நயினா ராம்தாஸ் சொன்னது செல்லாது., நானே பாமக தலைவர் – அன்புமணி அறிவிப்பு!

நயினா ராம்தாஸ் சொன்னது செல்லாது., நானே பாமக தலைவர் – அன்புமணி அறிவிப்பு!

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் அண்மையில் நேற்று முன்தினம் (ஏப்ரல் 10) கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதில், சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டும், கட்சியின் இளைஞர்களை வழிநடத்தவும் பாமக-வின் தலைவர் இனி நானே. அன்புமணி ராமதாஸை பாமகவின் செயல் தலைவராக நியமனம் செய்கிறேன். மற்ற பொறுப்பாளர்கள் தற்போது உள்ளவாறே தொடர்ந்து செயல்படுவார்கள்.” என்று ராமதாஸ் தடாலடியாக அறிவித்தார்.இதுதொடர்பாக ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தபோது, ”எதிர் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு பல்வேறு செயல் நோக்கு திட்டங்களை வகுத்து வருகிறேன். அதனை செயல்படுத்த வேண்டி, கட்சி அமைப்பில் முக்கிய மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று கருதி முழுமனதுடன் அறிவிப்பை வெளியிடுகிறேன்.பாமகவின் நிறுவனர் மட்டுமல்லாமல் தலைவர் பொறுப்பையும் இனி நானே எடுத்துக் கொள்கிறேன். தேர்தல் வெற்றிக்காக அயராது உழைக்க வேண்டும் என்ற நோக்கில் பாமகவின் தலைவராகப் பொறுப்பு வகித்து வந்த அன்புமணி ராமதாஸை, கட்சியின் செயல் தலைவராக இன்றிலிருந்து நியமனம் செய்கிறேன். இந்த அறிவிப்பை ஏற்று பாட்டாளி மக்கள் கட்சியினர் ஒற்றுமை உணர்வுடன் செயல்பட்டு, தேர்தல் வெற்றிக்காக பணியாற்ற வேண்டும். நான் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. எல்லாவற்றையும் உங்களிடம் கூற முடியாது. எனக்கு பதவி ஆசை இல்லை. ஆனால் தேர்தலை முன்னிட்டு இளைஞர்களை வழி நடத்தவே இந்த முடிவு. கூட்டணி குறித்து பொதுக்குழுவில் முடிவெடுப்போம்.” என்று ராமதாஸ் கூறினார்.

முன்னதாக கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி புதுச்சேரியில் நடந்த பாமக பொதுக்குழு கூட்டத்தில் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே மேடையிலேயே வார்த்தைப் போர் வெடித்தது. இது அரசியல் களத்தில் பேசுபொருளானது. அப்போது அன்புமணி ராமதாஸ் பேசிக் கொண்டிருந்தபோதே மைக்கை வேகமாக வைத்து விட்டு, ‘கட்சித் தொண்டர்கள் இனி என்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் வந்து சந்திக்கலாம்’ என்று ராமதாஸ் முன்னிலையிலேயே அறிவித்ததுடன், தனது தொடர்பு எண்ணையையும் பகிரங்கமாக அறிவித்தார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்ந்து மறுநாள் (டிசம்பர் 29) தைலாபுரம் தோட்டத்தில் தனது தந்தையுடன் அன்புமணி ராமதாஸ் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது. அப்போது ‘ஜனநாயக கட்சியில் விவாதம் நடப்பது சகஜம் தான்’ என்று ராமதாஸை சந்தித்து பேசிய பின் அன்புமணி ராமதாஸ் விளக்கமும் அளித்திருந்தார். இந்த நிலையில் தான் அன்புமணி ராமதாஸின் கட்சித் தலைவர் பதவி பறிப்பு குறித்த அறிவிப்பை ராமதாஸ் நேற்று முன்தினம் (ஏப்ரல் 10) வெளியிட்டு கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். இந்நிலையில் நேற்றிரவு (ஏப்ரல் 12) பாமக தலைவராக நானே தொடர்வேன் என்றும், பாமகவை தொடர்ந்து வழிநடத்திச் செல்வேன் சென்றும் அன்புமணி ராமதாஸ் திடீரென அறிக்கை வெளியிட்டு பாமக வட்டாரத்தில் உச்சக்கட்ட பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.

