32°C
விளம்பரம்
Advertisement

கர்நாடக இசை கலைஞர் பாலமுரளிகிருஷ்ணா காலமானார்

admin சேலம் Published: November 22, 2016 4 நிமிட வாசிப்பு மறக்க முடியுமா
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice



மங்களம்பள்ளி பாலமுரளி கிருஷ்ணா ஆந்திர மாநிலத்தில் பிறந்து. தமிழ்நாட்டில் வாழும் ஒரு கர்நாடக இசைக் கலைஞராவார். இவர் பாடகர் மட்டுமல்லாமல், சிறந்த பாடல் இயற்றுநர் மற்றும் மாபெரும் இசைக்கருவி வல்லுனரும் ஆவார். “பத்ம ஸ்ரீ”, “பத்ம பூஷன்”, “பத்ம விபூஷன்” மற்றும் “சங்கீத கலாநிதி” போன்ற இசையுலகின் உயரிய விருதுகள் அனைத்தையும் பெற்று, சங்கீத சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியாக விளங்கும் பாலமுரளிகிருஷ்ணா, தன்னுடைய வசீகரக்குரலால் சிறு வயதிலேயே ‘இசைமேதை’ என புகழப்பட்டார்.

balamuralai naov 22

பாலமுரளி கிருஷ்ணா, 1930 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 06 ஆம் நாள், இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின் வட கிழக்கு பகுதியிலுள்ள கிழக்கு கோதாவரி மாவட்டத்தில், சங்கரக்குப்பம் என்ற ஊரில் மங்களம்பிள்ளை பட்டா பிராமையாவுக்கும், சூர்யகாந்தம் மாவிற்கும் மகனாகப் பிறந்தார். இவரின் தந்தை, தாய் இருவருமே மிகச் சிறந்த இசைக் கலைஞர்கள் ஆவார்கள். அவருடைய தந்தையாகிய மங்களம்பிள்ளை பட்டாபிராமையா ஒரு சிறந்த இசை யமைப்பாளராகவும், புல்லாங்குழல் வாசிப்பதில் சிறப்புப் பெற்றவராகவும், திகழ்ந்தார். இவருடைய தாய் சூரியகாந்தம்மா, வயலின் மற்றும் வீணை வாசிப்பதில் சிறப்புப் பெற்றவராக விளங்கினார். இவர் குழந்தையாக இருக்கும் பொழுதே இவருடைய தாய் இறந்துவிடவே, தன்னுடைய தந்தையின் அரவணைப்பில் இருந்தார். பின்னர், கர்நாடக இசைப் பாடகரான “ஸ்ரீ பருபள்ளி ராமகிருஷ்ணய்யா பந்துலுவின் (இவர் கர்நாடக இசை மற்றும் பாரம்பரிய தென்னிந்திய இசையில் புகழ்பெற்று விளங்கிய தியாகராஜரின் சீடர் ஆவார்) கீழ் வளர்ந்தார்.

ஸ்ரீ பருபள்ளி ராமகிருஷ்ணய்யா பந்துலுவின் வழிகாட்டுதலில், இளம் வயதிலேயே கர்நாடக இசையில் தேர்ச்சி பெற்று விளங்கிய முரளிகிருஷ்ணா தன்னுடைய எட்டு வயதில் ‘தியாகராஜ ஆராதனை’ என்ற முழு நீள இசை நிகழ்ச்சியை விஜயவாடாவில் முதன் முதலில் மேடையில் அரங்கேற்றினார்.

இவ்வளவு சிறுவயதில் முரளிகிருஷ்ணாவின் மனம்மயக்கும் இசையில் நெகிந்து போன ஹரிகதை மேதை முசூநுரி சூரியநாராயண மூர்த்தி பாகவதர் கிருஷ்ணாவின் பெயருக்கு முன்னால் ‘பாலா’ என்ற சொல்லை இணைத்தார். அன்று வரை ‘முரளிகிருஷ்ணா’ என அழைக்கப்பட்ட அவர், பிறகு ‘பாலமுரளிகிருஷ்ணா’ என அழைக்கப்பட்டு மிகவும் பிரபலமானார்.

