32°C
விளம்பரம்
Advertisement

உலக கருணை நாள்:அன்பும் இரக்கமும் நிறைந்த வாழ்வே மனிதநேயத்தின் வெற்றி!

admin சேலம் Published: November 13, 2026 5 நிமிட வாசிப்பு Exclusive
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice



இன்றைய நவீன இயந்திரத்தனமான காலகட்டத்தில் மனித மனம் இயந்திரங்களை விடவும் வேகமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த வேகத்தில் மனிதனுக்குள் இருக்க வேண்டிய அடிப்படையான உணர்வான கருணையும் இரக்கமும் தொலைந்து போய்விட்டனவோ என்ற ஐயம் எழுகிறது. கருணை என்பது பிற உயிர்களின் துன்பத்தையும் வலியையும் கண்டு மனம் இளகி, அவர்களுக்கு உதவத் துடிக்கும் உன்னதமான மனிதப் பண்பாகும்; இது வெறும் பரிதாப உணர்வோடு நின்றிடாமல், துயரத்தில் இருப்பவர்களின் துயர் துடைக்கச் செயல்படும் செயல்திறனையும் உள்ளடக்கியது. அன்பு, இரக்கம், மன்னிப்பு, மற்றும் பிறர் நலன் பேணுதல் ஆகியவற்றின் அடித்தளமாக விளங்கும் கருணை, சாதி, மதம், மொழி, இனம் என்ற எவ்வித பாகுபாடுமின்றி மனிதர்கள் மட்டுமல்லாது உலகின் அனைத்து ஜீவராசிகளிடமும் காட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.தனிமனித அளவில் மன அமைதியையும், அகங்காரமற்ற தூய உள்ளத்தையும் தரும் இப்பண்பு, சமூக அளவில் பகைமை, வன்முறை, சுயநலம் ஆகியவற்றை நீக்கி அமைதியையும் நல்லிணக்கத்தையும் உருவாக்குகிறது; சுருக்கமாகக் கூறின், சுயநலத்தைக் கடந்து பிறர் துன்பத்தைத் தன் துன்பமாகக் கருதிப் போக்கும் கருணையே இவ்வுலகை அழியாமல் காக்கும் உயிர்நாடியாகும். இந்தச் சூழலில் தான் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 13 ஆம் நாள் உலக கருணை நாளாக உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. ஒரு நாளின் அடையாளமாகத் தொடங்கும் இந்த நல்லறம், மனிதர்களின் வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டும் என்ற உயர்ந்த நோக்கோடு இந்தச் சிறப்புக் கட்டுரை அலசுகிறது.

உலக கருணை நாளின் வரலாற்றுப் பின்னணியும் நோக்கமும்

உலகளாவிய அளவில் மனித நேயத்தை வளர்க்கும் நோக்கில் கடந்த பல ஆண்டுகளாக நவம்பர் 13 ஆம் தேதி உலக கருணை நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. லூயிஸ் பர்பிட்-டன்ஸ் மற்றும் டேவிட் ஜாமிலி ஆகிய இரண்டு பெருமைக்குரிய மனிதநேய உறுப்பினர்கள் இணைந்து கருணை இயக்கத்தை (World Kindness Movement) ஆரம்பித்தனர்.

இந்த இயக்கத்தின் மிக முக்கியமான நோக்கம், நாடு முழுவதும் எல்லைகளைக் கடந்து நல்ல செயல்களை முன்னிலைப்படுத்துவதும், மனிதர்களின் இதயங்களில் அன்பை விதைப்பதுமாகும். ஒரு நாள் மட்டும் கருணையைக் கடைப்பிடித்துவிட்டு மற்ற நாட்களில் அதனை மறந்துவிடாமல், மனித வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும் கருணை மலரச் செய்ய வேண்டும் என்பதே இதன் அடிப்படைத் தத்துவமாகும்.

2026 ஆம் ஆண்டிற்கான உலக கருணை நாள் கருப்பொருள்

ஒவ்வொரு ஆண்டும் உலக கருணை நாளுக்கென்று பிரத்யேகமான கருப்பொருள் (Theme) அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2026 ஆம் ஆண்டிற்கான உலக கருணை நாளின் கருப்பொருள் “From One Day To Every Day” அதாவது “ஒரு நாளில் இருந்து ஒவ்வொரு நாளுக்கு” என்பதாகும்.

இந்த வாசகம் வெறும் வார்த்தை அல்ல; இது நம் வாழ்வியல் மாற்றத்திற்கான ஒரு அறைகூவல். இன்று ஒரு நாள் பிறருக்கு உதவி செய்துவிட்டு, மீதமுள்ள நாட்களில் சுயநலமாக வாழ்வது உண்மையான கருணை ஆகாது. நவம்பர் 13 இல் தொடங்கும் இந்த நற்சிந்தனை, ஆண்டின் மு 365 நாட்களும் நமது அன்றாடச் செயல்களில் பிரதிபலிக்க வேண்டும் என்பதை இந்தத் தீம் ஆழமாக வலியுறுத்துகிறது.

