தமிழ் குரல் / AI Voice
ஸ்கீம் என்றால் காவேரி மேலாண்மை வாரியம் இல்லை என்ற வஞ்சகமான, குழப்பமான தீர்ப்பளித்து 20 ஆண்டு கால சட்ட போராட்டத்தை நீர்த்து போக செய்து, அரசியல் சூழ்ச்சிக்கு அடிபணிந்து தமிழகத்திற்கு வஞ்சகம் செய்துவிட்டதாக மக்கள் நம்பக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பாராளுமன்றத்தில் பதவி விலகல் கண்டன தீர்மானத்தை இம்பீச்மெண்ட் (Impeachment) தமிழக MPக்கள் பாராளுமன்றத்தில் கொண்டு வர வேண்டும்.
TN MPs should bring #Impeachment motion against Supreme Court Chief Justice Deepak Missra who has believed to have done gross injustice to TN’s 20 years of legal struggle by giving ambiguous verdict rising high tension among the people in TN leading to law and order situation in Tamilnadu.
இதில் மத்திய அரசும், உச்ச நீதி மன்ற நீதிபதிகளால் குற்றம் சாட்டப்பட்ட தலைமை நீதிபதியும் இணைந்து செய்த சூழ்ச்சி இப்போது ஒவ்வொன்றாக் வெளி வந்து கொண்டு இருப்பதாக மக்கள் கருதுகின்றனர்.இந்த அநீதியான தீர்ப்பை அரசியல் சாசன பெஞ்ச்சிற்கு மாற்றினால் ஒழிய தமிழகத்திற்கு காவேரி நதி நீர் தீர்ப்பாயம் கொடுத்த வடிவில் காவேரி மேலாண்மை வாரியம் கிடைக்க வழியில்லை. அதற்கு இந்த தலைமை நீதிபதி மீது இம்பீச்மெண்ட் கொண்டு வர வேண்டும். ஏன்?
அரசியல் சாசன சட்ட உரிமையின் மூலம் கிடைத்த மாநில அரசின் கூட்டாச்சி தத்துவத்திற்கு உலை வைக்கப்பட்டிருக்கிறது. உலக வழக்கத்தின் மூலம் கிடைக்கும் கடை மடை பாசனத்திற்கு முன்னுரிமை திட்டமிட்டு பறிக்கப்படுகிறது.
இப்படி பறிப்பதை தேர்தல் அரசியலை மையாமாக வைத்து ஆளும் பி.ஜே.பியும், ஆண்ட காங்கிரஸும் விளையாடிக்கொண்டிருக்கிறது. அதற்கு இரு மாநில மக்களும் பலிகடாவாக வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது.
தமிழ்நாட்டில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற போராட்டம் பல்வேறு வடிவில் நடக்கிறது. ஆனால் உண்மையாக அரசியலில் என்ன நடக்கிறது.
அட்சிகட்டிலில் இருக்கும் ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும், நீதிதுறையும், அதிகாரவர்க்கமும், ஊடகமும் ஆட்சியை எப்படி நடத்துகிறார்கள் என்பதை பற்றி விழிப்புணர்வு வராதவரை ஒரு மாற்றமும் வந்துவிடப்போவதில்லை.
இன்றைக்கு காவிரி மேலாண்மை வாரியம் ஏன் அமைக்கப்பட வில்லை.
ஏனென்றால், உச்ச நீதிமன்ற தீர்ப்பு இன்றைக்கு மத்திய அரசிற்கே விளங்காத தீர்ப்பாக, ஸ்கீம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாத தீர்ப்பாக அமைந்து, அதற்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு மனுச்செய்த்தோடு மட்டுமல்லாமல், மேலாண்மை வாரியத்தின் அமைப்பை, செயல்பாட்டை மாற்றலாமா என்று ஆலோசனை கேட்டு, தமிழகத்தின் உரிமையை நீர்த்துபோக செய்யும் தீர்ப்பாக அமைந்திருக்கிறது.
