’வித் லவ்’ – விமர்சனம்!
முதல் காதல் – அது சொல்லாமலே புரியும் ஒரு மொழி. கண்கள் தற்செயலாக சந்திக்கும் அந்த ஒரு நொடியில், இதயம் தன் வேகத்தை மறந்துவிடும். பலருக்கும் கை கூடாமல் போயிருக்கும் அந்த அழகான உணர்வுகளை, வலிமிகுந்த அனுபவங்களாகச் சொல்லாமல், மகிழ்ச்சியோடு கடந்து செல்லக்கூடிய இனிமையான தருணங்களாக வெள்ளித் திரையில் ஃப்ரண்ட்லி டோனுடன் கொண்டு வந்திருக்கிறார்கள் ‘வித் லவ்’ படக்குழுவினர். அந்த வகையில் இரண்டரை மணி நேரம் இளமை துள்ளலோடு ஒரு ஹேப்பி பயணத்தை இந்தப் படம் உறுதி செய்கிறது.
கதை
இன்றைய ‘Gen Z’ இளைஞனாக வலம் வருகிறார் சத்யசீலன் (அபிஷன் ஜீவிந்த்). சொந்த வீடு, கைநிறைய சம்பளம் என ஜாலியாக இருக்கும் அவருக்கு, எப்படியாவது திருமணம் செய்து வைக்க வேண்டும் எனத் துடிக்கிறார் அவர் அக்கா. விருப்பமே இல்லாமல் பெண் பார்க்கச் செல்லும் சத்யாவிற்கு, இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்ஸரான மோனிஷாவை (அனஸ்வரா ராஜன்) அறிமுகம் செய்கிறார்கள்.
இருவரும் பேசத் தொடங்கும்போது, தாங்கள் ஒரே பள்ளியில் படித்தவர்கள் என்பது தெரியவருகிறது. தங்கள் பள்ளிப்பருவக் காதல் கதைகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்கிறார்கள். சத்யா, தான் காதலித்த அனிஷாவிடம் தன் காதலைச் சொல்லத் தவறியதையும், மோனிஷா தனக்கு பிடிந்த பாலாஜியைப் பிரிய நேரிட்டதையும் கூறுகிறார்கள். இறுதியில் மோனிஷா ஒரு ஐடியா கொடுக்கிறார்; “நாம ரெண்டு பேரும் சேர்ந்து நம்ம பழைய காதலர்களைக் கண்டுபிடிச்சு, நம்ம மனசுல இருந்ததைச் சொன்னா என்ன?”. இந்தத் தேடல் பயணமே ‘வித் லவ்’ படத்தின் கதை!
இயக்கம் மற்றும் திரைக்கதை
இயக்குநர் மதன், இளைஞர்களை கவர்வது மட்டுமின்றி மூத்தோர்களின் நினைவலையை தூண்டும் விதத்திலும் படத்தில் எமோஷனல் காட்சிகளும், காமெடியும் சரிவிகிதத்தில் கலந்து வழங்கி பலே சொல்ல வைத்து விட்டார். ஒரு வாய்ப்பைத் தவறவிட்டோமே என்ற கனத்தை, நண்பர்களுடனான கலகலப்பான உரையாடல்கள் மூலம் பேலன்ஸ் செய்திருப்பது சிறப்பு. குறிப்பாக, இன்ஸ்டாகிராமில் ஒருவரைத் தேடுவதை ‘ஸ்டாக்கிங்’ (Stalking) என்று சொல்லாமல், அதன் பின்னாலுள்ள காதலை விளக்கும் காட்சி முதிர்ச்சியான அணுகுமுறை.
நடிப்பு (Performances)
-
அபிஷன் ஜீவிந்த்: ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ மூலம் டைக முத்திரை பதித்த இவர், இந்தப் படத்தில் ஹீரோவாக பாஸ் மார்க் வாங்கிவிடுறார். இது அவருக்கு முதல் படம் என்றாலும் காதல், ஆசை, ஏக்கம், வருத்தம்,புறக்கணிப்பு, வலி, அவமானம், தாழ்வுணர்ச்சி, கோபம்,பொறாமை என சகல விதமான பாவங்களையும் உரிய அளவில் வெளிப்படுத்தி கர்.
