ராக்கெட்ரி நம்பி விளைவு- விமர்சனம்!

ராக்கெட்ரி நம்பி விளைவு- விமர்சனம்!

கல மனித வாழ்க்கையிலும் சோகங்கள் அல்லது அவமானங்கள் எதிர் கொண்டிருக்கும். அந்த அவமானம் அல்லது சோகங்கள் பெரும்பாலும் சில நாட்களில் மறந்தோ / மறைந்தோ போய் விடுவதே வாடிக்கை. ஆனால் சிலருக்கு ஏற்பட்ட பேரிடியான சம்பவங்கள் மட்டும் ஆறாத புண்ணாகி நிரந்தரமான ரணத்தைக் கொண்டிருக்கும். அப்படி ஒரு வலி கொண்டவரின் வாழ்க்கைக் கதையைத்தான் ‘ராக்கெட்ரி நம்பி விளைவு’ என்ற டைட்டிலில் மாதவன் திரைக்கதை, இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாக்கி வழங்கி பிரமிக்க வைத்திருகிறார் . டீ டோட்டலர் என்ற பேரெடுத்த சாக்லேட் பாய் ஹீரோ மாதவனுக்குள், இப்படி ஒரு இயக்குனர் இருக்கிறாரா என்று வியக்கவே வைக்கிறார் என்று சொன்னால் அது மிகையல்ல..!

கதை என்னவென்றால் இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஆரியபட்டா விண்ணில் செலுத்தப்படுவதற்கு முழுமையான காரணமாக இருந்தவரும் இந்தியாவின் செயற்கைக்கோள் தொலைக்காட்சி ஒளிபரப்பின் வளர்ச்சியில் முன்னோடியுமான விக்ரம் சாராபாயின் சிஷ்யர்களில் முக்கியமானவர்கள் நம்பி நாராயணன், அப்துல்கலாம். அதில் நம்பி, Liquid Fuel எஞ்சின் தயாரிப்பில் ஈடுபடுகிறார். அதே சமயம் அவருக்கு நாசா Fellowship வாய்ப்பு கிடைக்கிறது. அத்துடன் உலகின் தலை சிறந்த பேராசிரியர் Luigi Crocco-விடம் பயிற்சி பெறுகிறார். அவர் உழைப்பிற்கு நாசாவில் பெரும் சம்பளத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் தாய் நாட்டிற்காக இஸ்ரோவில் பணியாற்ற முடிவு செய்கிறார் நம்பி. கூடவே குறைந்த தொகையை கொண்டு எப்படியாவது ராக்கெட் எஞ்சினை கண்டுபிடிக்க வேண்டும் என்ற கனவுடன் இந்திய விஞ்ஞானிகளை அழைத்துக்கொண்டு பிரான்ஸ் செல்கிறார். அங்கு உருவாக்கப்படும் எஞ்சின் தொழில்நுட்பத்தை அந்நாட்டு விஞ்ஞானிகளுக்கே தெரியாமல் கற்றுக்கொண்டு இந்தியா திரும்பி பல ஆண்டு போராட்டத்திற்கு பின்பு 60 லட்சம் மட்டும் செலவழித்து Liquid Fuel எஞ்சினை கண்டுபிடித்து விடுகிறார். ஆக.,அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகள் பல நூறு கோடிகளை செலவழித்து கண்டுபிடித்ததை மிக மிக குறைந்த செலவில் சாத்தியமாக்கி சாதனை படைக்கிறார் நம்பி நாராயணன். அதனால் அகில உலக அளவில் பிரபலமாகி இஸ்ரோ அமைப்பின் இயக்குனராக வேண்டிய நம்பி நாராயணன் திடீரென தேசத் துரோகி என்ற குற்றச்சாட்டுடன் கைது செய்யப்படுகிறார். அதன் பின்னர் நடந்தது என்ன என்பதே ‘ராக்கெட்ரி’.