இது குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘“பா.ம.கவின் தலைவர் பதவி குறித்து எதிர்பாராத குழப்பங்கள் நிலவி வருகின்றன. அதன் காரணமாக, கட்சி வளர்ச்சிக்கும், மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டு பணிகளுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதை மனதில் கொண்டு, உங்களின் ஐயங்களைப் போக்கவே இந்த மடல். ஊமை சனங்களுக்கு சமூகநீதியும், அரசியல் அதிகாரமும் பெற்றுத் தர வேண்டும் என்பதற்காகவே 1989&ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் நாள் சென்னை சீரணி அரங்கில் நமது ராமதாஸால் பா.ம.க தொடங்கப்பட்டது. அப்போது பா.மகவால் உருவாக்கப்பட்ட கொள்கை விதிகளின்படி பாமகவின் தலைவரை கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் தான் தேர்வு செய்ய முடியும். அதனடிப்படையில் 2022 ஆம் ஆண்டு மே மாதம் 28 தேதி சென்னையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் ராமதாஸின் வாழ்த்துகளுடனும் உங்களின் ஆதரவுடனும் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவன் நான். அதை இந்திய தேர்தல் ஆணையமும் அங்கீகரித்திருக்கிறது.

கட்சியின் தலைவராக நான் முறைப்படி பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்திருக்கும் நிலையில், பாமகவின் தலைவராக நான் தொடர்ந்து செயல்படுவேன். எந்த நோக்கத்திற்காக கட்சியின் தலைவராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேனோ, எந்த நோக்கத்திற்காக ராமதாஸ் பாமகவை தொடங்கினாரோ, அந்த நோக்கத்தை நோக்கி உங்களின் ஆதரவுடன் இன்னும் தீவிரமாக பயணிக்க நான் உறுதி பூண்டிருக்கிறேன். எனது பணிகளுக்கு பாட்டாளி சொந்தங்களாகிய உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் தொடரும் என்று உறுதியாக நம்புகிறேன். நம்முன் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டிய இரு இலக்குகள் உள்ளன. முதலாவது, வரும் மே 11 ஆம் தேதி மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக் காட்டுவது. இரண்டாவது, 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் கடந்த காலங்களை விட அதிக இடங்களில் வெற்றி பெற்று நமது வலிமையை நிலை நிறுத்துவது.

மாமல்லபுரத்தில் சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு மிகச்சிறப்பாக நடத்தப்பட வேண்டும் என்பது நமது பாட்டாளி சொந்தங்களின் 12 ஆண்டு கனவு. அந்தக் கனவை நிறைவேற்றும் வகையில் சித்திரை முழுநிலவு மாநாட்டை வெற்றிகரமாக நடத்தும் பொறுப்பை என்னிடம் வழங்கிய ராமதாஸ், அதற்காக மாநாட்டுக்குழு தலைவராக என்னை நியமித்திருக்கிறார். ராமதாஸ் இட்ட இந்தப் பணியை வெற்றிகரமாக முடிக்கும் கடமை நம் அனைவருக்கும் உண்டு. மாநாட்டுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் திட்டமிடப்பட்டவாறு முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அனைத்து பணிகளையும் நான் ஒருங்கிணைத்து வருகிறேன். அதே போல் மாநாட்டுக்கு பாட்டாளி சொந்தங்களை அழைத்து வருவதற்கான களப்பணிகளை அனைத்து நிலை நிர்வாகிகளும் தொடர்ந்து முழு வீச்சில் மேற்கொள்ள வேண்டும்.

2026 சட்டப்பேரவை தேர்தலைப் பொறுத்தவரை பாட்டாளி சொந்தங்கள் விரும்பும் வலிமையான கூட்டணியை ராமதாஸ் வழிகாட்டுதலுடன் அமைக்க வேண்டியது எனது பெரும் கடமையாகும். அந்தக் கடமையை அனைவரும் மகிழ்ச்சியடையும் வகையில் சரியான நேரத்தில் செய்து முடிப்போம். பாமகவின்ன் தலைவர் என்ற முறையில் அது தான் என் தலையாய பணியாகும். மாநாட்டுப் பணிகளையும் சட்டப்பேரவை தேர்தலுக்காக கட்சியை வலுப்படுத்தும் பணிகளையும் கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகளும் களத்தில் மேற்கொள்ள வேண்டும். மீண்டும் சொல்கிறேன்… அரசியல் களத்தில் ராமதாஸின் லட்சியங்களை வென்றெடுப்பதும், அவருக்கு புகழ் சேர்க்கும் வகையில் பாமகவை வழிநடத்திச் செல்வதும் எனது முழு முதல் கடமை. அதற்காக உங்களை சந்திக்க விரைவில் உங்களை தேடி வருவேன்’ எனத் தெரிவித்துள்ளார். அன்புமணியின் இந்த திடீர் அறிவிப்பால் மேலும் மோதல் போக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

நிலவளம் ரெங்கராஜன்

Related Posts