வல்லவன் வகுத்ததடா- விமர்சனம்!

வல்லவன் வகுத்ததடா- விமர்சனம்!

ல்லது நினைத்தால் நல்லது மட்டுமே நடக்கும் எனச் சொல்வார்கள். எண்ணம்போலதான் வாழ்வு. நம்மைச் சுற்றி எப்போதுமே பாஸிட்டிவ் வைப்ரேஷன் இருந்தால், நாம் இயல்பாகவே அதிக முனைப்போடு ஒரு விஷயத்தைச் செய்வோம். பாஸிட்டிவாகவும், வித்தியாசமாகவும் சிந்தித்தவர்களே வெற்றிகளைக் குவித்திருக்கிறார்கள். அதனால் எப்போதும் நெகட்டிவாக யோசிக்காமல் தட்றோம், தூக்குறோம் எனக் களத்தில் இறங்குங்கள். வெற்றி மட்டும்தான் என்ற நோக்கத்தை வலியுறுத்தி 6 கேரக்டர்களை சுற்றி நடக்கும் கதையை ஹைபர் லிங்க் பாணியில் சொல்லி இருப்பவது தான் ‘வல்லவன் வகுத்ததடா’படம்.

பணம் மட்டுமே முக்கியம் என்று நம்பி சகலவித தகிடுத்தங்கள் செய்யும் ஐந்து பேர் பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் இருக்கிறார்கள். அதே சமயம், மற்றவர்களுக்கு உதவி செய்வதோடு, நேர்மையாக வாழ வேண்டும் என்று நினைக்கும் ஒருவர் வாழ்க்கையில் அனைத்தையும் இழந்தது அடுத்தடுத்து துன்பப்படும் நிலைக்கு தள்ளப்படுகிறார். இந்த ஆறு பேரும் ஒருவருக்கொருவர் தொடர்பில்லாதவர்கள் என்றாலும் பணம் இவர்களுக்கிடையே தொடர்பை ஏற்படுத்தி உள்ளத்தில் நல்ல உள்ளத்திற்கு ஒருபோதும் தாழ்வில்லை என்ற கருத்தைச் சொல்லி முடிப்பதுதான் இப்படக் கதை.

நாயகன் என்றோ நாயகி என்றோ இல்லாமல் ஈக்வலாக தேஜ் சரண்ராஜ், ராஜேஷ் பாலச்சந்திரன், அனன்யா மணி, சுவாதி மீனாட்சி, விக்ரம் ஆதித்யா, ரெஜின் ரோஸ் ஆகியோர் முதன்மை வேடத்தில் பர்ஃபெக்டாக நடித்திருக்கிறார்கள். ஒவ்வொருவரும் அந்தந்த கேரக்டருக்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள். அதிலும், போலீஸ் இன்ஸ்பெக்டர் நீதி மணியாக நடித்திருக்கும் ராஜேஷ் பாலச்சந்திரன் மாஸாக நடித்து தனிக் கவனம் பெறுகிறார்.

கேமராமேன் கார்த்திக் நல்லமுத்து தயாரிப்பாளரின் நிலை அறிந்து, குறிப்பிட்ட ஒரு வட்டத்திற்குள் தனது கேமராவை பயணிக்க வைத்திருந்தாலும், கதைக்கு ஏற்ப தனது பணியை சிறப்பாகவே செய்திருக்கிறார்.மியூசிக் டைர்க்டர் சகிஷ்னா சேவியருக்கு மெட்டமைக்க வாய்ப்பில்லை என்றாலும், காட்சிகளுக்கு உயிரோட்டம் அளிக்கும் வகையில் பின்னணி இசையை கொடுத்து படத்திற்கு கைகொடுத்திருக்கிறார்.

ஆனால் முன் பாதி முழுவதும் சோக இழையுடனேயே திரைக்கதை நகர்வதால் படத்தில் இன்வால்மெண்ட் இல்லாமல் போகிறது. படத்தில் வரும் எல்லா கேரக்டர்களுக்கும் பணத் தேவை இருப்பது போல் அலைபவர்கள் கையில் பணம் வரும்போது எந்தவிதமான முன் யோசனையுமின்றி பத்திரமோ பாதுகாப்போ இல்லாமல் விட்டேத்தியாக கையாள்வது நம்பும்படியாகவே இல்லை.

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் என்பதை மட்டுமின்றி நல்லவர்களுக்கு கண்டிப்பாக நல்லதே நடக்கும் என்பதெல்லாம் யோசிப்பதற்கும், கேட்பதற்கும் சந்தோஷமாகத்தான் இருக்கிறது. ஆனால் அதுவே ஒரு நம்ப முடியாத கதை போல் ஆகிவிடுவதால் ஜஸ்ட் பாஸ் மார்க் மட்டுமே வாங்குகிறது இந்த வ.வ.

மார்க் 2.75/5

error: Content is protected !!