என்னக் கொடுமை இது கோபிநாத்?
பலரும் அரவிந்தசாமியின் இந்த நேர்காணலை சிலாகித்து பேசுவதை கவனித்தேன். வழக்கமாக ஏழைத்தாயின் மகன் என்றால் ஏறி அடித்து பேசும் கோபிநாத், அரவிந்தசாமியின் அழகை ஆராதிக்கிறார்? எப்படி ஃபிரெட்ஜில் இருந்து எடுக்கப்பட்ட ஆபிள்போல ஃபிரெஷாகவே இருக்கிறீர்கள்? என்கிறார். அரவிந்த்சாமி அதற்குப் பதில் சொல்லமுடியாமல் கூச்சப்பட்டு நிற்கிறார். தெரியவில்லை சார். உங்கள் முதல் கேள்விக்கே நான் ஃபெயில் மார்க் எடுத்துவிட்டேன் என்கிறார். ஒருவரின் தோற்றத்தை வைத்து சிலாகிக்கும் கோபி, நீயா? நானா ஷோ என்றால் அழகுலாம் ஒண்ணுமே இல்லை. எல்லாம் உங்க மனநிலையைப் பொருத்துதான் இருக்கிறது. உங்க மைண்டை மாத்திக்கோங்க என பராசக்தி கோர்ட் சீன் சிவாஜி பாணியில் பக்கம் பக்கமாக பேசி இருப்பார். அப்படி பேசாமல் அரவிந்தசாமியை பார்த்ததையே ஆண்டவனைப் பார்த்ததைப் போல உள்ளுக்குள் உற்சாகம் பெறுகிறார்.
அடுத்ததாக அரவிந்த்சாமி தனக்கு ரசிகர் மன்றங்கள் வேண்டாம் எனத் தவிர்த்துவிட்டேன் என்று பெருமிதமாக சொல்கிறார். அதை வைத்து என்ன செய்ய போகிறேன் என்கிறார். ரசிகர் மன்றங்கள் மீது ஒரு அப்பர் கிளாஸ் மனநிலை என்னவோ அதையே அவர் பிரதிபலிக்கிறார். அது ஒரு sophisticated mind. அவர் அடிமட்டத்தில் இருந்து சினிமாவில் நடிக்க வந்தவர் இல்லை. அப்படி பேசுவதில் ஒரு ஆச்சரியமும் இல்லை. மணிரத்னம் போன்றவர்களால் வலிய கூப்பிட்டு நடிக்க வைக்கப்பட்டவர். மணி சினிமா புரிதல் என்னவோ அதை அப்படியே அவர் பிரதிபலிக்கிறார். மணி எப்படி ‘இருவர்’ மனநிலையில் தமிழ்நாட்டின் அரசியலை கொச்சையாக பிரதிபலித்தாரோ அதையே வாந்தி எடுக்கிறார்.
என் மகன் ரசிகர் மன்றம் ஆரம்பிக்கிறேன் என்றால் நான் ஏற்பேனா? அப்படி என்றால் எப்படி பிறர் எனக்கு மன்றம் ஆரம்பிப்பதை நான் அனுமதிக்க முடியும் என்கிறார். என் புள்ளைக்கு ஒரு அறிவுரையும் ஊரான் வீட்டுப் புள்ளைக்கு ஒரு அறிவுரையும் எப்படி சார் தர முடியும் என்கிறார். அதை வியந்து ரசிக்கிறார் கோபி. ரசிகர் மன்றத்தில் தன் மகனை சேரவிடாமல் தடுக்கும் மனநிலையில்தான் அரவிந்த்சாமி இருக்க முடியும். ஏனென்றால் அது ஒரு அப்பர் கிளாஸ் மைண்ட். ஆக்ஸ்போர்டுதான் சிறந்தது என்று போதிக்கப்படுவதைப் போல, ரசிகர் மன்றம் என்றால் கலீஜ் என்று புகுந்தப்படுவதற்குள் என்ன அரசியல் உள்ளது என தனியே நான் விளக்கி எழுத தேவையில்லை. அது ஒரு சபால்டன் வெளி. அதற்குள் அரவிந்த்சாமி போன்றவர்கள் சரிசமமாக சேர்ந்து நிற்க முடியாது. அதற்கு எதிராக உருவாக்கப்பட்ட மனநிலையில் அவர் வளர்ந்தவர். எனவே ரசிகர் மன்றம் என்ற ஒரு கலாச்சாரத்தை கொச்சையாக கருதுகிறார்.