உடலுக்கும் மனதுக்கும் கருணை செய்யும் நன்மைகள்

கருணை என்பது பிறருக்கு நாம் செய்யும் உதவி மட்டுமல்ல; அது நம் உடலுக்கும் மனதுக்கும் நாம் சேர்த்துக்கொள்ளும் மிகப்பெரிய செல்வம் ஆகும். நாம் அன்புடன் மற்றவர்களை அணுகும் போது, அதே அன்பு ஏதோ ஒரு வடிவில் நமக்கும் திரும்பக் கிடைக்கிறது. இந்த நேர்மறை ஆற்றல் நம் மனதை அளவற்ற மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது.

மனம் மகிழ்ச்சியடையும் போது மனிதனின் ஒட்டுமொத்த உடல் நலமும் மேம்படுகிறது. நம் பாரம்பரியத்தில் சொல்லப்படும் “வாழ்்க வளமுடன்” என்ற வாழ்த்தின் ஆழம் இதில்தான் அடங்கியுள்ளது. மனம் மகிழ்ச்சியடையவும், உடல் எந்தவித நோயுமின்றி ஆரோக்கியமாக வளரவும் கருணை குணமே அடித்தளமாக அமைகிறது.

கருணையும் உடல் நலமும்: அறிவியல் மற்றும் உளவியல் உண்மைகள்

மருத்துவ மற்றும் உளவியல் நிபுணர்களின் ஆய்வுகளின்படி, நாம் இரக்க உணர்வோடு இருக்கும் போதும் பிறருக்கு உதவும் போதும் மூளையில் மகிழ்ச்சிக்கான ஹார்மோன்கள் பெருமளவு சுரக்கின்றன. இந்த ஹார்மோன்கள் மன அழுத்தத்தைக் குறைத்து, உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியைப் பலமடங்கு பெருக்குகின்றன.

மகிழ்ச்சியாக இருப்பது உடலுக்கு எவ்வளவு அவசியமோ, அதே அளவுக்குக் கருணை உணர்வோடு இருப்பதும் ஆரோக்கியமான வாழ்விற்கு அவசியமானது என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இரக்க உணர்வோடு வாழ்வது நமக்கும் மனநிறைவைத் தரும், நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கும் நன்மைகளை விளைவிக்கும். நம்மால் முடிந்த சிறிய உதவிகளைப் பிறருக்குச் செய்வதன் மூலம் நமது ஆயுளும் ஆரோக்கியமும் நீடிக்கிறது.

உலக மகாான்களின் போதனைகளும் மனிதநேயமும்

உலகின் பல்வேறு மூலைகளில் தோன்றி மறைந்த மகான்கள், ஞானிகள் மற்றும் ஆன்மீக வழிகாட்டிகள் அனைவரின் போதனைகளின் அடிநாதமும் அன்பும் கருணையுமே ஆகும். அவர்கள் பின்பற்றிய மதங்கள், மொழிகள், கலாச்சாரங்கள் வித்தியாசமாக இருக்கலாம்; ஆனால் அவர்கள் போதித்த உயர்ந்த தத்துவம் மனிதநேயம் ஒன்றே. திருவள்ளுவர் “அருட்செல்வம் செல்வத்துள் செல்வம்” என்று கருணையின் மேன்மையையும், வள்ளலார் “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று உயிர்களிடத்து காட்ட வேண்டிய ஜீவகாருண்யத்தையும் வலியுறுத்தியுள்ளனர்; புத்தர், இயேசு போன்ற ஞானிகளும் கருணையையே உலகின் மிகப்பெரிய ஆன்மீகப் பலமாகப் போற்றினர்.அன்பை விட உயர்ந்த சக்தி இந்த பிரபஞ்சத்தில் வேறு எதுவும் இல்லை என்பதை அவர்கள் தங்கள் வாழ்வின் மூலம் நிரூபித்துக் காட்டினர். அந்தப் பெருமக்களின் பாதையைப் பின்பற்றி நாமும் நமது வாழ்வில் சில மனிதாபிமான வேலைகளைச் செய்ய முன்வர வேண்டும். பிறருக்கு உதவும் பரந்த மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

வாழ்வை மாற்ற சபதமேற்போம்

இன்று உலக கருணை நாளில் நாம் ஒவ்வொருவரும் ஒரு உறுதியை எடுத்துக் கொள்ள வேண்டும். பிறருக்கு உதவும் எண்ணத்தோடு வெளிப்படையான நற்செயல்களில் ஈடுபட வேண்டும். சுயநலச் சிந்தனைகளைத் தூக்கி எறிந்துவிட்டு, பொதுநலமும் இரக்கமும் கலந்த நல்வாழ்வை வாழப் பழக வேண்டும்.

கருணை என்பது பலவீனத்தின் வெளிப்பாடு அல்ல; அது மிகப்பெரிய மன வலிமையின் அடையாளம். இன்று ஒரு நாள் மட்டுமல்லாமல், நமது ஒவ்வொரு நாளையும் கருணை மற்றும் தன்னலமற்ற செயல்களால் நிரப்ப நாம் சிந்தித்துச் செயல்படுவோம். அன்பைப் பகிர்வோம், ஆரோக்கியமான மகிழ்ச்சியான உலகைப் படைப்போம்.

வாத்தீ அகஸ்தீஸ்வரன்

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்