June 4, 2023

நாசா நிலவுப் பயணத்தின் விளைவுகள் என்ன? – ரமேஷ் கிருஷ்ணன் பாபு

மீண்டும் விண்வெளிப் போட்டிகள் துவங்குகின்றனவா? ஏறக்குறைய ஆம் என்றுதான் கூற வேண்டும். நாசா தனது தொடர்ச்சியான நிலவு ஆய்வுப் பயணத்தை அடுத்த ஆண்டில் துவங்கப்போகிறது. இதற்காக அமெரிக்க நாடாளுமன்றத்தில் $26 பில்லியன் டாலர்களைக் கேட்கிறது. ஆர்டெமிஸ் எனும் பெயரிலான திட்டத்தின் கீழ் இந்த நூற்றாண்டில் மனிதர்களை நிலவில் இறக்கவும், அதே போல செவ்வாய் கிரகத்திற்கு பயணம் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது. நிலவில் ஒரு மகளிரையும், கறுப்பினத்தவர் ஒருவரையும் களமிறக்கப் போகிறது நாசா.

நாசாவின் இந்த முயற்சிக்குப் பின்னால் 1969 ஆம் ஆண்டில் முதல் முறையாக நிலவிற்கு மனிதர்களை அனுப்பிய வெற்றிப் பரிசோதனை நிற்கிறது. சோவியத் யூனியன் யூரி காகரினை விண்வெளியில் நடக்க விட்டதும், ஸ்புட்னிக் கலத்தில் நாய் ஒன்றை விண்வெளியில் உலகை சுற்றி வரச் செய்ததும் அமெரிக்காவை ஆட்டிப்படைக்க அதிபர் கென்னடி நிலவிற்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியை அறிவித்தார். ஆனால் முதல் முயற்சியைத் தொடர்ந்து மீண்டும் நிலவிற்குச் செல்லவில்லை. ஆயினும் 1970 ஆம் ஆண்டுகளில் நிலவிற்கு சென்றதாகவும், அங்கு ரஷ்யர்கள் அவர்களுக்கு முன்பாகவே வந்திருந்ததாகவும்; அப்பயணம் தோல்வியில் முடிந்தது என்றும், எந்தவொரு வீரரும் உயிருடன் திரும்பவில்லை எனவும் கூறப்பட்டது.

அப்படியொரு அதிகாரப் பூர்வமற்ற காணொலி சுற்றில் இருப்பதும் வலைத்தளவாசிகளுக்கு நன்கு தெரியும். ஆனால் அது அப்போலோ 18 எனும் திரைப்படத்தின் காட்சிகள் என்பது தெரியுமா? இப்படம் அமெரிக்க அரசின் பாதுகாப்புத்துறை 1973 ஆம் ஆண்டில் இரகசியமாக நிலவிற்கு இரண்டு வீரர்களை அனுப்ப அங்கு அவர்கள் மர்மமான முறையில் தாக்கப்படுகின்றனர். மேலும் சோவியத் யூனியனின் நிலவு பயணக் கலம் ஒன்றையும் காண்கின்றனர். சோவியத் வீரர்கள் இறந்து போயுள்ளனர். இப்படிப் போகும் இப்படத்தின் காட்சிகள் நாசா ஏன் மீண்டும் நிலவிற்குச் செல்ல முயற்சி செய்யவில்லை என்பதை எடுத்துக்காட்டுவதாக கூறியது.

இத்தகைய தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வரவுள்ளது ஆர்டிமிஸ் எனும் நிலவிற்கான தொடர்ப்பயணம். இம்முறை நாசாவுடன் வேறு சில நாடுகளும் இணையவுள்ளன. ஏன் நாசா மீண்டும் களம் இறங்குகிறது என்பதற்கான காரணம் இந்தியா, சீனா போன்ற நாடுகள் நிலவிற்கு மனிதர்களை அனுப்பும் அளவிற்கு முன்னேறியுள்ளனர். சீனாவின் சாங்-4 எனும் கலம் நிலவின் தென்பகுதிக்கு சென்று ஆய்வு நடத்தி விட்டது. சூரிய ஒளிப்படராத இப்பகுதியில் தரையிறங்கவே இந்திய கலமான விக்ரம் முயன்று தரையில் மோதி தொடர்பிழந்தது. எனவே மீண்டும் மனிதர்களை அனுப்ப நாசா முயற்சி செய்கிறது. அது மட்டுமின்றி நீண்ட தூரம் விண்வெளியில் பயணம் செய்யவும், குறிப்பாக செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திலும் இந்த ஆர்டிமிஸ் தொடர்ப்பயணம் செயல்படுகிறது. இந்தியாவும் செவ்வாய் கிரகத்திற்கும், நிலவிற்கும் மனிதர்களை அனுப்பும் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே மீண்டும் நிலவின் தென்பகுதியில் கலத்தை இறக்கும் பயணமும் உள்ளது.

நிலவைப் பற்றிய பல்வேறு கதைகளில் ஒன்று அமெரிக்கா வெளிநாட்டு முக்கியப் பிரமுகர்களுக்கு நிலவிலிருந்து கொண்டு வந்த கற்களைப் பரிசாக அளித்ததாகவும் அப்படியொன்றை இந்தியப் பிரதமர் இந்திரா காந்திக்கும் அளித்ததாகவும் ஆனால் அக்கற்கள் ‘காணாமற்’ போய்விட்டன எனவும் கூறப்படுகிறது. கற்களை யார் திருடப்போகிறார்கள் என்கின்ற கேள்வி இருக்க அக்கற்கள் நிலவின் உயிரினம்; வெறும் கற்கள் அல்ல என்பது போன்ற தகவல்களும் மிரளச் செய்யும்.

இன்றுவரை நாசா நிலவில் செய்த ஆய்வுகளின் முழுத்தகவல்களையும் சொல்லிவிட்டதாக யாரும் நம்பவில்லை. அமெரிக்காவின் ஏரியா-51 இன் மர்மங்கள் முழுமையாக விலகாதவரையில் எதுவும் நம்பகமானதாக ஏற்கப்படாது; குறிப்பாக அமெரிக்க மக்களுக்கு. இந்தியாதான் நிலவில் நீர் இருப்புக் குறித்து உறுதியாகத் தெரிவித்தது. இப்போதைய அமெரிக்கப் பயணத்தில் அந்த நீராதாரங்களைக் குறித்தும் ஆராயப்படும் என்று தெரிகிறது. எனவே அடுத்த இரண்டு அல்லது மூன்றாண்டுகளில் நிலவின் மர்மங்கள் விலகலாம். மேலும் விண்வெளி ஆய்விற்காக நீண்டப்பயணங்களும் அண்டங்கள் குறித்தும், அயல் கிரகத்தில் ‘மனிதர்கள்’ உண்டா எனும் கேள்விக்கும் பதில்களைத் தரலாம். எனவே ஆர்வத்துடன் காத்திருங்கள்.

ரமேஷ் பாபு