அதிபர் – அதிகாரிகள் ஆட்சிக்கு முன்னுரையா? By குமரேசன் அசாக்

அதிபர் – அதிகாரிகள் ஆட்சிக்கு முன்னுரையா? By குமரேசன் அசாக்

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள சூழலில் அரசு நிர்வாகத்தில் புதிய மாற்றங்களை மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பது உண்மை. அப்படிப்பட்ட மாற்றங்கள் நிகழ்கின்றன என்று காட்டுகிற முயற்சிகளிலும் நரேந்திர மோடி அரசு ஈடுபட்டிருக்கிறது. மக்கள் எதிர்பார்க்கிற மாற்றங்களில் ஒன்றுதான், எந்த ஒரு பிரச்சனையிலும் அமைச்சகங்கள் விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது.
PM-SECRETARIES
மன்மோகன் சிங் தலைமையிலான முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசில் கோப்புகள் விரைவாக நகர்ந்ததில்லை என்ற குற்றச்சாட்டு உண்டு. குறிப்பாக, அவரிடம் மிகவும் எதிர்பார்த்தவர்களான கார்ப்பரேட் கனவான்கள், அவர்களுடைய புதிய தொழில் திட்டங்களுக்கானஅனுமதி, அதற்கான நிலத்தை வளைத்துப்போடுவது, சுற்றுச் சூழல் அல்லது இயற்கைச் சமநிலை பற்றிய கவலைகளை ஒதுக்கித் தள்ளுவது போன்றவற்றில் “வேகம் போதாது” என்று கருதினார்கள். அதற்குக் காரணம் தனிப்பெரும் கட்சியின் ஆட்சியாகஅமையாமல், கூட்டணிக் கட்சிகளின்ஆட்சியாக இருப்பதுதான் என்ற கருத்தையும் பரப்பினார்கள். உலகமயமாக்கல்,தனியார்மயமாக்கல், தாராளமயமாக்கல் ஆகியவை தொடர்பான கட்டளைகளை உரிய வேகத்தோடு நிறைவேற்றாததால்“செயல்படாத பிரதமர்” என்று ஒரு அமெரிக்கப் பத்திரிகை அட்டைப்படம் போட்டு எழுதியது, அதையும் பாஜக தனது பிரச்சாரங்களில் பயன்படுத்திக்கொண்டது.

காங்கிரஸ் ஆட்சியின் கொள்கைக் கோளாறுகளால் விளைந்த மக்கள் ஏமாற்றத்தை அறுவடை செய்துள்ள பாஜக, தனிப்பெரும் கட்சியாகவே ஆட்சியமைக்கிற வலிமையோடு, கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த சிலருக்கும் அமைச்சரவையில் இடமளித்திருக்கிறது. இதனால் கோப்புகள் விரைவாக நகரும் என்பதாக ஒரு எதிர்பார்ப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அதற்கேற்ப சில அமைச்சகங்களை ஒருங்கிணைத்தது போன்ற சில ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புதிய அரசின் இந்தப் புதிய வேகம் யாருக்குப் பலனளிக்கப்போகிறது, தங்களுக்கா அல்லது மேற்படி பிரச்சார நிர்ப்பந்தங்கள் மூலம் சாதித்துக்கொள்ள முயலும் கார்ப்பரேட் உலகத்தினருக்கா என்பதை இப்போது நாட்டு மக்கள் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள், பின்னர் கணிப்புக்கு வருவார்கள்.

இப்படி “வேகம்” காட்டுவதன் அடுத்த கட்டமாக, புதனன்று (ஜூன் 4) அமைச்சகங்களின் செயலர்கள் கூட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கூட்டியிருக்கிறார். அந்தக் கூட்டத்தில் ஒவ்வொரு துறையின் நிலைமைகள் குறித்தும் தேவைகள் குறித்தும் கேட்டறிந்திருக்கிறார். ஏற்கெனவே 12 ஆண்டுகள் மாநில முதலமைச்சராக இருந்தவர் என்பதால் துறைகளின் செயல்பாட்டு முறைகளைப் புரிந்துகொள்வது அவருக்கு எளிதாக இருந்திருக்கும் என்று ஊகிக்கலாம்.

