நவம்பர் 14ல் ரசகுல்லா தினம் -மேற்கு வங்கத்தில் கோலாகல ஏற்பாடு!

நவம்பர் 14ல்  ரசகுல்லா தினம் -மேற்கு வங்கத்தில் கோலாகல ஏற்பாடு!

குலாப் ஜாமூனுக்கு அடுத்த படியாக பலரும் விரும்பி சாப்பிடும் ரசகுல்லா-வுக்கு காப்பிரைட் வாங்கியதையொட்டி வரும் நவம்பர் 14ஆம் தேதியை ரசகுல்லா தினமாக கொண்டாட மேற்கு வங்க அரசு தீர்மானித்துள்ளது.

ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு குறிப்பிட்ட பொருள் பிரபலமாக உள்ளன. உதாரணத்துக்கு , தமிழ் நாட்டில் காஞ்சிபுரம் பட்டு மற்றும் மதுரை சுங்கடி சேலை ஆகிய துணி வகைகள்,  இமாசலப் பிரதேச தேநீர், கூர்க் ஆரஞ்ச்,கர்நாடக மாநிலத்தில் மைசூர் பட்டு  போன்றவைகளை சொல்லலாம். அந்த பொருட்களுக்கு பூகோள குறியீடு என்னும் ஜிஐ மார்க் (GEOGRAPHICAL INDICATION) அளிக்கபட்டு வருகிறது. அவ்வகையில் கடந்த வருடம் நவம்பர் மாதம் 14 ஆம் தேதி மேற்கு வங்க இனிப்பான ரசகுல்லாவுக்கு ஜிஐ மார்க்கை உலக வர்த்தக கழகம் அளித்தது.

முன்னதாக பாலில் செய்யப்படும் இனிப்பு வகை உணவுப் பொருளான ரசகுல்லா, தங்கள் மாநிலத்தின் கண்டுபிடிப்பே என்று கூறி ஆண்டுதோறும் ’ரசகுல்லா திவாஸ்’ என்ற பெயரில் ஒரு நாள் கொண்டாட்டங்களை ஒடிசா மாநில அரசு கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கியது. ஒடிசாவின் பூரி நகரில் 13-ம் நூற்றாண்டிலேயே ரசகுல்லா இருந்ததாகவும், பூரி ஜெகன்னாதருக்கு, லட்சுமி தயார் ரசகுல்லா கொடுத்ததாக வரலாறு இருப்பதாகவும் ஒடிசா கூறிவந்தது. ரசகுல்லாவின் வரலாற்றைக் கண்டுபிடிக்க ஒரு தனி கமிட்டியே நியமிக்கப்படும் என்று கடந்த 2015-ல் ஒடிசாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் அப்போதைய அமைச்சர் பிரதீப் குமார் கூறினார்.

ஆனால், ரசகுல்லா தங்கள் மாநிலத்தின் உணவே என்று கூறி மேற்குவங்கம் களத்தில் இறங்கியது. ரசகுல்லாவானது திரிந்த பாலில் செய்யப்படுவது என்றும், திரிவடைந்த பாலானது சுத்தமில்லா ததாக் கருதப்படும் நிலையில், அது கடவுளுக்குப் படைக்கப்பட வாய்ப்பே இல்லை என்று மேற்கு வங்கம் வாதாடியது. இந்த விவகாரத்தைச் சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்று மேற்குவங்க மாநில உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் அப்துர் ரசாக் மோலா கூறியிருந்தார். மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த பிரபல இனிப்பு தயாரிப்பாளர் நபீன் சந்திர தாஸ், கடந்த 1868-ல் ரசகுல்லாவைக் கண்டுபிடித்ததாகவும் அம்மாநிலம் கூறிவந்தது.

மேற்குவங்க மாநில உணவு கலாசாரத்தின் அடையாளங்களுள் ஒன்று ரசகுல்லா என முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி தொடர்ந்து கூறிவந்தார். இந்தநிலையில்தான் மேற்குவங்க மாநிலத்துக்கு ரசகுல்லாவுக்கான புவிசார் குறியீடு கிடைத்து வரும் நவம்பர் மாதம் இந்நிகழ்வு முடிந்து ஓராண்டாகிறது. இதைத்தான் விமரிசையாக கொண்டாட மேற்கு வங்க அரசு தீர்மானித்துள்ளது.

கொல்கத்தா நகரில் மஸ்தி ஹப் என்னும் பெயரில் அரசு சார்பில் மாபெரும் இனிப்பு கண்காட்சி யகம் உள்ளது. இந்த கண்காட்சியகம் கொல்கத்தா நகரில் நியூடவுன் பகுதியில் உள்ள இகோ பார்க் வளாகத்தில் உள்ளது. இங்கு உலகெங்கும் உள்ள இனிப்புக்கள் விற்பனைக்கு கிடைக்கும். வரும் நவம்பர் 14 ஆம் தேதி அரசு சார்பில் ரசகுல்லா தினம் கொண்டாட்டம் நடைபெற உள்ளதால் மஸ்தி ஹப் அன்றைய தினம் பலவகை ரசகுல்லா வை செய்து பார்வைக்கு வைக்க உள்ளது.

Related Posts