தென்மேற்கு பருவ மழை தொடங்கியது

தென்மேற்கு பருவ மழை தொடங்கியது

கேரளாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் வாரம் தென் மேற்கு பருவ மழை தொடங்கும். கடந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை முன்கூட்டியே தொடங்கியது. என்றாலும் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. இந்த ஆண்டு மழை தாமதமாகும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. அதன்படி நாளை அல்லது நாளை மறுநாள் மழை தொடங்குவதற்கான அறிகுறி தெரிவதாக வானிலை ஆய்வு மையம் கூறியது.

ஆனால் நேற்று மாலை முதல் கேரளாவின் பல பகுதிகளிலும் மழை கொட்ட தொடங்கியது. குறிப்பாக லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் பருவ மழை தொடங்கினால் கேரளாவில் மழை பெய்யும்.
அதற்கேற்ப நேற்றிரவு திருவனந்தபுரம், கொல்லம், கன்னூர், கோழிக்கோடு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. திருவனந்தபுரத்தில் 4.5 மி.மீ., கொச்சியில் 11 மி.மீ. அளவுக்கு மழை கொட்டியது. மேலும் மாநிலத்தின் வட பகுதியிலும், மலை கிராமங்களிலும் பலத்த மழை பெய்தது.

கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கினால் அது குமரி மாவட்டத்திலும் எதிரொலிக்கும். அதற்கேற்ப நேற்று காலை முதலே குமரி மாவட்டத்தின் அனைத்து கிராமங்களிலும் பரவலாக மழை கொட்டியது.நாகர்கோவிலில் 5.2, பாலமோரில் 5.8, இரணியல்–14, ஆனைக் கிடங்கு–2, குளச்சல்–24.4, குருந்தன்கோடு–15.2 மி.மீ. அளவுக்கு மழை பெய்தது. இது போல குமரி மாவட்ட அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது.

இதன்காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு இன்று காலை வினாடிக்கு 51 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் தற்போது 21.85 அடி தண்ணீர் உள்ளது. பெருஞ்சாணி அணைக்கும் வினாடிக்கு 41 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் 46.10 அடி தண்ணீர் உள்ளது.

குமரி மாவட்டத்தில் தென் மேற்கு பருவ மழை தொடங்கி இருப்பதால் விவசாயிகள் கன்னி பூ சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது விதை பாவும் பணி நடப்பதால் அதிக அளவு தண்ணீர் தேவை இல்லை என்பதால் பேச்சிப்பாறை அணை மூடப்பட்டது.

அதே நேரம் பெருஞ்சாணி அணை மட்டும் இன்று திறக்கப்பட்டது. இதில் இருந்து தண்ணீர் பாண்டியன் கால்வாய் மற்றும் என்.பி.சானலில் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி விவசாயம் செய்யும்படி பொதுப் பணித்துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியதும் குற்றாலத்தில் சீசன் தொடங்கும். அப்போது மேற்கு தொடர்ச்சி மலையில் மழை பெய்யும். அந்த தண்ணீர் குற்றாலம் அருவிகளில் கொட்டும்.

இப்போது தென் மேற்கு பருவ மழை தொடங்கியிருப்பதால் இன்னும் இரண்டு நாட்களில் குற்றாலம் அருவிகளில் வெள்ளம் கொட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts

error: Content is protected !!