கெணத்த காணோம்: கதை இருக்கு… ஆனா..!?
‘ஒரு கிடாயின் கருணை மனு’ , ‘சத்திய சோதனை’ ற அழகான படைப்புகளின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சுரேஷ் சங்கையா, மீண்டும் ஒரு அழுத்தமான கிராமத்து வாழ்வியலை ‘கெணத்த காணோம்’ மூலம் சொல்ல முயன்றிருக்கிறார். தென் மாவட்ட மக்களின் வன்முறையை மட்டுமே காட்டும் சினிமாவிற்கு மத்தியில், அவர்களின் வெள்ளந்தியான குணத்தையும், ஒரு கிணற்றுக்காக அவர்கள் படும் பாட்டையும் நகைச்சுவையாகச் சொல்ல நினைத்த இயக்குநரின் எண்ணம் பாராட்டுக்குரியது. ஆனால், அந்தப் பாராட்டுகளைப் பெற அவர் இன்று நம்மோடு இல்லை என்பதுதான் பெரும் சோகம்.
கதைக்களம்
ராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரு குக்கிராமம். குடிக்க ஒரு சொட்டுத் தண்ணீர் இல்லாமல் தவிக்கும் அந்த ஊர் மக்கள், ஒருவழியாகத் தண்ணீர் ஓட்டம் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கிறார்கள். அது நம்ம ஊர் யோகி பாபுவின் வீடு. ஊர் நன்மைக்காகத் தன் வீட்டை விட்டுக் கொடுக்கச் சம்மதிக்கும் தாத்தா, “போர் போடக் கூடாது, கிணறுதான் வெட்டணும்” என நிபந்தனை விதிக்கிறார். ஊரே திரண்டு கிணறு வெட்டும்போது, உள்ளே தண்ணீருக்குப் பதில் ‘டைனோசர்’ எலும்புகள் கிடைக்கின்றன. அடுத்த நிமிடம் தொல்லியல் துறை ஊருக்குள் முகாமிடுகிறது. ஊரையே காலி செய்யச் சொல்லி அதிகாரிகள் மிரட்ட, தன் மண்ணையும் மக்களையும் காப்பாற்ற யோகி பாபு என்ன செய்தார் என்பதுதான் கெ.கா படக் கதை.
நடிப்பு: எடுபடாத யோகி பாபு!
கோலிவுட்டின் ‘செட் பிராப்பர்ட்டி’ யோகி பாபு, இந்தப் படத்தில் பெரும் சொதப்பல். ஹீரோ என்பதால் காமெடி செய்யக் கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு நடித்திருக்கிறாரோ என்னவோ, படத்தில் அவர் வரும் காட்சிகள் எதுவுமே எடுபடவில்லை. அந்த ஒன்றிரண்டு ஒன்லைன் பஞ்ச் வசனங்களும் சுத்தமாக வொர்க்-அவுட் ஆகவில்லை. ஏதோ கால்ஷீட் நெருக்கடியிலோ அல்லது மனமில்லாமலோ நடித்தது போலத் தெரிகிறது. படத்தின் கடைசி சில நிமிடங்கள் தவிர, மற்ற நேரங்களில் யோகி பாபுவின் நடிப்பு படத்திற்கோ, இந்தப் படம் அவருக்கோ எந்தப் பலனையும் தரவில்லை.
நாயகியாக வரும் லவ்லின் சந்திரசேகர், ராமநாதபுரத்து வெயிலில் வாடிப் போன மல்லிகையாக வந்து போகிறார். அவருக்குப் பெரிய வேலையே இல்லை. தொல்லியல் அதிகாரியாக வரும் ரைச்சல் ரபெக்கா, உதவியாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் ஓரளவுக்குத் தப்பித்து விடுகிறார்கள். கலெக்டராக வரும் ஜார்ஜ் மரியன் பாத்திரம் ஏனோ ஒட்டவே இல்லை. யோகி பாபுவின் அக்கா, ஊர் தலைவர் என மற்றவர்கள் அந்த ஊர் மக்களாகவே வந்து போகிறார்கள்.
தொழில்நுட்பம் மற்றும் இயக்கம்
ஒளிப்பதிவாளர் தியாகராஜன் மட்டும்தான் இந்தப் படத்தில் உண்மையாக உழைத்திருக்கிறார். அந்தப் புழுதி மண், தண்ணீர் இன்றித் தவிக்கும் மக்களின் முகம் என எதையும் மறைக்காமல் அப்படியே காட்டியிருப்பது பலம். நிவாஸ் கே. பிரசன்னாவின் இசையில் பாடல்கள் எதுவுமே மனதில் நிற்கவில்லை.
இயக்குநர் சுரேஷ் சங்கையா 2042-ல் கதையைத் தொடங்குவது போல ஒரு பேண்டஸி எதிர்பார்ப்பைக் கொடுத்துவிட்டு, பின்னோக்கி இழுத்துச் செல்வது சுவாரசியம். ஒரு கலெக்டரால் இவ்வளவு செய்ய முடியுமா என வியக்க வைத்தாலும், சரியான நடிகர்களைத் தேர்வு செய்யாததும், பலவீனமான திரைக்கதையும் படத்தை ஒரு கட்டத்திற்கு மேல் நகர விடாமல் முடக்கி விடுகிறது.
சுருக்கமாகச் சொன்னால்: நல்ல கதையைத் தப்பான ஆட்களிடம் கொடுத்துக் கெடுத்துவிட்டார்கள். உண்மையில் ‘கெணத்த’ மட்டும் இல்லை, படத்தையுமே காணோம்!
மார்க்: 2.25 / 5


