்புதலுடன் இருக்கிறார்கள்.
edit nov 8
” நான் விருதை திருப்பிக்கொடுப்பதால் நீங்கள் என்ன சாதிக்கப்போகிறீர்கள்?” என்று இன்று கமல் கேட்கிறார். நேற்று சாரு நிவேதிதா சன் நியூஸ் விவாதத்தில் ” இந்தியாவில் பண மதிப்பு குறைந்து விட்டது, வறுமை அதிகரித்து விட்டது, இதற்காகவெல்லாம் யாரும் விருதுகளை திருப்பிக் கொடுத்தார்களா?” என்று கேட்டார். எனக்கு எங்கோ படித்த ஒரு வாசகம் நினைவுக்கு வருகிறது. ‘ எல்லோரும் குழப்பத்தில் இருக்கும்போது நீங்கள் மட்டும் தெளிவாக இருக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு பிரச்சினை புரியவில்லை என்று அர்த்தம்” .

ஆனால் கமலும் சரி, சாரு போன்றவர்களும் சரி பிரச்சினை புரியாததுபோல நடிக்கிறார்கள் என்று எனக்கு தோன்றுகிறது. கமலிடம் விருதுகளை திருப்பிக்கொடுக்கும்படி யாரும் நிர்பந்தித்தார்களா? ஒரு கலைஞனுக்கு ஒரு பிரச்சினையில் தார்மீக நிலைப்பாடு இருக்கிறதா என்பது மட்டும்தான் கேள்வி. போராட்டத்தின் வழிமுறை என்பது அவரவர் தேர்வு. விருதை திருப்பிக் கொடுத்தவர்கள் மேல் அப்படிக் கொடுப்பதை ஏற்காத இவர்களைப்போன்றவர்கள் கக்கக் கூடிய விஷம் என்பது ஆச்சர்யமானதாக இருக்கிறது.

இதற்கு அவர்கள் ஒரு அரசை எதிர்ப்பதில் உள்ள பயம் அல்லது ஒரு அரசை ஆதரிப்பதால் கிடைக்கும் என்று நம்பக் கூடிய ஆதாயங்கள் என்கிற காரணங்களைத் தாண்டி வேறொன்று இருக்கிறது என்று தோன்றுகிறது. விருதை திருப்பிகொடுத்தவர்கள் மேல் குவியும் கவனமும் அவர்களுக்கு கிடைக்கும் ஹீரோ ஸ்டேடஸ்சும் பலரையும் துன்புறுத்துகிறது. இதனால் அரசுக்கு எதிராக எதிர் நிலை எடுப்பவர்கள் மேல் இவர்கள் அரசைவிட கடுமையான எதிர்நிலைகள் எடுக்கிறார்கள். இந்த தாழ்வுணர்சிதான் இதுபோன்ற பாமரத்தனமான கேள்விகளை எழுப்பத் தூண்டுகிறது.

எழுத்தாளர்கள் கொல்லப்படுகிறார்கள். சிறுபான்மையினர் அவர்களது உணவுப் பழக்க வழக்கங் களுக்காக தாக்கப் படுகிறார்கள். புத்தகங்கள் தடை செய்யபடுகின்றன. அமைச்சர்களும் ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுபினர்களும் வெளிப்படையாக மத வெறிப் பேச்சுகளை பேசுகிறார்கள். இந்த்துவா தீவிரவாத அமைப்புகள் நாடு முழுக்க பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி வருகின்றனர். அரசு இந்த சூழலுக்கு எதிராக குறிப்பிடத்தக்க எந்த நடவடிக்கையும் மேற் கொள்ளவில்லை. இதைத் தான் எழுத்தாளர்கள், கலைஞர்கள் எதிர்க்கிறார்கள். இந்த எதிர்ப்பில் நியாயம் இல்லை என்றால் வெளிப்படையாக மோடியின் பக்கம், மோகன் பகவத் பக்கம் நின்று பேசுங்கள். மாறாக சகிப் புதன்மை அவசியம் என்று சொல்லிக்கொண்டே சகிப்புதன்மையின்மைக்கு எதிராக போராடுகிறவர்களை கொச்சைப்படுத்துவது என்ன வகையான மனநிலை?,

மேலும் இந்தியாவின் கடந்த கால கொடுமைகளுக்கு யாரும் எதிர்வினையாற்றவில்லை என்பதெல்லாம் திரும்பத் திரும்பச் சொல்லப்படும் பச்சைப் பொய்கள். வெவ்வேறு ஒடுக்கு முறைகளுக்கு எதிர்வினைகள் வெவ்வேறு தளங்களில் இருந்தன. எதிர்காலத்திலும் இருக்கும்.

