உலக சிறுநீரக தினம்: இந்தியாவை கபளிகரம் செய்யும் ‘அமைதி அரக்கன்’!

உலக சிறுநீரக தினம்: இந்தியாவை கபளிகரம் செய்யும் ‘அமைதி அரக்கன்’!

சிறுநீரக ஆரோக்கியம் என்பது பெரும்பாலும் தீவிரமான அறிகுறிகள் தோன்றும் வரை பலராலும் கவனிக்கப்படாமல் விடப்படும் ஒரு விஷயமாகவே இருக்கிறது. ஆனால், இந்தியாவில் நாள்பட்ட சிறுநீரக நோய் (CKD) என்பது அமைதியாகப் பரவி வரும் ஒரு பெரும் பொது சுகாதாரப் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தின் இரண்டாவது வியாழக்கிழமை ‘உலக சிறுநீரக தினம்’ கடைபிடிக்கப்படுகிறது. இந்த 2026-ஆம் ஆண்டில், வெறும் விழிப்புணர்வோடு நின்றுவிடாமல், 30 வயதிலிருந்தே பரிசோதனைகளைத் தொடங்குவது காலத்தின் கட்டாயமாக மாறியுள்ளது.

2026-ஆம் ஆண்டுக்கான அதிகாரப்பூர்வ தீம் (Theme):

“Kidney Health for All – Caring for People, Protecting the Planet” (தமிழில்: “அனைவருக்கும் சிறுநீரக ஆரோக்கியம் – மக்களைப் பராமரித்தல், கிரகத்தைப் பாதுகாத்தல்”)

இந்த தீம் 20 ஆண்டுகளாக (2006 முதல்) நடைபெற்று வரும் உலக சிறுநீரக தினத்தின் சிறப்பு ஆண்டைக் குறிக்கிறது. இது சிறுநீரக ஆரோக்கியத்தை தனிநபர் அளவில் மட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் மற்றும் கிரக ஆரோக்கியத்துடன் இணைத்து பார்க்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.

ஏன் இது ‘சைலண்ட் கில்லர்’?

மற்ற நோய்களைப் போலல்லாமல், சிறுநீரக நோய் எந்தவித அறிகுறியும் இல்லாமல் பல ஆண்டுகள் உடலில் மறைந்திருந்து பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. அறிகுறிகள் வெளியே தெரியும்போது, சிறுநீரகங்கள் ஏற்கனவே கணிசமான அளவில் சேதமடைந்திருக்கக்கூடும் என்கிறது ‘ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மெடிசின்’ (Johns Hopkins Medicine) ஆய்வுத்தளம்.

சமீபத்தில் ஒரு மளிகைக் கடைக்காரருக்கு நேர்ந்த சம்பவம் இதற்கு ஒரு சாட்சி. பல ஆண்டுகளாகச் சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தத்தைக் கண்டு கொள்ளாமல் இருந்த அவருக்கு, ஒரு நாள் மூச்சுத்திணறல் ஏற்பட்டபோதுதான் சிறுநீரகம் முழுமையாகச் செயலிழந்தது தெரியவந்தது. அவருக்குத் தகுந்த டோனர் கிடைக்காத நிலையில், வாரம் மூன்று முறை டயாலிசிஸ் செய்வதே வாழ்க்கையாகிப் போனது.

இந்தியாவைச் சூழ்ந்துள்ள ஆபத்து: அதிரவைக்கும் புள்ளிவிவரங்கள்

இந்தியாவில் சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை கவலைக்குரிய வகையில் உயர்ந்து வருகிறது.

  • 16 சதவீத உயர்வு: 15 வயதுக்கு மேற்பட்டவர்களிடையே சிறுநீரக நோயின் தாக்கம் கடந்த பத்தாண்டுகளில் 11 சதவீதத்திலிருந்து 16 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது.

  • நீரிழிவுத் தலைநகரம்: உலகிலேயே அதிக அளவு நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்தியாவில்தான் இருக்கிறார்கள். இவை இரண்டும் சிறுநீரகத்தின் வடிகட்டும் அலகுகளான ‘குளோமருலி’களை (Glomeruli) அரித்துச் சிதைக்கின்றன.

  • நகரமயமாக்கல் சாபம்: உடலுழைப்பற்ற வாழ்க்கைமுறை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளின் ஆதிக்கம் இந்த நோயை இளைஞர்களிடமும் கொண்டு சேர்த்துள்ளது.

தண்ணீர் பஞ்சம்: மருத்துவ நெருக்கடியின் புதிய முகம்

சிறுநீரக நோய் என்பது தனிமனித ஆரோக்கியத்தோடு முடிந்து விடுவதில்லை; அது நாட்டின் வளத்தோடும் தொடர்புடையது. ஒரு சாதாரண மனிதனின் சிறுநீரகம் சில லிட்டர் தண்ணீரிலேயே ரத்தத்தைச் சுத்திகரிக்கும். ஆனால், அது செயலிழந்து டயாலிசிஸ் செய்யும்போது ஒரு முறைக்கு நூற்றுக்கணக்கான லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் தேவைப்படுகிறது. ஒரு நகரில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டால், அந்த ஊரின் டயாலிசிஸ் மையங்கள் மூடப்படும் அபாயம் உள்ளது. இது நோயாளிகளை 50 கிலோமீட்டர் வரை அலைய வைக்கும் ஒரு ‘மருத்துவப் பேரிடர்’.

வருமுன் காக்கும் வழிகள்:

  1. ஆரம்பக்காலப் பரிசோதனை: சர்க்கரை நோய், உடல் பருமன் உள்ளவர்கள் 30 வயதிலிருந்தே ‘கிரியேட்டினின்’ மற்றும் சிறுநீர் பரிசோதனை செய்வது கட்டாயம்.

  2. உணவுக் கட்டுப்பாடு: உப்பைக் குறைத்தல், துரித உணவுகளைத் தவிர்த்தல் மற்றும் பழங்களைச் சேர்த்துக் கொள்வது.

  3. தாய்-சேய் ஆரோக்கியம்: குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகளுக்குப் பிற்காலத்தில் சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்பதால், கர்ப்ப கால ஊட்டச்சத்தில் கவனம் தேவை.

  4. நீரிழப்புத் தவிர்ப்பு: வெயிலில் உழைக்கும் தொழிலாளர்கள் போதுமான அளவு தண்ணீர் மற்றும் நிழல் வசதியைப் பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.

சிறுநீரகம் செயலிழந்த பின் டயாலிசிஸுக்காக அலைவதை விட, வரும் முன் காப்பதே புத்திசாலித்தனம். இந்த உலக சிறுநீரக தினத்தில் நமது உறுதிமொழி ஒன்றாகவே இருக்கட்டும்: “முன்கூட்டியே பரிசோதிப்போம், சிறுநீரகத்தைக் காப்போம்!”

Related Posts