யானை – விமர்சனம்!

யானை – விமர்சனம்!

லரின் விருப்ப உணவான பரோட்டாவில் வீச்சு பரோட்டா, கைமா பரோட்டா, கொத்து பரோட்டா, சில்லி பரோட்டா, சிக்கன் பரோட்டா, மட்டன் பரோட்டா, சிலோன் பரோட்டா, கேரளா பரோட்டா, ப்ரெட் பரோட்டா, மட்டன் கொத்து பரோட்டா,ஸ்பெஷல் பரோட்டா சாண்விட்ச், காய்கறி சேன்வெஜ் பரோட்டா, பொரிச்ச பரோட்டா, புதினா பரோட்டா, மரோக்கா பரோட்டா, சிக் பிரைட் சில்லி பரோட்டா, கொத்ஸு பரோட்டா, ஜாலர் பரோட்டா, வெஜ் பரோட்டா ப்ரை, கேரளா பால் பரோட்டா, வெஜ் கொத்து பரோட்டா, பீட்ருட் முசுமுசுக்கை பரோட்டா, கோஸ் பரோட்டா, டேஸ்டி சிலோன் பரோட்டா, முட்டை சீஸ் பரோட்டா, முள்ளங்கி பரோட்டா, ஸ்பினாச் பரோட்டா என்று ஏகப்பட்ட வகைகள் உண்டு. அது போல் தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஏகப்பட்ட டேஸ்டில் படம் வழங்கும் டைரக்டர்கள் உண்டு. ஆனால் ஹரி என்ற டைரக்டர் மட்டும் கொஞ்சமும் மாறாமல் ஒரே டைப்பில்லான மசாலா புரோட்டா மட்டுமே வழங்கி வருபவர். இப்போதும் சகல ரசிகர்களும் சலிப்பூட்டும் நோக்கில் ‘யானை’ என்றொரு சினிமாவை வழங்கி இருக்கிறார். இந்த யானை படத்துக்காக ரொம்ப மெனக்கெடாமல் தனது முந்தையை பரோட்டா.. ஸாரி படைப்புகளான தாமிரபரணி, வேல், பூஜை, வேங்கை ஆகிய படங்களில் இருந்து கொஞ்சம் கொஞ்சம் லவட்டி புது படமென்றெ பேரில் வழங்கி இருக்கிறார்.

கொஞ்சம் விளக்கமாக சொல்வதானால் ராமேஸ்வரத்தில் கூட்டு குடும்பத்தில் வழக்கம் போல் அண்ணன்கள், அண்ணிகள், அண்ணன் மகள் என கொஞ்சம் பெரிய, அதே சமயம் அன்பான குடும்பத்தினருடன் வாழ்ந்து வருகிறார் அருண் விஜய். அதே சமயம் அருணும் அவரது சகோதரர்களும் ஒரு வயிற்றுப் பிள்ளை இல்லை என்பதால் பாரபட்சமாக நடத்தப்படுகிறார் அருண். ஆனாலும் தனக்கு சோறுப் போட்டு வளர்த்த அந்தக் குடும்பத்துக்கு ஒரு பிரச்னை வரும்போது அருண் விஜய் என்ன செய்தார் என்பதை வழக்கமான ஹரி பாணியில் சொல்லி இருக்கிறார்கள்.

ஹரி படங்களுக்கே உரித்தான நாயகர்களின் பிம்பத்தை அப்படியே பிரதிபலித்து நடித்துள்ளார் நாயகன் அருண் விஜய். நிமிர்ந்த நடையும், மிடுக்கான தோற்றமும், அதிரடியான பஞ்ச் வசங்களும், நெகிழ்ச்சியான காட்சிகளில் கண்கலங்க வைக்கும் நடிப்பும் என ஹரி படத்தின் ஆஸ்தான நாயக பிம்பத்தை அப்படியே கண்முன் நிறுத்தியுள்ளார் அருண் விஜய். குறிப்பாக இவரின் உடல்வாகு அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல் கம்பீரமாக அமைந்துள்ளது படத்துக்கு பிளஸ் ஆக அமைந்துள்ளது. ராதிகா வாவ் சொல்ல வைக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் பிரியா பவானி சங்கர் வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தி சென்றுள்ளார். முந்தைய படங்களில் வரும் அதே நாயகி மெட்டீரியல் தான் என்றாலும் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை நன்றாகவே கையாண்டுள்ளார். நகைச்சுவை காட்சிகளுக்கு பொறுப்பேற்றுள்ள யோகி பாபு சில இடங்களில் சிரிக்க வைக்கவும் பல இடங்களில் சோதிக்கவும் செய்கிறார்.

தெலுங்கு, கன்னடம் மட்டுமின்றி தமிழ் சினிமாவின் கதைக்களங்களும் கதை சொல்லும் பாணியும் புதுமை அடைன்சு எங்கோ சென்று கொண்டிருக்கும் போது ஹரி இன்னும் ரெண்டு பாட்டு, நாலு பைட்டு, மூன்று சுமாரான நகைச்சுவைக் காட்சிகள் என வெந்த தோசையை மீண்டும் மீண்டும் திருப்பிப் போடுவது சோர்வு. அதிலும் வழக்கமான அரிவாள் வெட்டு குத்து., இறால் பண்ணை, செல்வாக்கான பெரிய குடும்பம் அவர்களின் பகையாளி, பகையைத் தீர்க்கும் ஹீரோ என ஹரி இதுவரை அரைத்த அதே மசாலாவை தனது மச்சானை வைத்து மீண்டும் ஒரு முறை அரைத்திருக்கிறார்.

ஜிவி பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்களை காட்டிலும் பின்னணி இசை மெர்சல். சென்டிமென்ட் காட்சிகளிலும், ஆக்ஷன் காட்சிகளிலும் சிறப்பான இசையை கொடுத்து அந்த காட்சிகளுக்கு உயிரூட்டி உள்ளார். ஒளிப்பதிவாளர் கோபிநாத் சிறப்பான முறையில் ஒளிப்பதிவு செய்து ராமேஸ்வரத்தை சுழன்று சுழன்று படம்பிடித்து அந்த ஊருக்கே நம்மை கூட்டி சென்றுள்ளார்.

ஆனாலும் முன்னரே சொன்னது போல் படத்தின் முதல் பாதியை கொஞ்சம் ஃபாஸ்டாக கொண்டு சென்றாலும், முன்னரே ஏகப்பட்டத் தடவை பார்த்த காட்சிகள் என்பதாலும், யூகிக்க முடிந்த திரைக்கதை என்பதாலும் பெரிய அளவில் சுவாரஸ்யம் தடுப்படவில்லை.

மொத்தத்தில் இந்த யானை – சின்னத்திரையில் வந்தால் கூட பார்க்க சலிப்பூட்டும் பட்டியலில் இடம் பிடித்த படம்

மார்க் 2.25/5

error: Content is protected !!