சர்வதேச அளவில் எக்கச்சக்கமான பெண் விமானிகள் கொண்ட நாடு – இந்தியா!

சர்வதேச அளவில் எக்கச்சக்கமான பெண் விமானிகள் கொண்ட நாடு – இந்தியா!

சர்வதேச அளவில் எக்கச்சக்கமான பெண் விமானிகள் கொண்ட நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. மேலும் உலகின் சராசரி பெண் விமானிகளின் எண்ணிக்கையை விட இந்தியாவில் பெண் விமானிகளின் எண்ணிக்கை 2 மடங்கு அதிகம் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

உலகில் பெண் விமானிகள் குறித்து ஐ.எஸ்.ஏ + 21 (ISA+21) எனப்படும் சர்வதேச பெண் விமானிகள் சமூகம் (International Society of Women Airline Pilots) என்ற அமைப்பு உலக பெண் விமானிகள் தொடர்பாக ஆய்வு ஒன்றை நடத்தியது. அதன் முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. அதன்படி உலகளவில் பெண் விமானிகளின் எண்ணிக்கை 5.4 சதவீதம். அதில் இந்தியாவில் மட்டும் பெண் விமானிகளின் எண்ணிக்கை 12.4 சதவீதம் என அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

இந்தியாவில் உள்ள 8,797 விமானிகளில் 1,092 பேர் பெண்கள். அவர்களில் 385 பேர் கேப்டனாக பணிபுரிகிறார்கள். அதேசமயம் உலகின் மொத்த விமானிகளின் எண்ணிக்கை 1.5 லட்சமாகும். அதில் பெண் விமானிகளின் எண்ணிக்கை 8,061. அதிலும் கேப்டனாக பணிபுரியும் பெண் விமானிகளின் எண்ணிக்கை 2,190 ஆகும்.

இதன் மூலம் பெண் விமானிகளின் உலக சராசரி எண்ணிக்கையை விட இந்தியாவில் பெண் விமானிகளின் எண்ணிக்கை 2 மடங்கு அதிகமாக உள்ளது தெரியவந்துள்ளது.

இந்திய விமான நிறுவனங்களில் டில்லியின் பிராந்திய விமான நிறுவனமான ஜூம் அதிக சதவீதத்தில் பெண் விமானிகளை நியமனம் செய்துள்ளதாக ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. அதன்படி ஜூம் நிறுவனத்தில் உள்ள 30 விமானிகளில் 9 பேர் பெண்கள். இது ஜூம் நிறுவனத்தின் விமானிகளில் 30 சதவீதம் ஆகும்.

அதற்கு அடுத்தப்படியாக 13.9 சதவீதத்துடன் இண்டிகோ நிறுவனம் இரண்டாம் இடத்தில் உள்ளது. இண்டிகோ நிறுவனத்தின் 2,689 விமானிகளில் 351 பேர் பெண்கள். அதேப்போல் ஸபைஸ் ஜெட் நிறுவனத்தில் 113 பெண் விமானிகளும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் 231 பெண் விமானிகளும் பணியாற்றுகிறார்கள்.

ஏர் இந்தியா நிறுவனத்தில் பணிபுரியும் 1,710 விமானிகளில் 217 பேர் (12.7 சதவீதம்) பெண்கள் என்று ஆய்வறிக்கை கூறுகிறது.

அமெரிக்காவின் யுனைட்டட் ஏர்லைன்ஸ், அமெரிக்கன் ஏர்லைன்ஸ், டெல்டா ஏர்லைன்ஸ் மற்றும் சவுத்வெஸ்ட் விமான நிறுவனங்கள் 100க்கும் அதிகமாக பெண் விமானிகளை நியமித்துள்ளன. ஆனால் அந்த நிறுவனங்களின் பெண் விமானிகள் எண்ணிக்கை 10 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது.

இந்த ஆய்வறிக்கை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இண்டிகோ விமான நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில் ‘‘கடந்த 5 வருடங்களில் பெண் விமானிகளின் எண்ணிக்கை 80ல் இருந்து 330 ஆக உயர்ந்துள்ளது. எங்கள் நிறுவனத்தின் இரு பெண் விமானிகள் மத்திய சிவில் விமான போக்குவரத்து பொது இயக்குநரகத்தின் ஆப்பரேஷன் இன்ஸ்பெக்டர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்’’

‘‘பெண் விமானிகளின் குழந்தைகளுக்காக காப்பக வசதி செய்து தந்துள்ள ஒரே நிறுவனம் இண்டிகோ தான். மேலும் பெண் விமானிகள் கர்ப்பமாக இருக்கும் போது அவர்களுக்கு அலுவலக பணிகளும் அதற்கென தனி சம்பளமும் வழங்கப்படுகிறது’’ என இண்டிகோ நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

Related Posts

error: Content is protected !!