வாத்தி – விமர்சனம்!

வாத்தி – விமர்சனம்!

ன்றைக்கு இந்திய கரன்சிகள் எல்லாவற்றிலும் புன்னகை புரிந்துக் கொண்டிருக்கும் காந்திஜி நம் நாட்டில் நிலவும் கல்வி குறித்து அப்போதே சொன்னவைகள் பலருக்கும் தெரியாமல் போய் விட்டது.. முன்னொரு காலத்தில் படித்துப் பட்டம் பெறுவது மிக உயர்வாகக் கருதப்பட்டது. ஆனால் அப்பட்டங்கள் இன்று தேர்வில் வெற்றி பெற்றதற்கான ஒரு அடையாளச்சீட்டாக மட்டுமே உள்ளது. மேலும் கல்வி ஒரு விபத்தாகவும், பல்கலைக்கழகம் தரும் பட்டம் அதற்கான நிவாரணமாகவும் மாறிப்போய் விட்டது. மொத்தத்தில் இன்று கல்வி வணிகமாகி, ஏழைகளுக்கு எட்டா கனியாகிவிட்டச் சூழலில், கல்வி குறித்த புரிதலில் நாம் எங்கு , என்னத் தவறு செய்தோம் என்பதைச் சுட்டுக்காட்டும் படமே ‘வாத்தி’.. அதாவது இப்போதைய டாப் ஹீரோக்கள் அடி தடி, கேங்க் வார், கொலை, கொள்ளைக் கதைகளில் நடித்து பிழைப்பு ஓட்டி வரும் சூழலில் தனியார் மயப் போக்கால் வணிகமாகி விட்ட கல்வி, குறைந்த அல்லது விலையில்லா கல்வி வழங்கி வந்த அரசுப் பள்ளிகள் மூடப்படுவதற்கான காரணங்கள், அரசுப் பள்ளி ஆசிரியர்களின் தேவைகள் என்ன? ஆனால் கல்விமீதான அரசின் அலட்சியப்போக்கு, என ஒரு சமூகப் பார்வையுடன் தனுஷ் என்ற நடிப்பு ராட்சசன் மூலம் கல்வியின் முக்கியத்துவத்தை  சொல்ல வந்துள்ளதே இந்த வாத்தி படம்.

அதாவது 90 களில் இந்த கல்வி என்பதை பொன் முட்டையிடும் வாத்து என்ற கண்டறியும் தனியார் பள்ளிகளின் ஆதிக்கத்தால் அரசாங்க பள்ளிகள் கொஞ்சம் கொஞ்சமாக மூடப்பட்டு வருகின்றன. அப்படி மூடப்பட்ட அரசு பள்ளிகளை திறக்கக் கோரி மக்கள் போராட்டம் வெடித்த நிலையில் அரசு கட்டண ஒழுங்குமுறை விதியை கொண்டு வந்து தனியார் பள்ளிகளுக்கு செக் வைக்க நினைக்கிறது. இதை தெரிந்து கொண்ட அந்த தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பின் தலைவர் சமுத்திரக்கனி அரசுப் பள்ளிகளை தத்தெடுத்து தங்கள் செலவிலேயே அனைவருக்கும் கல்வி கொடுப்பதாக அறிவிக்கிறார். மேலும் அரசு பள்ளிகளுக்கு தனியார் பள்ளிகளை சேர்ந்த இரண்டாம், மூன்றாம் தர ஆசிரியர்களை அனுப்பி கல்வியை கெடுக்க நினைக்கிறார். அதில் பிரைவேட் ஸ்கூல் வாத்தியாராக பணிபுரிந்து வரும் தனுஷ் {பாலமுருகன்} சோழவரம் எனும் ஊரில் இருக்கும் அரசாங்க பள்ளிக்கு ஆசிரியராக சமுத்திரக்கனியால் {திருப்பதி} அனுப்பிவிடப் படுகிறார்.