-
அனஸ்வரா ராஜன்: துறுதுறுப்பான மோனிஷாவாகப் பொருத்தமான தேர்வு. தமிழ் உச்சரிப்பில் கொஞ்சம் மலையாள வாடை அடித்தாலும், தனது எதார்த்தமான நடிப்பால் அதைக் கடக்க வைக்கிறார்.
-
காவ்யா அனில்: அனிஷாவாக வரும் இவரின் நடிப்பு படத்தின் ஹைலைட். இரண்டாம் பாதியில் கொஞ்ச நேரமே வந்தாலும், ஏக்கத்தையும் மகிழ்ச்சியையும் கண்களாலேயே கடத்தி ஸ்கோர் செய்கிறார்.
- மேலும் நாயகனின் தந்தையாகத் தத்ரூபமான நடிப்பை வழங்கியுள்ள தேனி முருகன், பள்ளி ஆசிரியராக மிளிர்ந்துள்ள சரவணன் மற்றும் நாயகனின் உற்ற நண்பர்களாகக் கலகலப்பைக் கூட்டியிருக்கும் ஹரிஷ் குமார், சச்சின் நாச்சியப்பன், சித்தார்த் ஆகியோரின் பங்களிப்பு திரைக்கதைக்கு அசாத்தியமான உயிரோட்டத்தைத் தந்துள்ளன. அதேபோல், நாயகியின் தோழிகளாகத் தோன்றும் டிம்பிள் கண்ணா, சாச்சனா மற்றும் அக்காவாகப் பாசத்தை வெளிப்படுத்தியிருக்கும் ஆர்.ஜே.ஆனந்தி எனப் படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு துணைக் கதாபாத்திரமும், தங்களுக்குக் கிடைத்த சிறிய கால அவகாசத்திலும் தங்களின் இருப்பை மிக அழுத்தமாகப் பதிவு செய்து, கதையின் ஓட்டத்திற்குத் தேவையான பலமான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்துள்ளன.
தொழில்நுட்பம் (Technical)
-
ஷான் ரோல்டன்: வழக்கம் போல பின்னணி இசையில் மேஜிக் செய்திருக்கிறார். கதையோடு ஒன்ற வைக்கும் மறந்து போச்சே மனசு மரத்துப்போச்சே, அடடா இவளா என் பக்கத்துல ?, ஐயோ காதலே போன்ற பாடல்கள் படத்திற்குப் பெரிய பலம்.
-
ஷ்ரேயாஸ் கிருஷ்ணா: ஒளிப்பதிவு வண்ணமயமாகவும், உயிரோட்டமாகவும் இருக்கிறது.
-
சுரேஷ் குமார்: கச்சிதமான எடிட்டிங் மூலம் படத்தை எங்கும் தொய்வில்லாமல் கொண்டு சென்றிருக்கிறார்.
குறை
* ஹீரோ ஸ்மோக் பண்ணும் காட்சிகள் அதிகமாக இருப்பது உறுத்தல்
* இடைவேளைவரையிலான காட்சி அமைப்புகளை இன்னும் அக்கறைக் காட்டி இருக்கலாம்
புது டைரக்டர் மதனின் இந்த ‘வித் லவ்’, இன்றைய இளைஞர்கள் மட்டுமின்றி, தங்கள் பள்ளிப்பருவக் காதலை நினைத்துப் பார்க்கும் அனைவரும் ரசிக்கக்கூடிய ஒரு கம்ப்ளீட் என்டர்டெய்னர். தாராளமாகத் தியேட்டருக்குச் சென்று ஒருமுறை ‘ஹேப்பியா’ பார்க்கலாம்!
மார்க்: 4/5


