உலக மனநல நாள் 2025: பேரழிவுகள் மற்றும் அவசரநிலைகளில் மனநலச் சேவைகளுக்கான அணுகல்!

உலக மனநல நாள் 2025: பேரழிவுகள் மற்றும் அவசரநிலைகளில் மனநலச் சேவைகளுக்கான அணுகல்!

வ்வோர் ஆண்டும் அக்டோபர் 10 அன்று உலக மனநல நாள் (World Mental Health Day) கடைபிடிக்கப்படுகிறது. மனநலம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதையும், மனநலப் பாதிப்புக்கு ஆளானவர்களுக்குப் பல வழிகளில் ஆதரவு அளிப்பதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனம் (WHO) மற்றும் உலக மனநல ஒன்றியம் (WFMH) ஆகியவற்றால் அறிவிக்கப்பட்ட 2025 ஆம் ஆண்டு உலக மனநல நாளின் அதிகாரப்பூர்வக் கருப்பொருள் “Access to Services: Mental Health in Catastrophes and Emergencies” (சேவைகளுக்கு அணுகல்: பேரழிவுகள் மற்றும் அவசரநிலைகளில் மனநலம்) என்பதாகும். இது மனநல உரிமத்தைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.

மனநல பாதிப்புகளின் தாக்கம்

உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) மதிப்பீட்டின்படி, உலகம் முழுவதும் சுமார் 100 கோடிக்கும் அதிகமான மக்கள், ஏதோ ஒரு மனநலப் பாதிப்பால் அவதிப்படுகிறார்கள். மேலும், உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு எட்டு நபர்களில் ஒருவர் மனநலக் கோளாறுகளால் பாதிக்கப்படுகிறார் என்று தெரிய வருகிறது.

பொதுவான மனநலப் பாதிப்புகள்:

  • பதற்றம்
  • மிகை அச்சம்
  • மனச் சோர்வு

உலக அளவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 5 விழுக்காட்டினர் மனச்சோர்வு பாதிப்பால் சிரமப்படுகின்றனர். இதில், ஆண்களை விட பெண்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் முதல் 90 வயதைக் கடந்தவர்கள் வரை மனநலப் பாதிப்புக்கு உள்ளாவது கவனிக்கத்தக்கதாகும். இந்தியாவில் மட்டும் சுமார் 18 கோடிக்கும் அதிகமான மக்கள் ஏதாவது ஒரு மனநலப் பாதிப்பால் பாதிக்கப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

உடல்நலம், மனநலம், சமூகச் சூழமைவு ஆகிய மூன்றும் சரியாக இருந்தால்தான் ஒருவர் மகிழ்ச்சியாக வாழவும், தமது ஆற்றலை முழுமையாக வெளிப்படுத்தவும், பணியாற்றும் இடங்களிலும் சமூகத்திலும் செயலூக்கத்துடன் பங்கேற்கவும் முடியும்.

விழிப்புணர்வின் அவசியம்

மனநலப் பாதிப்புகள் ஏழை, பணக்காரன், உயர்ந்தவர், தாழ்ந்தவர், ஆண், பெண், தொழிலாளி, முதலாளி, குழந்தை, முதியவர், ஆசிரியர், மாணவர் எனப் பால், இனம், வயது, தொழில் பாகுபாடு இன்றி ஏற்படுகிறது.

இருப்பினும், மனநலப் பாதிப்புக்குக் காரணம் செய்வினை, கெட்ட ஆவி, பேய், பிசாசு, பில்லி சூனியம் போன்றவையே என்ற மூடநம்பிக்கைகளாலும், போதிய விழிப்புணர்வு இல்லாததாலும் பலருக்குச் சரியான சிகிச்சையும் பராமரிப்பும் கிடைப்பதில்லை. மனவியல், உளவியல் பிரச்சினைகளால் துன்புறுவோரை மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்வதற்குப் பதிலாக, கோவில்கள், நண்பர்கள், பெரியவர்கள், பேய் ஓட்டுபவர் என ஒவ்வொருவரிடமும் அழைத்துச்சென்று காலத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறோம்.

மனநலமும் உடல்நலமும்

மனநலமும், உடல்நலமும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. மனதில் ஏற்படும் கவலை அல்லது மனச்சோர்வு ஆழ்மனதில் பாதிப்பை ஏற்படுத்தி, அது உடலையும் பாதிக்கிறது. இதனால், இரத்த அழுத்தம் ஏற்படுவது, சரியாக உணவு எடுத்துக்கொள்ளாமல் போவது போன்ற உடல்நலத்தைப் பாதிக்கும் காரணிகளாக இது மாறிவிடுகிறது. எனவே, மனநலம் உடல்நலனுக்கு வழிவகுக்கும் என்பதை மறக்கக் கூடாது.

நாள்தோறும் உடற்பயிற்சி செய்தாலே மனநலம் சார்ந்த பாதிப்புகள், பிரச்னைகளைத் தவிர்க்கலாம். ஏனென்றால், உடற்பயிற்சி உடலுக்கு ஆரோக்கியம் தருவது மட்டுமில்லாமல், மனதில் கவலை, சோர்வு ஏற்படுவதையும் தடுக்கிறது. சரியான நேரத்தில் சரியான சிகிச்சையையும், போதுமான விழிப்புணர்வையும் வழங்குவதன் மூலம் உலகளவில் மனநலப் பாதிப்புகளின் சுமையைக் குறைக்க முடியும்.

நிலவளம் ரெங்கராஜன்

Related Posts