இதை எதிர்த்து அதிமுக அரசு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யும் நிலையில், எப்படி காவேரி மேலாண்மை வாரியம், காவிரி நதி நீர் தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பின் படி அமைந்து 4 மாநிலங்களுக்கும் பொதுவான அமைப்பாக வடிவெடுக்கும். இது இனி நடக்காது என்பது வெளிப்படையாக தெரிகிறது.
20 வருடம் சட்டப்போராட்டம் நடைபெற்று தீர்ப்பு வழங்கப்பட்டு, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து அளிக்கப்பட்ட தீர்ப்பை, மாற்றி தமிழகத்திற்கு 14 டி.எம்.சி நீரை குறைத்து, 15 வருடம் அப்பீல் போக முடியாது என்று தீர்ப்பெழுதி இன்றைக்கு காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பதையும் கேள்விக்குரியாக்கிய தீர்பாக அமைந்திருக்கிறதை பார்க்கும் போது, அனைவருக்கும் ஒரு சந்தேகம் எழுகிறது. எதை வைத்து அந்த சந்தேகம் வருகிறது என்று சொன்னால்.
உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி, மற்ற நிதிபதிகளுக்கு ரோஸ்டர் முறைப்படி வழக்குகளை வழங்குவதில் அரசியல் மற்றும் மற்ற தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளுக்கு ஏற்ப செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டு ஒரு மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தியது.
இதன் பின்னனியில் தான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வழங்கிய குழப்பமான காவிரி தீர்ப்பு இன்றைக்கு அனைவரின் சந்தேகத்திற்கும், கேள்விக்கும் உள்ளாகி இருக்கிறது.
4 மாநிலம் சார்ந்த காவிரி நதி நீர் வழக்கில் தீர்ப்பு ஏன் குழப்பமாக எழுதப்பட்டு இத்துணை குழப்பத்திற்கும் காரணமாக அமைந்திருக்கிறது. ஏன் அது கர்நாடகத்திற்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை பார்க்கும் போது இந்த சந்தேகம் நியாமானதுதானா என்று நாம் சிந்திக்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். இப்படிப்பட்ட குழப்பமான தீர்ப்பை வழங்கி இன்றைக்கு நடக்கும் நாடகங்களை வைத்து பார்க்கும் போது, இது மத்திய அரசு தலையீட்டில் வழங்கப்பட்ட தீர்ப்பாக இருக்குமோ என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்படுகிறது. இது கர்நாடக அரசியலை மையமாக வைத்து ப.ஜா.கட்சிக்கு ஆதரவாக வளைக்கப்பட்ட தீர்ப்பாக இருக்குமோ என்ற சந்தேகம் மக்களுக்கு வருவதற்கு காரணமாக அமைந்திருக்கிறது.
நடக்கும் சம்பவங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையனவாக அமைந்திருக்கிறது.
மத்திய அரசின் விளக்கம் கேட்கும் பதில் மனுவில் என்ன நடந்திருக்கிறது.
1. மத்திய அரசு காவேரி மேலாண்மை வாரியத்தின் அமைப்பை, செயல்பாட்டை மாற்ற எத்தனித்திருக்கிறது.
2. அதில் IAS அதிகாரிகளை புகுத்தி, அதை கர்நாடக ஆட்சியில் இருக்கும் அரசியல் வாதிகளின் கட்டளைக்கு ஏற்ப செயல்பட தீர்மானித்து, வஞ்சக எண்ணத்துடன் தீர்ப்பிற்கு விளக்கம் கேட்டு இருக்கிறது
3. கர்நாடக சட்ட சபை தேர்தலை காரணம் காட்டி, கர்நாடகாவில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை வரும் என்றால் என்ன அர்த்தம், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை வராதா. உரிமைப்பட்ட தண்ணீரை ஒவ்வொரு தீர்ப்பிலும் இழந்து நிற்கிறது தமிழகம், அதையும் ஏற்றுக்கொண்டு, கொடுத்த நீரை சரியாக கொடுப்பதை உறுதி செய்ய மேலாண்மை வாரியமும் அமைக்க முடியாவிட்டால் அப்புறம் எதற்கு தீர்ப்பு, அப்புறம் எதற்கு உச்ச நீதிமன்றம்.
