கொரோனா பீதியால் குறைந்து வரும் கை குலுக்கும் பழக்கத்தின் முழுத் தகவல்!

கொரோனா பீதியால் குறைந்து வரும் கை குலுக்கும் பழக்கத்தின் முழுத் தகவல்!

மனிதர்களிடம் இருந்து உடல்மொழி வெளிப்படும் பொழுது, இதில் பெரும்பங்கு வகிப்பது அவர்களின் கை தான். கைகளின் செயல்பாடுகளின் மூலமே ஒருவரின் மனநிலை அதிகமாக பிரதிபலிக்கின்றது. இதனால் தான் ஒருவரை முதன் முதலில் காணும் பொழுது அவருடன் கைகுலுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நவீன மயமாகி விட்ட இன்றைய காலகட்டத்தில் இரண்டு நபர்கள் சந்திக்கும்போது கைகுலுக்குவது இயல்பான செயல். ஆனால், மேலைநாடுகளில் உறவுகள் மேம்பட மிகப் பெரிய பங்கை கைகுலுக்கல்கள் வகிக்கின்றது.

ஒவ்வொரு தருணத்திலும் யார் முதலில் கைநீட்டுவது? என்ற ஒரு சிக்கலை ஒவ்வொருவரும் சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். கைகுலுக்க முதலில் கை நீட்டுபவர் தாழ்ந்தவர் என்றும், இரண்டாவதாக கை நீட்டுபவர் முக்கியமானவர் என்றும் ஒருக் கருத்து பொதுவாக இருக்கின்றது. ஆனால், யதார்த்தத்தில் முதலில் கைகுலுக்க கை நீட்டுபவர் நட்பில் உயர்ந்தவர். என உடல்மொழி ஆய்வு கூறுகிறது. எந்த ஒரு உருக்கமான சூழலிலும் இத்தகையவர்கள் இயல்பாகி விடும் குணம் கொண்டவர்கள் என கூறப்பட்டது.

மேற்படி காரணங்களாலும் அரசியல் தலைவர்கள் முதல் முக்கிய புள்ளிகளின் சந்திப்பு வரை, கை குலுக்குவது ஒரு மரபு போல ஆகிவிட்ட நிலையில், கொரோனாவால் ஏற்பட்டுள்ள இந்த புது பீதியால், கை குலுக்க மறுக்கும் சம்பவங்களும் ஆங்காங்கே அரங்கேறி வரும் நிலையில், மாற்று வழிகளில் மரியாதை செலுத்துவதற்கு யோசனைகளும் பிறந்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல், பெர்லின் நகரில் கூட்டம் ஒன்றில் பங்கேற்றார். அப்போது சக அமைச்சர் ஒருவருக்கு ஏஞ்சலா மரியாதை நிமித்தமாக கை குலுக்க முயன்றார். ஆனால் கொரோனா பீதி காரணமாக கை கொடுக்க அந்த அமைச்சர் மறுத்துவிட்டார். இதனால் தர்ம சங்கடத்திற்கு ஆளான ஏஞ்சலா சிரித்துக்கொண்டே அங்கிருந்து சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

அதே போல கால்களுடன் கால்களை குலுக்கி வரவேற்பதால் கூட கொரோனா பரவாது என்ற புதுமையான யோசனையும் முன்வைக்கப்படுகிறது. அதை செய்து காட்டும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பரவுகின்றன. இந்த நிலையில், இந்திய பண்பாடு மற்றும் கலாச்சாரப்படி வணக்கம் வைத்தால் கொரோனா பரவாது என்ற யோசனையும் முன் வைக்கப்படுகிறது. கையை கூப்பி வணக்கம் சொல்வதால் ஒருவரை ஒருவர் தொடாமல் கொரோனா பீதி இன்றி ஒருவரை மரியாதையாக வரவேற்கலாம் என்ற யோசனைக்கு ஆதரவு குரல்கள் சமூக வலைதளங்களில் எழ தொடங்கி உள்ளன. இதை வலியுறுத்தும் விதமாக பல வித்தியாசமான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பரவுகின்றன. மேலும் ‘டிக்கிலோனா’ ஸ்டையில் மற்றும் கால்களால் வணக்கம் சொல்லிக்கொள்ளும் ’Wuhan Shake’ என்ற முறை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருது

ஆனாலும் இன்றைக்கும் உலகம் முழுவதும் கைகுலுக்கும் பழக்கம் இருந்தாலும், பல நாடுகள் வேறு முறைகளையும் பயன்படுத்துகின்றன. இந்தியாவில் இரு கைகளையும் கூப்பி ‘வணக்கம்’ சொல்லும் முறை உள்ளது.. அதே முறை தாய்லாந்திலும் உள்ளது. பிரான்ஸ், மொராக்கோ உள்ளிட்ட நாடுகளில், கைகுலுக்குவதற்கு பதிலாக கன்னங்களில் முத்தமிட்டுக்கொள்ளும் முறை உள்ளது. கைகுலுக்கும் பழக்கம் இருக்கும் நாடுகளில் சில மாற்றங்கள் இருக்கின்றன. ரஷ்யா மற்றும் அரபு நாடுகளில் உள்ள பெண்கள் கைகுலுக்குவது இல்லை. நார்வே, அமெரிக்கா போன்ற நாடுகளில் கைகுலுக்குதல் முக்கிய பழக்கமாக உள்ளது.

கொஞ்சம் பின்னோக்கிப் பார்த்தால் 5ஆம் நூற்றாண்டிலிருந்து கைகுலுக்கும் பழக்கம் இருப்பதாக பல வரலாற்று ஆய்வுகள் கூறுகின்றன. அந்த நூற்றாண்டில் வாழ்ந்த இருவர் கைகுலுக்கிக் கொள்ளும் வகையிலான சிலைகளையும், படங்களையும் இப்போதும் பார்க்க முடிகிறது. இது பண்டைய கால வழக்கம் என்றாலும், இதில் ஒரு காரணம் இருக்கிறது.

அந்த காலத்தில், மன்னர்களும், படை வீரர்கள் தங்களின் இடதுபக்க இடுப்பில், போர்வாள்களை வைத்திருப்பார்கள். அவர்களுக்கு தேவை ஏற்படும்போது, வலது கையால் அதை வெளியே எடுப்பார்கள்.

இருவர் சந்தித்துக்கொள்ளும் சூழலில், ஒருவருக்கு ஒருவர் வலது கைகளால், கைகுலுக்கும்போது, தங்கள் கைகளில் எந்த ஆயுதம் இல்லை என்றும், தங்களுக்குள் எந்த பகை உணர்வும் இல்லை என்றும், இடுப்பிலுள்ள வாளை எடுக்க வேண்டிய தேவை இல்லை என்பதையும் இது குறிக்கும். கைகுலுக்குதல் என்பது, இருவருக்கு இடையிலான நட்பு மற்றும் நம்பிக்கையை குறிப்பதாக விளங்கியது என்றும் வரலாறு கூறுவதாக தகவல்.

Related Posts

error: Content is protected !!