நாயகன் ரோலான நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் மாதவன் நடிக்காமல் வாழ்ந்து சாதித்து இருக்கிறார். குறிப்பாக தொப்பை, உடைந்த பல் கூட பர்ஃபெட்டாக அமைய மேடி செய்த சில பல விஷயங்களால் இந்த ரோலே மாடலாகி விட்டது. அதிலும் நம்பி நாராயணனின் இளமை தொடங்கி முதுமை வரையிலான காலக்கட்டத்தை உடல்மொழியிலும் கெட்டப்பிலும் காட்சிபடுத்தியதில் அபாரமாக மெனக்கெட்டிருக்கிறார். அவர் மனைவியாக நடித்திருக்கும் சிம்ரன் சரியான தேர்வு. விஞ்ஞானியின் மனைவியாக, தம் கணவனுக்குப் போராடுவது, அவரை தேற்றுவது, அக்கம் பக்கத்தினரின் விமர்சனங்களை எதிர்கொள்வது என காட்டும் பர்ஃபாம்மென்ஸூக்கு அவார்ட் கிடைத்தாலும் ஆச்சரியமில்லை.

மகளாக நடித்திருக்கும் மிஷாகோசல், மகன் ஷ்யாம்ரங்கநாதன், அப்துல்கலாமாக நடித்திருக்கும் குல்சன்குரோவர், சிபிஐ அதிகாரியாக வரும் கார்த்திக்குமார் உட்பட அனைவருமே தங்கள் பணியைச் சரியாகச் செய்து படத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறார்கள். நம்பிநாராயணனைப் பேட்டி எடுப்பவராக சூர்யா வருகிறார். அவரும் கிடைத்த கொஞ்சநேரத்தில் தன் நடிப்புத்திறமையைச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
.
ராக்கெட்ரி படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது இதன் வசனங்கள் தான். அதிலும் குறிப்பாக “ஒரு நாயை கொல்லனும்னு முடிவு பண்ணிட்டா, அந்த நாய்க்கு வெறிநாய்னு பெயர் வச்சா போதும், அதே மாதிரி ஒரு மனிதனை நீங்கள் கொல்லனும்னு முடிவு பண்ணிட்டா அவனுக்கு தேச துரோகினு பட்டம் கொடுத்தா போதும்”    ”திறமையானவர்களை மதிக்காத எந்த ஒரு நாடும் வல்லரசு ஆக முடியாது” என்பது போன்ற வசனங்கள் மிகவும் அர்த்தத்டன் எழுதப்பட்டு உள்ளன. வசனம் எழுதிய மாதவனுக்கு தனி ஷொட்டு.. சிர்சா தான்  ஒளிப்பதிவு செய்துள்ளார். அமெரிக்கா, பிரான்ஸ், ஸ்காட்லாந்து, சைபீரியா என பல நாடுகளை சுற்றி வருவது போல் இந்த படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டு உள்ளது. அதனை சிர்சா காட்சிப்படுத்தி உள்ள விதம் அருமை.

இது 2 மணி நேரம் 40 நிமிடம் ஓடக்கூடிய படமாக இருந்தாலும், எந்த இடத்திலும் படம் ரொம்ப நீளமா இருக்கிறதே என்கிற உணர்வை துளிகூட ரசிகர்கள் மனதில் எழாத வண்ணம் நேர்த்தியாக படத்தை எடிட் பண்ணி உள்ளார் எடிட்டர் பிஜித். மேலும் முதல் பாதியில் நிறைய ஸ்பேஸ் குறித்த தகவல்கள் இடம் பெற்றிருப்பதால் புரியாது என்றொரு முணுமுணுப்பு நிலவுகிறது. ஆனால் செல்போனில் முழித்து செல்போனிலேயே உறங்கும் இன்றைய ஜனங்களில் அநேகம் பேர் அன்றாடம் கேள்விப்பட்ட சேதிகளையே தேடித் தேடி கண்டெடுத்து சொல்லி இருப்பதைப் பாராட்டவே தோன்றுகிறது.

மொத்தத்தில் மசாலாத்தனம் துளியும் இல்லாத புது வகையான திரில்லர் கதையை அதுவும் டாக்குமெண்டரியாகி விடக் கூட ஸ்டோரியை அருமையான உணர்வுப்பூர்வமான திரைக்கதையுடன் பரபரப்புடன் வழங்கி இருக்கும் டைரக்டர் மாதவனுக்காக இன்னொரு முறைக் கூட காண தோன்றுகிறது..

மார்க் 4/5

error: Content is protected !!