விஜய் அவர்களே.. தாங்கள் செய்வதும், சொல்வதும் இன்னதென்று தெரிகிறதா
நடிகர் விஜய், அரசியல் அரங்கில் தனது அடுத்த அடியை எடுத்து வைத்திருக்கிறார். அதன் தொடக்கமாக, கரூரில் நடந்த நிகழ்வைத் தொடர்ந்து அவர் வெளியிட்ட காணொளிக் காட்சி, தமிழக அரசியல் வெளியில் பல கேள்விக் கணைகளைத் தொடுத்துள்ளது. ‘சி.எம். சார்… பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். தொண்டர்கள் மீது கை வைக்காதீர்கள். நான் ஒன்று வீட்டில் இருப்பேன் அல்லது ஆபீசில் இருப்பேன். என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்’ – இந்தக் காணொளி உரையாடல், ஒரு நடிகரின் அனல் பறக்கும் வசனமா, அல்லது ஓர் அரசியல் தலைவரின் அஞ்சாத அறைகூவலா?
இதே அறைகூவலை, அதிகாரம் தனது உச்சத்தில் இருந்த செல்வி. ஜெயலலிதா அவர்களது ஆட்சிக் காலத்தில் விஜய் அவர்கள் முன்வைத்திருக்க முடியுமா? அப்போது, “நான் ஆபீஸில் இருப்பேன், என்னை வந்து என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்” என்று சொல்லக்கூடிய ஒரு துணிச்சலான அவகாசத்தை அன்றைய அரசு கொடுத்திருக்கத்தான் முடியுமா? தற்போதைய முதல்வர் மீது நேரடியாகப் புகார் எதுவும் இல்லாத நிலையில், “என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்” என்று சவால் விடுவது எதற்காக? இது உண்மையிலேயே சவாலா, அல்லது மக்கள் மத்தியில் அனுதாபத்தை உருவாக்கும் நாடகமா?
போலீஸ் ஸ்டேஷன் ஏன் இல்லை?
உங்கள் தொண்டர்களுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக நீங்கள் உணர்ந்தீர்கள் என்றால், இரவோடிரவாகக் கரூரிலிருந்து சென்னை திரும்பியதும், ஓர் அரசியல் தலைவர் செய்ய வேண்டிய முதல் பணி என்ன? நேராக டிஜிபி அலுவலகம் சென்று, சட்டம் ஒழுங்கு பிரச்சினையை எடுத்துரைத்து, உங்கள் தொண்டர்களுக்குப் பாதுகாப்பு கோரியிருக்கலாமே? அதை விடுத்து, நீங்கள் நேராக வீட்டுக்குச் சென்றது ஏன்?
“யாரைக் கண்டும் அச்சப்படத் தேவையில்லை” என்று நீங்கள் பேசும்போது, ஒதுக்கப்பட்ட இடத்தில் பேசுவதைத் தவிர வேறு எதையுமே நீங்கள் செய்யாதபோது, காவல்துறை அதிகாரிகளைச் சந்திப்பதில் என்ன தயக்கம்? நீதியையும் சட்டத்தையும் நம்பிய ஒரு தலைவர் செய்ய வேண்டிய முதல் காரியத்தை விடுத்து, காணொளி வெளியிட்டு உணர்ச்சிவசப்படுத்துவது ஏன்?
தொண்டர்களின் தியாகம்; தலைவரின் அலட்சியம்
உங்களது தொண்டர்களை அரசு எதுவுமே செய்யாதபோதும், “தொண்டர்கள்மீது கை வைக்காதீர்கள்” என்று நீங்கள் முதல்வருக்கு வேண்டுகோள் விடுப்பதில், உங்கள் பாசம் தெரிகிறது. பாராட்டுகிறோம். ஆனால், அதே தொண்டர்களைத்தான் நீங்கள் மணிக்கணக்கில் பசி, தாகத்தோடு வெயிலில் கால்கடுக்கக் காக்க வைத்தீர்கள். மனிதாபிமானமுள்ள யாராவது இப்படிச் செய்வார்களா?
காலை 8:45 மணிக்கு நாமக்கல்லில் இருக்க வேண்டிய நீங்கள், அந்த நேரத்தில்தான் சென்னையிலிருந்தே புறப்பட்டீர்கள் என்று கூறப்படுகிறது. அதற்கான நியாயமான காரணம் என்ன? உங்கள் தாமதமே கூட்டத்தின் சலசலப்புக்கும், அதன் காரணமாக நடந்த அசௌகரியங்களுக்கும் முக்கியக் காரணம் என்னும் உண்மையை இப்போதும் கூட ஒப்புக் கொள்ள மறுக்கும் உங்கள் மனநிலை என்ன மனநிலை?
நீங்கள் உங்கள் சொகுசு வாகனத்தின் உள்ளே இருந்துகொண்டு, உள் விளக்குகளை அணைத்தும், எரியவிட்டும், மீண்டும் அணைத்தும் தொண்டர்களிடம் விளையாட்டுக் காட்டிய மனநிலை அதிர்ச்சி அளிக்கிறது. இந்தக் கேள்விகளைக் கேட்கத் தூண்டியதே அந்த மனநிலைதான்.
காலந்தவறிய சரித்திரச் சாதனை
இதுவரை மக்கள் பார்த்த எந்தத் தலைவரும் தனது முதல் பொதுக்கூட்டத்திற்கே இத்தனை காலதாமதமாகச் சென்றதில்லை. அந்த சரித்திர சாதனையை நீங்கள்தான் செய்திருக்கிறீர்கள். அரசியல் சரித்திரத்தின் அன்றைய பக்கத்தில், காலம் தவறாமையின்மை என்ற கறுப்பு மையைத் தாராளமாக அள்ளிப் பூசிவிட்டீர்கள்.
உங்கள் படப்பிடிப்புகளுக்கெல்லாம் இப்படித்தான் ஏற்றுக்கொள்ளவே முடியாத அளவுக்குக் காலதாமதமாகச் சென்றீர்களா? நிச்சயம் சென்றிருக்க மாட்டீர்கள். அப்படியிருக்க, அரசியல் கூட்டத்தில் மட்டும் ஏன் இந்த அலட்சியம்? அதை மக்கள் பொறுத்துக் கொள்வார்கள் என்று எப்படி நம்பினீர்கள்? இப்போது உங்களுக்கு முட்டுக் கொடுப்பதற்காக வருவோரில், சில விமர்சகர்கள்கூட உங்கள் தாங்க முடியாத தாமதம் பற்றி வாய் திறக்க மறுப்பதன் மௌனத்திற்குக் காரணம் என்ன?
கடைசியாக, திரு. விஜய் அவர்களே, ஒரேயொரு கேள்விதான்: நீங்கள் நீங்களாகவேதான் இயங்கிக் கொண்டிருக்கிறீர்களா? அல்லது யாரோ ஒருவரின் கட்டுப்பாட்டில் இருந்து, ஒரு திட்டமிட்ட நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறீர்களா? உங்களின் திடீர் ஆதரவாளர்களையும், உங்களின் வசீகரத் தோற்றத்துக்கான முயற்சிகளையும் பார்க்கும்போது இப்படித்தான் கேட்கத் தோன்றுகிறது. வேறு வழி? தெரியவில்லையே!