இஸ்லாமிய பயங்கரவாதம் தொடர்பாக கமல் ஒரு படம் எடுத்தபோது சில இஸ்லாமிய அமைப்புகள் அதை எதிர்த்தன. படத்திற்கு தடை வந்தபோது கமல் “ சுதந்திரமாக செயல்பட முடியாவிட்டால் நான் இந்த நாட்டை விட்டே வெளியேறுகிறேன்” என்றார் விருதை துறப்பதை விட நாட்டை துறப்பது இன்னும் மோசமில்லையா கமல் அவர்களே…சரி இப்போது நாடு முழுக்க நிலவுகிற வகுப்புவாத பதட்டத்தையும் இந்த்துவா பயங்கரவாதத்தையும் வைத்து நீங்கள் ஏன் ஒரு படம் எடுக்கக் கூடாது? இந்தியாவில் சகிப்புத்தன்மை இருக்கிறதா இல்லையா என்பதை தெரிந்து கொள்ள அது ஒரு அரிய வாய்ப்பு இல்லையா? அப்போது நீங்களாகவே நாட்டை விட்டு வெளியேற வேண்டிய தேவை இருக்காது. மோடியை எதிர்த்த் யு. ஆர் அனந்தமூர்த்திக்கு விமான டிக்கெட் எடுத்து அனுப்பியதுபோல அவர்களே உங்களுக்கும் பாகிஸ்தானுக்கு டிக்கெட் எடுத்து அனுப்புவார்கள்.

இருபத்தைந்தாண்டுகளுக்கு முன்பு சாரு நிவேதிதா மதுரையில் ’ இர்ண்டாம் ஆட்டம்” ஒரு நாடகம் போட்டார். பிண்ணணியில் சுப்ரபாதம் ஒலிக்க சில பாலியல் அசைவுகள் மேடைகள் நிகழ்த்தப் பட்டதால் சிலர் அவரை அடிக்கப் பாய்ந்தாரக்ள். அதேபோல போன வருட புத்தக கண்காட்சியில் பேசும்போது சாரு பெருமாள் முருகனுக்கு எதிராக சில கருத்களை கூறிய போது சிலர் கடுமையாக எதிர்த்தார்கள். இரண்டு சம்பவங்களையுமே சாரு அது தன்மேலான கொலை முயற்சிகள் என்றும் கருத்துக்கள் மீது சகிப்புத்தன்மை அற்ற சூழல் நிலவுவதாகவும் கடுமையாக விமர்சித்தார். ஆனால் இரண்டாம் ஆட்டம் நாடகத்தை சாரு இன்று போட்டால் இந்துத்துவா வெறியர்கள் அவரை கொலை செய்வார்கள் என்பதுதான் உண்மை. நிலைமை அந்த அளவிற்கு மோசமடைந்திருக்கிறது. தன் மீதான “ கொலை முயற்சிகளை” ஆவேசமாக எதிர்த்த சாரு ’மூட நம்பிக்கையை எதிர்த்த கல்புர்கி ஒரு முட்டாள’ என்று எழுதுகிறார்

தங்கள் கருத்துரிமை மேல் சிறிய பாதிப்பு வந்தால்கூட பொங்கி எழுந்தவர்கள் இன்று நாடு முழுக்க பரவிக் கொண்டிருக்கும் பாசிசத்தின் விஷத்தைப் பற்றி எந்தப் பதட்டமும் இல்லாமல் இதை காங்கிரஸ் –பா.ஜ.க பிரச்சினையாக மாற்றுவதும் அதற்காக பாமரத்தனமான தர்க்கங்களை முன் வைப்பதும் எவ்வளவு பெரிய நாடகம்? பேச்சு சுதந்திரம் பாதிக்கபட்டால் அதற்காக குரல் கொடுப் பேன்  என்கிறார் கமல். அப்படி பாதிக்கபடுவதை கமல் தெரிந்துகொண்டு அதற்கு எதிர் வினை யாற்றுவதற்கு அவரது அடுத்த படம் வெளிவந்து சர்ச்சைக்குள்ளாகும்வரை நாங்கள் காத்திருக்க வேண்டுமா?

– மனுஷ்ய புத்திரன்

Related Posts