தன்னுடைய இளம் வயதிலேயே இசைப் பணியைத் தொடங்கிய பாலகிருஷ்ணா, பதினைந்து வயதில் கர்நாடக இசையின் ராகங்களில் ‘ச-ரி-க-ம-ப-த-நி’ என்ற ஏழு சுரங்களையும் கொண்ட மேளகர்த்தா இராகத்தில் 72 கீர்த்தனைகளைத் தொகுத்து வழங்கினார். வர்ணங்கள், கீர்த்தனைகள், ஜாவளிகள், தில்லானாக்கள் என்று 400 க்கும் மேற்பட்ட உருப்படிகளை தமிழ், தெலுங்கு மற்றும் சமஸ்கிருத மொழிகளில் உருவாக்கியுள்ளார். தாய்மொழி தெலுங்கு என்றாலும், அவர் தமிழ், கன்னடம், சமஸ்கிருதம், மலையாளம், இந்தி, பஞ்சாபி, வங்கம் என பல மொழிகளைக் கற்றுத் தேர்ந்த ‘பன்முக மேதை’ ஆவார். கர்நாடக இசைப் பாடகராக புகழ்பெற்று விளங்கிய அவர், பிறகு கஞ்சிரா, மிருதங்கம், வயோலா மற்றும் வயலின் வாசிக்கவும் தொடங்கினார்.

இந்தியாவில் மட்டுமல்லாமல், வெளிநாட்டவர் மத்தியிலும் இந்திய இசையை கொண்டு சேர்ந்துள்ளார். அமெரிக்கா, கனடா, பிரிட்டன், இத்தாலி, பிரான்ஸ், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, ரஷ்யா, மத்திய கிழக்கு, ஆசியா மற்றும் பல நாடுகளில் தன்னு டைய இசை நிகழ்ச்சியை அரங் கேற்றியுள்ளார். புகழ் பெற்ற பீம்ஷன் ஜோஷி, ஹரிபிரசாத், செளராஷியா, கிஷோரி மற்றும் அமோம்கர் போன்றோருடன் இணைந்து பணி யாற்றியுள்ளார்.

கர்நாடக சங்கீதத்தை சினிமாவில் வெற்றிகரமாகப் பயன்படுத்தியவர்களுள் இவரும் ஒருவர். பால முரளிகிருஷ்ணா தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற மொழித் திரைப்படங்களில் பின்னணிப் பாடகராகவும், மற்றும் ஒரு சில திரைப்படங்களில் நடித்தும் உள்ளார். 1967 ஆம் ஆண்டு, ஏ. வி. எம். தயாரிப்பில் வெளிவந்த ‘பக்தப் பிரஹலாதன்’ என்ற திரைப்படத்தில் நாரதராக நடித்துள்ளார். 1976 ஆம் ஆண்டு, இவருக்கு சிறந்த பின்னணிப் பாடகருக்கான ‘தேசிய திரைப்பட விருது’ (ஹிமாத்ரி சுதே பஹிமம்’ என்ற பாடலுக்காக) மற்றும் 1987 ஆம் ஆண்டு சிறந்த இசை அமைப்பாளருக்கான ‘தேசிய திரைப்பட விருது’ (மத்வாச்சார்யா’ என்ற திரைப்படத்திற்காக) வழங்கப்பட்டது.

1978 ஆம் ஆண்டு ‘சங்கீத கலாநிதி விருது’, சென்னை மியூசிக் அகாடெமி என்ற அமைப்பால் வழங்கப்பட்டது.

2002 ஆம் ஆண்டு “இசைப் பேரறிஞர்” விருது தமிழ் இசைச் சங்கம் மூலமாக வழங்கப்பட்டது.

011 ஆம் ஆண்டு வாழ் நாள் சாதனையாளருக்கான “குளோபல் இந்தியன் மியூசிக் அகாடெமி” விருது வழங்கப்பட்டது.

1971 ஆம் ஆண்டு “பத்மஸ்ரீ” விருது இந்திய அரசால் வழங்கப்பட்டது. 1991 ஆம் ஆண்டு மத்திய அரசால் “பத்ம விபூஷன்” விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

பாலமுரளிகிருஷ்ணா நல்ல குரல்வளம் மட்டுமன்றி, பலமொழிகளில் சிறந்த உச்சரிப்புடன் அழகாகப் பாடும் வல்லமை பெற்றவருமாவார். உண்மையான கர்நாடக சங்கீதத்தை மக்கள் ரசனைக்கு எடுத்துச் சென்ற முரளிகிருஷ்ணா மற்றவர்கள் இதுவரை எடுத்தாளாத இராகங்களை இயற்றிப் பாடியிருக்கிறார். இந்திய இசையை இந்தியாவில் மட்டுமல்லாமல், வெளிநாட்டவர் மத்தியிலும் கொண்டு சென்ற சங்கீத மாமேதை பாலமுரளிகிருஷ்ணாவின் இசைப் பணிகள் மகத்தானவையேயாகும்.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்