சோழவரம் அரசாங்க பள்ளியில் கணக்கு வாத்தியாராக பணியாற்ற வரும் தனுஷுக்கு அங்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அந்த ஊரில் உள்ள மாணவர்கள் பலர் பத்தாம் வகுப்பு படித்துமுடித்த பின் கூலி தொழில் செய்து வருகிறார்கள். 11வது மற்றும் 12வது படிக்க வேண்டிய மாணவர்களை காசுக்காக அவர்களுடைய பெற்றோர்களே இப்படி செய்வதை பார்த்து அதிர்ச்சியடையும் தனுஷ் இதை உடனடியாக மாற்ற முயற்சி செய்கிறார். இந்த முயற்சியில் வெற்றிபெறும் தனுஷ், அந்த மாணவர்களை நன்றாக படிக்கவைத்து பரீட்சையில் சிறந்த மதிப்பெண்களையும் எடுக்க வைக்கிறார்.
இச்சூழலில் அந்த சோழவரம் ஊருக்கு வரும் சமுத்திரக்கனி மாணவர்கள் சிறந்த மதிப்பெண்களை எடுப்பதை பார்த்து அப்செட் ஆகிறார்.. கல்வியை வியாபாரமாக செய்ய திட்டமிடும் எண்ணத்தை இப்படி சிதைப்பதா என்று சீறி தனுஷை எச்சரிக்கிறார் சமுத்திரகனி. ஆனாலும், தனுஷ் ஹீரோவாச்சே.. அந்த அரசு பள்ளி. மாணவர்கள் அனைவரையும் நன்றாக படிக்கவைப்பேன் என்று சமுத்திரக்கனியிடம் சவால் விடுகிறார். இந்த சவாலில் எப்படி தனுஷ் வெற்றிபெற்றார் என்பதே வாத்தி கதை..

வாத்தியாக வரும் தனுஷ் வழக்கம் போல் தன்னுடைய நடிப்பினால் மொத்த படத்தையும் தாங்கி நிற்கிறார். வாத்தியாராக இருந்தாலும் யூனிஃபார்ம் எல்லாம் போட்டபடி நடை, உடை, பாவனை என அனைத்தையும் ஒரு இளம் ஆசிரியர் போலவே ஜொலிக்கிறார். இஅவரின் சில காமெடி காட்சிகள் எடுபடவில்லை என்றாலும் காதல், ஆக்க்ஷன், சென்டிமென்ட் என, அனைத்திலும் ஸ்கோர் செய்கிறார். இவருடைய ரோல் நிச்சயம் இன்றிருக்கும் சில தவறான ஆசிரியர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்கும். தனுஷின் கேரக்டரைப் பார்த்து லவ் பண்ணும் சக ஆசிரியையாக சம்யுக்தா. டீச்சர் பெரிய அளவில் கேரக்டர் இல்லை. ஆனாலும் வா வாத்தி பாடலில் ரசிக்க வைக்கிறார். தெலுங்கு வில்லன் சாயலில் வரும் சமுத்திரகனி மூலம் இன்றைய காலகட்டத்தில் தனியார் பள்ளிகள் எவ்வாறு மக்களிடம் ஏமாற்றுகின்றன என்பதை தோலுரிக்கும் விதமாக அவரது நடிப்பு அமைந்திருக்கிறது. காமெடியனாக ஷாராவின் காட்சிகள் பெரிய அளவு சிரிப்பை கொடுக்கவில்லை என்றாலும் கதையை போர் அடிக்காமல் நகர்த்த பயன்பட்டிருக்கிறது. மேலும் சாய்குமார், ஆடுகளம் நரேன், இளவரசு ஆகியோர் தங்களுக்குரிய கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளனர்.

ஜி.வி பிரகாஷின் பின்னணி இசை பெரிய பலம். ஏற்கனவே இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருந்த நிலையில் படவோட்ட காட்சிகளுக்கு ஏற்றார் போல மென்மையாகவும், ஆக்ரோஷமாகவும் தன் பின்னணி இசையின் மூலம் நம்மை ஒன்ற வைத்து விடுகிறார்.

‘பணம் எப்டி வேணாலும் சம்பாதிக்கலாம்; ஆனா படிப்பு தான் மரியாதையை சம்பாதித்து தரும்’, சாதி குறித்து பேசுகையில், ‘நமக்கு தேவைப்படும்போது அவங்க என்ன ஆளுங்கன்னு தெரியறதில்லை. எந்த ஆளும் தேவையில்லாத ஆளுமில்ல’, ‘படிப்பை பிரசாதம் மாதிரி கொடுங்க… 5 ஸ்டார் ஹோட்டல் சாப்பாடு மாதிரி விக்காதீங்க’ போன்ற நச் வசனங்கள் எல்லாம் இருந்தாலும் பொருந்தாத டப்பிங்கால் தெலுங்கு சினிமாவை பார்ப்பது போலவே தெரிகிறது. அதனால் தொடக்கம் முதல் படம் பார்க்க செல்பவர்களால் கதையில் ஒன்ற முடியாமல் போய் விடுவதுதான் சோகம்

ஆனாலும் முன்னரே சொன்னது போல் வணிகமயமாகி விட்ட கல்வியையும், அதன் முக்கியவத்துவத்தை உணர்த்தும் நோக்கில் ஒரு நல்ல ஆசிரியரால் நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும் என்ற கருத்தையும் அழுத்தி சொல்லி இருக்கும் விதம் வரவேற்கத்தக்கது.. !

மார்க் 3.5/5

error: Content is protected !!