4. இது, தமிழக அரசின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தள்ளுபடி செய்து, அரசியல் சாசன சட்டத்தின் படி அமைக்கப்பட்ட காவேரி நதி நீர் தீர்ப்பாயத்தின் தீர்ப்பையே நீர்த்து போக செய்ய பிரதமர் மோடியின் மத்திய அரசு, உச்சநீதி மன்ற தீர்ப்பை வளைத்து கர்நாடக அரசின் பக்கம் நிற்கிறது என்று மக்கள் நம்பும் வகையில் மிக தெளிவாக தெரிகிறது.
எனவே, மத்திய அரசின் விளக்கம் கேட்பு மனு ஏற்று விரைவில் தமிழக அரசின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தள்ளுபடி செய்யப்படும்.
மேலாண்மை வாரியத்தை மத்திய அரசின் வேண்டுகோளுக்கு இணக்க மாற்றி அமைக்க உச்ச நீதிமன்றம் உத்திரவிடும்.
192 டி.எம்.சி யில் இருந்து 177 டி. எம்.சியாக 14 டி.எம்.சியை இழந்தோம்.
இப்போது மேலாண்மை வாரியத்தை கர்நாடக அரசியல்வாதிகளின் கைகளில் IAS அதிகாரிகளை நுழைப்பதின் மூலம், அதிகரமற்ற காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் நாடகம் விரைவில் நிறைவேறும்.
இப்படித்தான் நிறைவேற வேண்டும் என்ற நாடகம் விரைவில் அரங்கேறும் என்ற சந்தேகம் வலுவாக எழுகிறது.
இதை அனைத்தையும் மக்கள் இன்றைக்கு பிரதமர் மோடியின் மத்திய அரசு, உச்சநீதிமன்ற நீதிபதிகளால் குற்றம் சாட்டப்பட்ட உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதியின் ஆதரவோடு, குழப்பமான தீர்ப்பை ஸ்கீம் என்ற வார்த்தையை வைத்து தீர்ப்பை வரவழைத்திருக்கிறது, அதை ஆதரிக்க அதிமுக அரசை தனது பலத்தால் வளைத்திருக்கிறது, நம்பிக்கையில்லா தீர்மானத்தை, அதிமுக MPக்கள் ஆதரவோடு தாக்கல் செய்யாமல் தடுத்திருக்கிறது என்று கருதுகிறார்கள்.
6 வார காலம் முடியும் வரை ஸ்கீம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் கண்டுபிடிக்காமல் திணறி, கடைசிநாளில் தன் சுயரூபத்தை காண்பித்திருக்கிறது மத்திய அரசு என்று சந்தேகப்படுவதற்கு வாய்ப்பிருக்கிறதா இல்லையா என்பதை உங்கள் யூகத்திற்கு விடுகிறேன்.
இத்தனைக்கும் உடனிருந்து விட்டு இன்றைக்கு அதிமுக அரசு உண்ணாவிரதம் போராட்டம் என்று நாடகமாடுகிறது, என்பது பி.ஜே.பியால் இயக்கப்படுகிறது என்பதை உறுதிப்படுத்துவது போல் இருக்கிறது.
இத்தனையையும் பார்க்கும் போது தமிழக அரசை, மத்திய அரசு ஒன்று ஏமாற்றியிருக்க வேண்டும், இல்லையென்றால் தமிழக அரசின் ஒத்துழைப்போடு இந்த நாடகம் நடத்தியிருக்க வேண்டும்.
இது மத்திய அரசு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் துணை கொண்டு நீதியை வளைத்திருக்குமோ என்ற மக்களின் ஐயப்பாட்டை மேலும் வலுப்படுத்துகிறது.
இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், எனவே 20 வருட சட்ட போராட்டத்திற்கு நீதி சொல்ல வேண்டிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, நீதியில் இருந்து வழுவி, மோடி அரசின் அரசியல் நோக்கத்திற்கு உடனிருந்து குழப்பமான தீர்ப்பை அளிக்க வாய்ப்புகள் அதிகமாக இருந்திருக்கலாம் என்று மக்களுக்கு சந்தேகம் வந்திருக்கிறது. ஒரு வேளை அப்படி நடந்திருந்தால், அதை எப்படி வெளிக்கொண்டு வருவது.
எனவே தமிழக MPக்கள் ராஜினாமா செய்யக்கூடாது, மாறாக உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி மீது பாராளுமன்றத்தில் இம்பீச்மெண்ட் கொண்டுவந்து, இந்த தீர்ப்பை வழங்கிய உச்ச நீதி மன்ற நீதிபதி மற்றும் மத்திய அரசின் வஞ்சகத்தை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.
இந்த சூழ்நிலை வந்தால் தான், இந்த தீர்ப்பை மாற்ற ஒரு வாய்ப்பு கிடைக்கும், இந்த வழக்கை அரசியல் சாசன அமர்விற்கு மாற்றி, மக்களால் வஞ்சகமான, தவறான தீர்ப்பாக பார்க்கப்படும் தீர்ப்பை மாற்றினால் தான் காவிரி மேலாண்மை வாரியம் எவ்வித மாற்றம் இன்றி அமைக்க வழி வகை பிறக்கும்.
இல்லையென்றால் பல்லில்லா மேலாண்மை வாரியத்தை சில மாற்றங்களோடு மத்திய அரசு அமைக்கும். அப்படிப்பட்ட பல்லில்லா வாரியத்தை வைத்து என்ன செய்வது.
இதை தமிழக அரசியல் கட்சிகள் செய்யுமா, செய்யாது, ஊடகங்கள் விவாதிக்குமா, விவாதிக்காது. இதை வலியுறுத்தி நமது அரசியல் கட்சிகள் ஒரே நாளில் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடுவார்களா, போராடமாட்டார்கள்.
ஏனென்றால், இந்த அரசியல் நிலைப்பாட்டை இவர்கள் எடுப்பார்களா, எடுக்க மாட்டார்கள்.
அப்போ, என்ன செய்ய போகிறார்கள், நமது அரசியல் கட்சிகள்,
அரசியல் கட்சிகள்
உண்ணாவிரதம் இருக்கலாம்,
பாமர மக்களின் கடைகளை அடைத்து போராடாலாம்,
டோல் கேட்டை நொறுக்கலாம்,
மத்திய அரசின் அலுவலகங்களை முற்றுகையிடலாம்,
ரயிலை மறிக்கலாம்,
விமானத்தை மறிக்கலாம்.
எல்லோரும் போராட ரெடி….
3 ம் தேதி ஒரு போராட்டம் – எல்லாம் விவசாயிகள் கூட்டமைப்பு, வணிகர் சங்கம் – ரயில் மறியல், விமான மறியல், சாலை மறியல் போராட்டம், அதிமுக உண்ணாவிரதம் – தனித்தனியாக
5 ம் தேதி ஒரு போராட்டம் – எதிர்கட்சிகள் திமுக தலைமையில் கடை அடைப்பு
6 ம் தேதி ஒரு போராட்டம் – தேமுதிக போராட்டம்
11 ம் தேதி ஒரு போராட்டம் – மோடியை எதிர்த்து கடை அடைப்பு வணிகர் சங்கம் போராட்டம்
இனி நடிகர் சங்கம் ஒரு நாள் போராட்டம்.
இவர்கள் அனைவரும் நேரத்தை வீணடிப்பார்கள், ஆனால் ஒன்றும் நடக்காது, ஆனால் இது நடக்கும்
1. உச்ச நீதி மன்றம் தமிழக அரசின் நீதிமன்ற அவமதிப்பு மனுவை முதலில் மத்திய அரசின் விளக்கம் கேட்டும் மனுவை காரணம் காட்டி தள்ளுபடி செய்யும்.
