வெயிட்-டை குறைக்க ஆபரேஷனா? கொஞ்சம் வந்து இதைப் படிச்சிட்டு முடிவு செய்யுங்க!

வெயிட்-டை குறைக்க ஆபரேஷனா? கொஞ்சம் வந்து இதைப் படிச்சிட்டு முடிவு செய்யுங்க!

சமீபகாலமாக உடல் பருமன் என்பது பெரும் பிரச்னையாக உருவாகி வருகிறது. இதில் ஆண், பெண், குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகிறார்கள். அதனால்தான் இன்று நமது நாடு உலக உடல் பருமன் அதிகமுள்ள நாடுகளில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. நம் நாட்டில் ஆரோக்கியமற்ற மற்றும் நேரம் தவறிய உணவு உட்கொள்ளும் முறையினால் உடல்பருமன் நோயாளிகள் அதிகரித்து வருகின்றனர். மேலும் இது நீரிழிவு நோய், உயர் அழுத்தம், மாரடைப்பு, மூட்டு அழற்சி, நாளமில்லா சுரப்பி பிரச்னைகள், குழந்தையின்மை, புற்றுநோய் போன்ற இதர சிக்கல்களுக்கும் வழிவகுக்கக்கூடிய ஒரு முக்கிய உடல் நல பிரச்னையாக இருக்கிறது. இந்த சூழ்நிலையில் உடல் பருமன் குறித்து மக்களுக்கு ஏற்படும் அச்சத்தை சில நிறுவனங்கள் தங்கள் சுய லாபத்துக்காக பயன்படுத்தி வருகின்றன. உடல் பருமன் என்பது இன்று ஒரு பிராண்டாக மாறிவிட்டது.

உலகளவிலான சந்தை வளர்ச்சிக்காக பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் மக்கள் மத்தியில் உடல் பருமன் பற்றி பல தவறான கண்ணோட்டங்களை பரப்பி வருகின்றன. அதன் மூலம் தங்கள் நிறுவனம் தயாரிக்கும் பொருட்களின் விற்பனையை அதிகரித்து லாபம் சம்பாதித்து வருகின்றன. குறைந்த காலத்தில் உடல் எடை குறைப்பதாக கூறி பலவித கருவிகள், மருந்துகளை விற்பனை செய்து வரும் நிறுவனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

எந்த ஒரு பிரச்சனைக்கும் குறுகிய கால தீர்வு பலன் தராது என்பதை மக்கள் மறந்துவிடுவதால் பலர் இதுபோன்ற நிறுவனங் களின் விளம்பரங்களை கண்டு மயங்கி தங்கள் பணத்தை வீணடித்து உடல் ஆரோக்கியத்தை கெடுத்து கொள்கிறார்கள். அந்த வகையில் எடை குறைப்புக்காக அறுவை சிகிச்சை செய்வது எலும்பு முறிவை ஏற்படுத்த வாய்ப்பு அதிகம் என்று ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

நம் நாடெங்கும் உடல் பருமனை குறைக்க இன்று பல மருத்துவமனைகள் மற்றும் கிளீனிக்குகள் அறுவை சிகிச்சைகளை செய்து வருகின்றன. உடல் பருமனால் மிகவும் மோசமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டவர்கள் தேவைப்பட்டால் தகுதியான மருத்துவர்களின் ஆலோசனைப்படி அறுவை சிகிச்சை செய்துகொள்ளலாம்.

அதேசமயம் உடல் எடையை விரைவாக குறைக்க வேண்டும் என்று லட்சக்கணக்கில் பணத்தை செலவு செய்து அறுவை சிகிச்சை செய்து கொள்வதை மக்கள் தவிர்க்க வேண்டும். பணத்திற்காக சில கிளீனிக்குகள் இதுபோன்ற அறுவை சிகிச்சைகளை செய்து வருகின்றன. அவர்களின் ஆசை வார்த்தையில் மயங்காமல் மக்கள் ஜாக்கிரதையுடன் செயல்பட வேண்டும்.

இதை மெய்பிக்கும் வகையில் ஜர்னல் ஆஃப் இன்டர்னல் மெடிசினில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில் உடல் பருமன் கொண்ட 2,007 நோயாளிகள் எடை இழப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டனர். அதே நேரத்தில் எந்தவித அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளாத சுமார் 2,000 பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில், இரைப்பை பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் அதிகம் இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். சுமார் 15 முதல் 18 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட இடைவெளியில், எலும்பு முறிவுகளுக்கான அதிக நிகழ்வு விகிதம் இரைப்பை பைபாஸ் அறுவை சிகிச்சையில் காணப்பட்டது. சுமார் 1,000 பேரில் 22.9 நபருக்கு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எலும்பு முறிவு என்பது அதிகரித்து வரும் ஒரு தீவிரமான பக்க விளைவு ஆகும். அறுவை சிகிச்சை மேற்கொள்ளும்போது உடல் முழு பரிசோதனை செய்ய வேண்டும். அறுவை சிகிச்சைக்கு பின்னரும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

முக்கியமாக உடல் எடை குறைப்புக்காக அறுவை சிகிச்சை மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது என்று அறிவுறுத்துகின்றனர்.

error: Content is protected !!