போன ஒலிம்பிக்கில் நம்ம ஆளு வாங்கிய வெண்கலப் பதக்கம் வெள்ளி ஆனது
2012 லண்டன் ஒலிம்பிக்கில், 60 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தத்தில் வெள்ளிப்பதக்கம் வென்ற, ரஷ்ய வீரர் ஊக்கமருந்து பயன்படுத்தியது அம்பலமானதால், அவரது பதக்கம் பறிக்கப்பட்டுள்ளது. இதனால், அதே பிரிவில் வெண்கலம் வென்ற இந்திய வீரர் யோகேஸ்வர் தத்துக்கு வெள்ளிப்பதக்கம் கிடைப்பது உறுதியாகியுள்ளது.

ரஷ்ய தடகள வீரர்கள் ஊக்கமருந்து பயன்படுத்துவதற்கு அந்நாட்டு அரசும், தடகள சங்கமும் உடந்தையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையில், ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் ரஷ்ய படகு வீரர்கள் 22 பேருக்கு சர்வதேச ஒலிம்பிக் சங்கம் தடைவிதித்தது. அதன் தொடர்ச்சியாக 2012 ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற ரஷ்ய வீரர்கள் ஊக்கமருந்து பயன்படுத்தினார்களா என்ற கேள்வியுடன் ஏற்கனவே நடத்தப்பட்ட பரிசோதனை கோப்புகளை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஆய்வுக்கு உட்படுத்தியது.
அதன்படி 4 முறை உலகச்சாம்பியனும், இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றவருமான ரஷ்ய வீரர் பெஷிக் குடுகோவ், தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்தியதை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுதிப்படுத்தியுள்ளது. இதன் மூலம், 2012ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் 60 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தத்தில் பெஷிக் குடுகோவ் வென்ற வெள்ளிப்பதக்கம் பறிக்கப்பட்டுள்ளது. அதே பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்தியாவின் யோகேஸ்வர் தத்திற்கு வெள்ளிப்பதக்கம் கிடைப்பது உறுதியாகியுள்ளது.
ஒலிம்பிக்கில் பங்கேற்கும் ஒவ்வொரு வீரரிடமிருந்து சேகரிப்படும் ரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகள் 10 ஆண்டுகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய ரஷ்ய வீரர் பெஷிக் குடுகோவ் 2013-ம் ஆண்டு கார் விபத்தில் உயிரிழந்தபோதும், அவரிடமிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் மூலம், அவர் ஊக்கமருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது..


