உலக பிரெய்ல் தினம்: ஒரு தோல் கருவி குத்திய கண்ணில் உதித்த பேரொளி!
கண்கள் என்பது வெறும் கருவிதான், உண்மையான பார்வை மனதில்தான் இருக்கிறது. புத்தரும் காந்தியும் தங்கள் கால்களால் உலகைப் பார்த்தவர்கள்; பயணங்கள் தந்த அனுபவத்தால் வாழ்வை அளந்தவர்கள். பார்ப்பதற்குக் கண்கள் ஒரு கருவி மட்டுமே, கண்கள் இல்லாமலும் பார்க்கவும், படிக்கவும் இயலும் என்பதைத் தன் அறிவாலும் மனதாலும் நிரூபித்துக் கொண்டிருப்பவர்களைப் போற்றும் நாளே இந்த உலக பிரெய்ல் தினம்.
1. ஒரு விபத்தும்… ஐந்து வயது இருளும்…
1809 ஜனவரி 4-ல் பிரான்ஸின் ஒரு சின்ன கிராமத்தில் லூயி பிரெய்ல் பிறந்தார். அவரது தந்தை தோல் பொருட்களைத் தயாரிப்பவர். மூன்று வயதில் தந்தை பயன்படுத்திய கூர்மையான தோல் தைக்கும் கருவி லூயியின் ஒரு கண்ணில் குத்தியது. அந்தச் சின்ன விபத்து தொற்று ஏற்பட்டு மற்ற கண்ணையும் பாதிக்க, ஐந்து வயதிலேயே லூயியின் உலகம் முழு இருளில் மூழ்கியது. இந்தத் தனிப்பட்ட துயரம்தான் பிற்காலத்தில் உலகெங்கும் உள்ள பார்வையற்றவர்களின் வாழ்வில் ஒளியேற்றும் உலக பிரெய்ல் தினத்திற்கு அடிப்படையானது.

2. ராயல் இன்ஸ்டிட்யூட் முதல் ‘நைட் ரைட்டிங்’ வரை
பாரிஸில் உள்ள ‘Royal Institute for Blind Youth’ பள்ளியில் சேர்ந்த லூயி, அங்கு மேடான எழுத்துக்கள் கொண்ட 14 புத்தகங்கள் இருந்ததைக் கண்டார். அவை கனமாகவும் வாசிக்கக் கடினமாகவும் இருந்தன. அப்போதுதான், பிரெஞ்ச் ராணுவக் கேப்டன் சார்லஸ் பார்பியர் இரவில் வெளிச்சமின்றித் தகவல் பரிமாற உருவாக்கிய ‘Night Writing’ (12 புள்ளிகள்) முறை பற்றி அறிந்தார்.
தனது 15-ஆம் வயதில் (1824), அந்த 12 புள்ளிகளை 6 புள்ளிகளாகச் சுருக்கி, 63 விதமான சேர்க்கைகளில் எழுத்துக்கள் மற்றும் எண்களை உருவாக்கினார் லூயி. தனது தன்னம்பிக்கையால் அவர் உருவாக்கிய இந்த ‘பிரெய்ல்’ கற்றல் முறையை நினைவுகூரவே, ஐக்கிய நாடுகள் அவை ஜனவரி 4-ஆம் தேதியை உலக பிரெய்ல் தினமாக அறிவித்தது.
3. இலக்கியப் பார்வையும் ஆன்மாவின் சாளரமும்
“கண்கள் ஆன்மாவின் சாளரம்”. மனிதக் கண்கள் சுமார் 576 மெகாபிக்சல் திறன் கொண்டவை; அதனால்தான் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் கண்கள் இன்றும் பாதுகாக்கப்படுகின்றன. இலக்கியங்கள் கண்களைக் காதலோடும் வீரத்தோடும் பிணைக்கின்றன. வள்ளுவர், “கண்டார் மகிழ் செய்யும் காதல்” என்கிறார். கம்பர் கண்களைக் கூர்மையான வேலுக்கு ஒப்பிடுகிறார். ‘குக்கூ’ படத்தில் யுகபாரதி எழுதியது போல, “ஆகாசத்த நான் பாக்குறேன்” என்று மனக்கண்ணால் உலகை ரசிக்கும் வல்லமை பார்வையற்றோருக்கு உண்டு என்பதை உலக பிரெய்ல் தினம் உலகுக்குச் சாற்றுகிறது.
4. அங்கீகரிக்கப்படாத தியாகமும் பேன்தியான் கௌரவமும்
லூயி பிரெய்லிக்குச் சின்ன வயதிலிருந்தே தீவிரமான சுவாசக் கோளாறு இருந்தது. 16 ஆண்டுகள் அந்த நோயுடன் போராடிய அவர், 1852-ல் தனது 43-வது வயதில் காலமானார். அவர் மறைந்து 100 ஆண்டுகளுக்குப் பின் (1952), அவரது உடல் பாரிஸின் மிக உயரிய பேன்தியான் (Pantheon) நினைவகத்தில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இத்தகைய மேதையின் தியாகத்தைப் போற்றுவதே உலக பிரெய்ல் தினத்தின் கடமையாகும்.
5. தன்னம்பிக்கை நாயகர்களின் தனித்திறன்
பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் அசாத்திய திறமைசாலிகள். அவர்களுக்குச் செவித்திறன் அதிகம்; White cane stick இல்லாமலே பழகிய இடங்களில் நடப்பார்கள். பிரெய்ல் டைப்ரைட்டிங் முதல் மொபைல் போன் கையாளுதல் வரை அவர்கள் கில்லடிகள். எதையும் தேடும்படி இருக்கக் கூடாது என்று ஒவ்வொரு பொருளையும் சரியான இடத்தில் வைப்பதில் அவர்கள் நமக்கு முன்னோடிகள். இவர்களின் தன்னம்பிக்கையைக் கொண்டாடும் நாளே இந்த உலக பிரெய்ல் தினம்.
6. இன்றைய சவால்களும் விழிப்புணர்வும்
அறிவியல் வளர்ந்தும், பொது இடங்களில் (உணவகங்கள், வங்கிகள்) இன்னும் உரிய வசதிகள் இல்லாதது வேதனைக்குரியது. 25 கோடிக்கும் அதிகமானோர் பார்வைக் குறைபாட்டுடன் வாழும் சூழலில், 30-40 செ.மீ தூரத்தில் வைத்துப் படிக்க முடியாவிட்டால் கவனிக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வை இந்த உலக பிரெய்ல் தினம் ஏற்படுத்துகிறது.
மொத்தத்தில் லூயி பிரெய்ல் கண்டறிந்த கற்றல் முறை, இன்று ஏடிஎம் முதல் காலண்டர் வரை பார்வையற்றவர்களைச் சுதந்திரமாக வாழ வைத்துள்ளது. அந்தப் புரட்சியாளரின் பிறந்தநாளான ஜனவரி 4, உலக பிரெய்ல் தினத்தில், நாம் அனைவரும் அவர்களின் சம உரிமைக்காக ஒன்றிணைவோம்!
வாத்தீ அகஸ்தீஸ்வரன்