2. இரண்டாவது மோடி அரசின் கோரிக்கையை ஏற்று காவேரி மேலாண்மை வாரியத்தின் அமைப்பை நீர்த்து போக செய்ய அதன் அமைப்பை மாற்றுவார்கள், IAS அதிகாரிகளை உள்ளே நுழைக்க அனுமதிப்பார்கள்.
இது கண்டிப்பாக நடக்கும், அதற்குள் நம் அரசியல் கட்சிகள் அடுத்த போராட்டத்திற்கு போய்விடுவார்கள்,
ஊடகங்கள் தனக்கு டி. ஆர். பி ரேட்டிங் கொடுக்கும் சினிமா நடிகர்கள், நாலந்தர அரசியல்வாதிகள் பின்னே போய் விடுவார்கள்.
மக்களும், விவசாயிகளும் ஏமாற்றப்பட்டு விடுவார்கள். மீண்டும் ஊடகம் யாரை காண்பிக்கிறதோ, பணம் யார் கொடுக்கிறார்களோ, யார் முதல்வராக வருவார் என்ற பிம்பம் கட்டி எழுப்ப படுகிறார்களோ, அவர்களை தேர்ந்தெடுத்து தண்ணியில்லாமல் சாவார்கள் விவசாயிகள் மக்கள் குடிக்க தண்ணியில்லாமல் சாவார்கள், இளைஞர்கள் தனித்தனியாக பிரிந்து கிடந்து வேலையில்லாமல், வேதனையில் வீழ்வார்கள்.
இது நடக்கும், பாருங்கள்.
இதை படித்து புரிந்தால், விழிப்புணர்ச்சி கொள்ளுங்கள்.
ஆனால் தடையை மீறி போராடிய மாணவர்கள், பொதுமக்களுககு இடையூரு இல்லாமல், அமைதியாக போராடி, நம் இளைஞர்கள் மட்டும் தான் சென்னை மெரினாவை அடைத்து பூட்டு போடச்செய்து சாதனை படைத்தவர்கள்.
தமிழக அரசு உண்மையாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை எதிர்த்து போராட நினைத்தால், மெரினாவை திறந்து விட்டு விட்டால் போதும், இன்றைக்கு தமிழக இளைஞர்களும், மாணவர்களும் போராடி அதை அமைப்பார்கள். ஆனால் அதை நடக்க தமிழக அரசு விடாது.
எது நடக்கும், அரசியல் கட்சிகள் போராட்டம், உண்ணாவிரதம் நடக்கும், ரயில் மறியல் நடக்கும், சாலை மறியல் நடக்கும் – அடுத்த பிரச்சினை வரும் வரை.
இது தான் இன்றைய அரசியல் நிலைமை.
இன்றைய அரசியல்வாதிகளின் சூழ்ச்சியை வஞ்சகத்தை புரிந்து கொண்டவர்களாக தமிழக இளைஞர்கள் இருக்கிறார்கள், ஆனால் பெரும்பான்மையான ஒட்டுப்போடும் மக்கள், இந்த அரசியல் கட்சிகளின் கண்மூடித்தனமான ஆதரவாளர்களாக இருக்கிறார்கள்.
எனவே தான் இளைஞர்கள் எவ்வாறு போராடினாலும், இறுதியில் தேர்தல் என்று வரும் போது, அரசியல் கட்சிகள் ஒன்றாக இருக்கிறார்கள், தெளிவாக இருக்கிறார்கள், வெற்றி பெறுகிறார்கள், ஆட்சி அமைக்கிறார்கள், ஊழல் பண்ணுகிறார்கள், கூட்டத்தை கூட்டுகிறார்கள், பதவியை பிடிக்கிறார்கள். இளைஞர்கள் தனித்தனியாக பிரிந்து போய் விடுகிறார்கள். மக்களது அறியாமையை அறுவடை செய்கிறார்கள் அரசியல் வாதிகள்.
வாழ்க ஜனநாயகம், வாழ்க பணநாயகம், வாழ்க தேர்தல் வெற்றி அரசியல்.
யாருமே வாழாத நாட்டிற்கு எந்த டீக்கடைக்காரர் டீ ஆத்த போகிறார்.
வெ. பொன்ராஜ்