அந்தக் கூட்டத்தின் இரண்டு அம்சங்களைப் புரிந்துகொள்வதுதான் மற்றவர்களுக்குப் புதிராக இருக்கிறது. புதிய பிரதமர் கூட்டிய அனைத்துத் துறைகளின் முதல் கூட்டம், அந்தந்தத் துறைகளின் அமைச்சர்கள் இல்லாமலேயேநடத்தப்பட்டிருக்கிறது. அடுத்து, அதிகாரிகள் தங்களுடைய துறை சார்ந்த பிரச்சனைகளைத் தன்னிடம் நேரடியாகத் தெரிவிக்கலாம் என்று மோடி அந்தக் கூட்டத்தில் அறிவித்திருக்கிறார். அதிகாரிகள் அச்சமின்றிச் செயல்படலாம் என்றும், அவர்களுக்குத் தனது ஆதரவு உண்டு என்றும் கூறினார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

அடிப்படையில் அமைச்சர்கள் பிரதமரின் குழுவினரே, அமைச்சகங்கள் பிரதமரின் முழுக்கட்டுப்பாட்டில் இருப்பவையே. நாட்டின் அரசமைப்பு சாசனம் இந்த ஏற்பாட்டை உறுதிப்படுத்துகிறது என்பதால் இதைக் கேள்வி கேட்பதற்கில்லை. ஆனால் சட்ட நுணுக்கங்களுக்கு அப்பாற்பட்டு அரசியல் நெறிகளும், ஜனநாயக மாண்புகளும் முக்கியமானவை. அமைச்சர்கள் பிரதமரின் உதவியாளர்கள்தான், அதே வேளையில் அவர்கள் அரசியல் தலைமையில் இருப்பவர்கள். எந்த அமைச்சகமானாலும் அதற்கு வழிகாட்டவும் அதனை இயக்கிடவும் அரசியல் தலைமை இருந்தாக வேண்டும். அரசின் கொள்கைகள் அமைச்சர்கள் மூலமாகவே சம்பந்தப்பட்ட துறைகளின் அணுகுமுறைகளாக மாறுகின்றன. அந்த அரசியல் தலைமைக்குக் கட்டுப்பட்டவர்களாகவே அதிகார வர்க்கத்தினர் செயல்பட வேண்டும்.

அந்தந்தத் துறைகளுக்கான தேவைகள் அவற்றின் அமைச்சர்கள் மூலமாகக் கையாளப்படுவதே அரசின் கொள்கை சார்ந்த முடிவுகளை எடுக்க உதவும். அதுவே ஆரோக்கியமான அரசாங்கச் செயல்பாடாக இருக்க முடியும்.அதை விடுத்து, தங்களது துறைக்கான அரசியல் தலைமையாகிய அமைச்சர்களை ஓரங்கட்டிவிட்டு அதிகாரிகள் நேரடியாக பிரதமருடன் தொடர்புகொள்ளலாம், நடவடிக்கை எடுக்கலாம் என்றால் அமைச்சர்கள் எதற்காக என்ற கேள்வி எழுகிறது. அதிகாரிகள் தயாரிக்கும் கோப்புகளில் கையெழுத்துப் போடுவது மட்டும்தான் அமைச்சர்களின் வேலையா?

படிப்படியாக இது அதிகாரவர்க்க சர்வாதிகாரத்திற்கு இட்டுச்செல்வதாகிவிடக்கூடாது. இந்திய அரசமைப்பு சாசனமும், ஜனநாயக நடைமுறைகளும் அப்படிப்பட்ட அதிகார வர்க்க சர்வாதிகாரத்திற்கு வழியை அடைத்து வைத்திருப்பதுதான் பாதுகாப்பானது. அந்தப் பாதுகாப்பை உடைக்க பாஜக அரசு விரும்புவது ஏன்? அமெரிக்க பாணி அதிபர் ஆட்சி முறை இங்கே ஏற்படுத்தப்பட வேண்டும் என்று பாஜக அவ்வப்போது சொல்லிவந்திருக்கிறது. அது இந்தியாவின் பன்முகப் பண்பாட்டுச் சூழலுக்கு ஏற்றதல்ல என்பதால்தான், டாக்டர் அம்பேத்கர் தலைமையில் நாட்டின் அரசமைப்பு சாசனத்தை உருவாக்கியோர் தற்போதைய அமைச்சரவை முறையைப் பரிந்துரைத்தார்கள், நாடாளுமன்றமும் அதை ஏற்றது.

இதை உள்வாங்கிக்கொண்டு செயல்படுமா மோடி அரசு? அரசின் செயல்பாடுகளில் வேகம் இருக்குமானால் அதில் யாருக்கும் மாறுபாடு இருக்கப்போவதில்லை; ஆனால் அதில் ஜனநாயக விவேகம் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பையும் தள்ளுபடி செய்வதற்கில்லை.

(‘தீக்கதிர்’ ஜூன் 6, 2014 இதழில் ‘தெருவிளக்கு’ பகுதியில் வந்துள்ள Kumaresan Asakகட்டுரை.)

Related Posts