குடிநீரில் கழிவு நீர்: கேன் வாட்டர் மாப்பியாக்கள் உத்தியா?
சென்னையில் தொழிற்சாலைகள் அதிகம் இருக்கும் 45 இடங்களில் கடந்த ஆண்டே நடத்தப்பட்ட சோதனையில், 25 இடங்களில் நிலத்தடி நீரில் குரோமியம், காட்மியம், லெட், நிக்கல் போன்ற உடலுக்குப் பெரும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய கன உலோக கனிமங்கள் அளவுக்கு அதிகமாகக் கலந்திருப்பது கண்டறியப்பட்டது. அதிர்ச்சியான செய்தி என்னவென்றால், “மக்கள் பலர் அந்தத் தண்ணீரைத்தான் குடிக்கிறார்கள். இப்படித் தொடர்ந்து குடித்தால், எலும்புச் சிதைவு, சிறுநீரகக் கற்கள், நரம்பு மண்டல பாதிப்பு, புற்றுநோய், அலர்ஜி, தலைவலி, ஜீரணக் கோளாறு போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது” என்றார்கள் ஆய்வாளர்கள்.

அதையடுத்து இப்போது வரை சென்னை நகரின் பல்வேறு பகுதிகளி குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தும் அரசு அதிகாரிகளும், அமைச்சர்களும் அதை மறுத்தனர். ஆனால், அண்மையில் ஸ்டான்லி ஹாஸ்பிட்டலில் திடீர் வாந்தி,மயக்கத்துடன் எக்கச்சக்கமானோர் அட்மிட் ஆவதும், அப்படி அனுமதிக்ப்ட்டவர்களில் உயிரிழந்த நான்கு பேர்களின் உடற்கூராய்வு அறிக்கை மூலம் ‘புட் பாய்சன்’ காரணமாக அவர்கள் இறந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன்மூலம், குடிநீரின் தரம் சரியில்லை என்பது நிரூபணமாகியுள்ளது.இதுபோன்ற சம்பவங்கள் சென்னை மட்டுமின்றி மதுரை, திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் அடிக்கடி நடக்கின்றன.
மக்களுக்கு தரமான குடிநீர் வழங்குவது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முக்கிய கடமைகளில் ஒன்றாகும். அதுவும் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் விநியோகிக்கப்படும் குடிநீரில் கழிவுநீர் கலப்பது என்பது கேட்கவே காது கூசும் சம்பவமாகும். குடிநீர் வழங்கும் குழாய்களில் உடைப்பு மற்றும் குடிநீர் விநியோக கட்டமைப்பில் உள்ள பிரச்சினைகள் காரணமாக அசுத்தம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. கேன் மூலம் குடிநீர் விற்பனை செய்யும் நடைமுறை அதிகரித்து, அவர்களது லாபநோக்கம் சமூகவிரோத செயல்களில் ஈடுபடும் அளவுக்கு அதிகரித்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

‘குடிநீர் மாபியா’க்கள் என்று சொல்லப்படுவோர், வேண்டுமென்றே குடிநீர் குழாய்களில் கழிவுநீரை கலந்து அனுப்பி, அப்பகுதியில் தங்கள் விற்பனையை அதிகரிக்கும் உத்தியை செய்கிறார்கள் என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த குற்றச்சாட்டை அரசு சார்பில் எளிதில் எடுத்துக் கொள்ளக் கூடாது. தவறு செய்பவர்களை கண்டறிந்து சட்டப்படி கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும்.
அதுமட்டுமின்றி, மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரின் தரத்தை உறுதி செய்வது அரசின் கடமை. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய விதிமுறைப்படி, 100 மி.லி., குடிநீரில் கோலிஃபார்ம் பாக்டீரியா அளவு 5000 அல்லது அதற்கு குறைவாக இருக்க வேண்டும். குடிநீரின் பிஎச் அளவு 6 முதல் 9-க்குள் இருக்க வேண்டும். கரைந்துள்ள ஆக்ஸிஜன் அளவு லிட்டருக்கு 4 மி.கி., அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.
தமிழகம் முழுக்க குடிநீரின் தரத்தை சோதித்து இந்த தரத்தில் குடிநீர் விநியோகிப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். அப்போது தான் ஆளும் அரசை மக்கள் நலன் காக்கும் அரசு என்று ஏற்க முடியும்.


