June 7, 2023

எல்லோரும் அசெம்பளியில் ரியாக்ட் பண்ணுங்கோ!- 11 முதல்வர்களுக்கு பினரயி கடிதம்!

நாடெங்கும் பெரும் போராட்டத்தை கிளப்பிய மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றும்படி ஆலோசனை கூறும் கடிதங்களை 11 மாநில முதலமைச்சர்களுக்கு கேரள மாநில முதலமைச்சர் பினரயி விஜயன் இன்று அனுப்பினார்.

விஜயன் கடிதம் அனுப்பிய மாநில முதலமைச்சர்கள் பெயர்கள் இதோ:

அரவிந்த் கெஜ்ரிவால், ஹேமந்த் சோரன், உத்தவ் தாக்கரே, நிதீஷ் குமார், ஜக்மோகன் ரெட்டி, கமல்நாத், அமரிந்தர் சிங், நவீன் பட்நாயக், வி. நாராயணசாமி.

இதே போன்ற கடிதங்களை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் ராஜஸ்தான் முதலமைச்சர் ஜெலாட்டும் மற்ற மாநில முதல்வர்களுக்கு அனுப்பி உள்ளனர்.

ராகுலுக்கு அமித் ஷா சவால்

இதனிடையே குடியுரிமை திருத்த சட்டத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி படித்து விட்டாரா? அவர் படித்து விட்டால் என்னோடு விவாதம் நடத்த தயாரா என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று சவால் விடுத்தார்.

மத்திய குடியுரிமை திருத்த சட்டத்தை ராகுல் பாபா இன்னும் படிக்காவிட்டால் அவருக்கு இத்தாலி மொழியில் சட்டத்தை மொழிபெயர்த்து அனுப்பி வைப்பதாகவும் உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டம் மக்களை மத அடிப்படையில் பிரித்துப் பார்க்கிறது. இந்த சட்டத்தை உங்கள் கூட்டணி கட்சிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. உங்கள் கட்சியை சேர்ந்த முதலமைச்சர்கள் சிலர் கூட ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் நீங்கள் குடியுரிமை திருத்த சட்டத்தை கட்டாயம் படித்துப் பாருங்கள். உங்களுக்கு வேண்டுமானால் இந்தி மொழியில் குடியுரிமை திருத்தச் சட்ட த்தை அனுப்பி வைக்கிறேன் என்று காங்கிரஸ் பேச்சாளர் சுரஜ்வாலா டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார்.

மம்தா சாடல்

எதற்கெடுத்தாலும் பாகிஸ்தானை உதாரணமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இப்பொழுது கூறுகிறார். அவர் இந்திய பிரதமரா? அல்லது பாகிஸ்தான் தூதராக மாறிவிட்டாரா? நாங்கள் இந்தியாவை நேசிக்கிறோம்.

இந்திய பிரதமர் இந்தியாவின் பொருளாதார நிலை பற்றி மக்கள் அறிந்து கொள்ளக் கூடாது என்பதற்காக திசை திருப்பும் கருத்துக்களை வெளியிடுகிறார் என மம்தா பானர்ஜி இன்று குற்றம்சாட்டினார்.