விவசாயிகளை கருணை கொலை புரிய சட்டம் இயற்றுங்கள் எமது அறிவுசார்ந்த மக்களே.!

விவசாயிகளை கருணை கொலை புரிய சட்டம் இயற்றுங்கள் எமது அறிவுசார்ந்த மக்களே.!

விவசாயிகள் நிலைமையை புதிய தலை முறையில் விவசாயிகளின் எதிர்காலம், தற்கொலை குறித்து ஒரு தெளிவான பதிவை 02.01.2016 அன்று நேர்பட பேசி சொன்னார்கள் .இதில் அதிர்ச்சி அளித்த விஷயம் தனியார் நிதி நிறுவனங்கள் விவசாயிகளுக்கு கடன் தரும்போது அவர்கள் கடனுக்கு உத்தரவாதமாக விவசாயி இறந்தால் நிதி நிறுவனத்துக்கு கடன் பணம் வசூலாக இன்சூரன்ஸ் செய்து வருகின்றனர். தனது சாவுக்கு அடுத்தவன் பாடை காட்ட ஆகும் செலவை ,இப்பணத்தை விவாசியிகளே செலுத்தி வருகின்றனர்.

farmer jan 5

இந்த நிதி நிறுவனங்கள் விவசாயிகள் கடனை அடைக்க முடியாது என்பதையும், ஒன்று நொந்து நொந்து மாரடைப்பாலும் இல்லை என்றால் விஷம் சாப்பிட்டும் இறப்பதை முன்கூட்டியே உறுதி செய்துள்ளனர்.இது பல வருடங்களாக நடந்துவருகிறது. இந்தியாவில் விவசாயிகளின் மேல் அக்கறை உள்ள மாநிலங்களில் தமிழகம் 20 வது இடத்தை நோக்கி நகர்ந்துள்ளது .40 சதவீத உணவுப்பொருள் உற்பத்தியில் இருந்த தமிழகம் 6 சதவீத உணவு பொருள் உற்பத்திதான் ஆகிறது என அரசுக்கும், மக்களுக்கும் தெரியுமா?

தண்ணீரை தர மறுக்கும் அண்டை மாநிலங்கள் அரிசி தர மறுக்காது என என்ன நிச்சயம் .உங்களுக்கு உணவு தந்தவன் இன்று கழுத்தளவு தண்ணிரில் நின்றும் ,மேலாடை இன்றியும் ,எலியை வாயில் கவ்வியும் பேட்டி அளிக்கும்போது இந்த செய்தியை வேடிக்கை மனநிலையில் பார்த்து சாதாரணமாக கடந்து போகும் மக்களை நினைத்தால் மனது வலிக்கிறது .
எனது இனிய தமிழ் மக்களே அறிவு சார்ந்த சமூகமே விவசாயிக்கு இலவசம் வேண்டாம் .அவன் தனது விளைபொருளை விற்று தனது குடுமபம் சாகாமல் சாப்பிட அனைவரும் சேர்ந்து ஒரு வழிமட்டும் காண்பியுங்கள்.
வேளாண் பெருக்கம் என ஒரு கூட்டம் ஆய்வுகள் பல செய்து விலையில்லா விதைகளை அழித்துவிட்டனர் .வேளாண் ஆய்வு என்றபெயரில் விலையில்லா எங்களின் உரங்களை கம்பெனி களுக்கு சாதகமாகா உரம்,பூச்சி கொல்லி மருந்து என மண்ணையும் மலடாக்கி ,விவசாயிகளையும் நிர்மூலம் ஆக்கிவிட்டனர் .நீர்நிலைகளை காக்க வேண்டியவர்களே அதை அழித்து ,அது குறித்து கேட்போரை தேச விரோதிகளாய் பார்க்கின்றனர் எனது தமிழக மக்கள் விவசாய பொருள் விலை ஏற்றத்தை தீவிரமாக கண்டிக்கின்றனர்.ஆனால் விவசாயி விலை பொருளை வீதியில் கொட்டும்போது வேடிக்கை பார்க்கின்றனர்.

நிலை எடுப்பு என்ற பெயரில் நிறைய விவாசியிகள் தியாகிகளாக தெருவுக்கு வந்துள்ளனர் ,ஆனால் அன்பை போதிக்கும் தமிழக மக்களுக்கு அது ஒரு செய்தி மட்டுமே .ஐயோ .. உங்களுக்கு உயிர் கொடுத்த ஒரு சமுகத்தின் மரண ஓலம் உங்கள் காதில் விழவில்லையா. பக்கத்துக்கு தெலுங்கானா மாநிலம் நீர்நிலைகளை காப்பாற்ற 20,000 ஆயிரம் கோடியை செலவு செய்ய தயாராய் உள்ளது .இங்கு அத்திக்கடவு திட்டம் 50 ஆண்டுகளாய் ஆண்டி கோலத்தில் நின்ற நிலையில் உள்ளது .தொழில் முன்னேற்றம் ,விவசாய முன்னேற்றம் ,சூழலியல் முன்னேற்றம் என்ற ஒருங்கிணைந்த பார்வை தமிழ்நாட்டுக்கு மட்டும் அல்ல தேசத்துக்கும் இன்று தேவையாய் உள்ளது.உணவில்லாமல் மட்டும் அல்ல, உணவுக்கு தம் மக்கள் சிரமப்படுவார்கள் என்றாலே முதலில் ரத்தக்கண்ணீர் வடிப்பது வேளாண்குடி மக்களே.

உங்களுக்கும் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கும். உங்களுக்கு உணவளித்தவன் நொந்து நொந்து ,இருந்ததை இழந்து , தண்ணீருக்கு செலவழித்து கடன்பட்டு கண்ணீருடன் வாழ்ந்து , இலவச பிச்சை எடுத்து கொஞ்சம் கொஞ்சம் சாவதை விட சீக்கிரம் செத்துவிட்டு போகட்டும் . மதிக்கப்படாத , வருவாய் இல்லாத இந்த விவசாயிகளை கருணை கொலை புரிய சட்டம் இயற்றுங்கள் எமது அறிவுசார்ந்த மக்களே.

செல்வராஜ்

Related Posts