சாதியால், வர்க்கத்தால் பிரிந்து கிடக்கும் மக்களுக்கு ஒரு பொதுவெளி தேவைப்படுகிறது. ஒரு தேவாலயம், ஒரு கோயில் தராத சமநிலையை கூடுகையை ரசிகர் மன்றங்கள் ஏற்படுத்தின. அதனால்தான் ஒருவன் ரசிகர் மன்றத்தால் ஈர்க்கப்படுகிறான். அவனுக்கு சாதி,சமய பாகுபாடு இல்லாத ஒரு இடம் தேவைப்பட்டது. ஆகவே, அவன் ரசிகர் மன்றங்களால் ஈர்க்கப்பட்டான். சமூகத்தில் தேவையாக அன்றைக்கு மன்றங்கள் தேவைப்பட்டன. எம்ஜிஆர் ரசிகர் என்றால் அதில் சாதி இருக்காது. அதேபோல் விஜயகாந்த்,ரஜினி, விஜய் வரை உள்ள மன்றங்கள் சாதியை இடைவெளியை உடைத்து பொதுவெளியை உண்டாக்கி இருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் 1950 களுக்குப் பிறகு பண்ணையார்கள் அரசியல் களத்தை உடைத்து பிச்சைக் காரனுக்கு அரசியல் உரிமை பேசிய இயக்கங்களின் வெற்றி இந்த ரசிகர் மன்றங்கள் ஏற்படுத்திய மாற்றங்கள். சாமானியன் சமமாக உட்கார்ந்து அரசியல் பேசும் ஓர் அரங்கமாக திரையங்குகள் இருந்துள்ளன.
அந்தப் புரிதல் துளியும் அற்று உயர்வக்குப்புவாத மனநிலையில் மன்றங்கள் என்பது வேலை வெட்டி இல்லாத கூடாரங்கள் என்கிறார் அரவிந்த்சாமி. அதை சிலாகிக்கிறார் கோபி. ரசிகர் மன்ற கலாச்சாரத்தை வெறுக்கும் இவர் கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும் கும்பகோணம் கோயிலுக்கு அம்மா, அப்பா நம்பிக்கைக்காக போவேன். காஞ்சி மடம் போவேன். குடும்பத்தோடு சேர்ந்து பயணிப்பது ஒரு அவுட்லெட் என்கிறார். ஏன், பெற்றோருக்கு தன் கருத்தை சொல்லி புரியவைக்காமல் கோயிலுக்கு நம்பிக்கை இல்லை என்றாலும் போகிறார்? பெற்றோர் மனம் கோணக்கூடாது இல்லையா? இவருக்கு ஒரு அவுட்லெட் தேவைப்படுவதைப் போல் லோ கிளாஸ் மக்களுக்கும் ஒரு அவுட்லெட் தேவைப்படும் இல்லையா? எல்லோரும் கார் எடுத்துக் கொண்டு கோயில் குளம் சுத்த முடியுமா?
அப்புறம் சினிமாவில் உச்சநடிகராக வேண்டும் என்ற கனவு தனக்கு இல்லை என்கிறார். முதலில் இவர் மணிரத்னம் கூடாரத்தை விட்டு வெளியே வராத கோழி குஞ்சு. அப்புறம் எப்படி உச்ச நடிகராக மாறுவது. பான் இண்டியா படத்தில் மட்டுமே நடித்தால் உச்ச நடிகராக மாற முடியாது. அப்படி இருந்தும் ஆரம்பக் காலத்தில் இந்திரா போன்ற படங்களில் கொஞ்சம் முயன்று பார்த்தார். ஓட்டக்கார மாரிமுத்து என்றும் பாட்டுப் பாடி ஆடக்கூட முன்வந்தார். மக்கள் இவரை பெரிய அளவு ஏற்றுக் கொள்ளவில்லை. அதன் பின்னர் பிசினஸ் பக்கம் செட்டில் ஆகிவிட்டதால் சினிமா பெரிய தொழிலாக இவருக்குத் தோன்றவில்லை. ஏதோ லட்சக்கணக்கான மன்றங்கள் இருந்து அதைக் கலைத்துவிட்டு வந்ததுபோல் பேசுகிறார். சிவாஜி, எம்ஜிஆருக்கு ஏன் ரசிகர் மன்றம் தேவைப்பட்டன? இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்திக்கு ஏன் மன்றம் தேவைப்படவில்லை என்பது எல்லாம் ஒரு அரசியல்தான். மக்களை ஏன் ஒருவர் திரட்டுகிறார், ஒருவர் ஏன் மக்களைவிட்டு ஒதுங்கி நிற்கிறார் என்பதும் கூட அரசியல்தான். அதற்கு ஒரு காரணம் இருந்தது. மார்டின் லூதர் கிங் போன்று ஒரு கனவு. அதை அரவிந்த்சாமிக்குப் புரியாது. புரிந்தாலும் சொல்லமாட்டார்கள்.
கடற்கரய்