தத்துவ ஞானி ஜிட்டு ஜே.கிருஷ்ணமூர்த்தி!

தத்துவ ஞானி ஜிட்டு ஜே.கிருஷ்ணமூர்த்தி!

றியாமை இருள் மனிதகுலத்தைச் சூழும்போதெல்லாம் உலக ஆசான் ஒருவர் தோன்றி உலகை வழிநடத்துவார் என்பது அநேகமாக இறைநம்பிக்கை உடைய அனைவருக்கும் பொதுவான நம்பிக்கை. அதுபோன்ற ஒரு உலக குரு ஒருவரைத்தான் தியாசபிக்கல் சொசைட்டி என்ற ப்ரம்மஞானசபையினரும் தேடிக்கொண்டு இருந்தார்கள். அவ்வாறு அவர்களால் கண்டறியப்பட்ட உலக குருதான் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி. 

ஆம்..ஆன்மிக குருமார்களுக்கும் தத்துவவாதிகளுக்கும் சிந்தனையாளர்களுக்கும் பஞ்சமில்லாத நாடு இந்தியா. இந்த மண்ணில் பிறந்த மரபார்ந்த தத்துவ ஞானிகளில் ஒருவரல்ல, ஜே.கே. என்று அறியப்படும் ஜித்து கிருஷ்ணமூர்த்தி. இந்திய தத்துவ மரபின் எந்தப் பிரிவுக்குள்ளும் வகைப்படுத்தப்பட முடியாதவரிர். அவர் யோகியோ முனிவரோ அல்ல. குருவோ மடாதிபதியோ அல்ல. எந்தத் தத்துவத்தையும் அவர் உருவாக்கவில்லை. ஆனால், 20-ம் நூற்றாண்டின் முக்கியமான தத்துவ ஞானிகளில் ஒருவராக உலகம் முழுவதும் அவர் மதிக்கப்படுகிறார். எந்த நூலையும் யாருடைய வார்த்தையையும் மேற்கோள் காட்டாமல் வாழ்க்கை பற்றியும் அதன் பொருள் (அல்லது பொருளின்மை) பற்றியும் பேசியவர் கிருஷ்ணமூர்த்தி. உண்மையைத் தேடும் யாத்திரையை ஒவ்வொருவருக் குள்ளும் சாத்தியப்படுத்தும் வழிமுறை அவருடையது. கவித்துவமான சொற்களில் தன் எண்ணங்களை இயல்பாக வெளிப்படுத்தியவர்.

முக்கியமான அறிவியலாளர்களும் தத்துவச் சிந்தனை கொண்டோரும் படைப்பாளிகளும் அவரை மதிக்கிறார்கள். அவர் உயிரோடு இருந்தபோது சாமானிய மனிதர்களிலிருந்து அறிவுஜீவிகள், அறிவியலாளர்கள்வரை பலரும் அவரோடு தொடர்ந்து உரையாடிவந்தனர். அவர் மறைந்த பின்பும் அவரது உரையாடல்களின், உரைகளின் பதிவுகள் ஆழ்ந்த அக்கறையோடு கேட்கவும் படிக்கவும்படுகின்றன.

ஜே.கே. அவர்கள் தியானம் செய்வதற்கு சொல்லித் தந்த நூதனமான வழிமுறை இதுதான்.

ஒருவன் தன் மனதில் ஓடும் எண்ண ஓட்டங்களைக் கட்டுப்படுத்த எந்த ஒரு முயற்சியும் எடுக்கக்கூடாது. அவன் விழிப்புடன் இருந்து (aware) தன் மனதில் ஓடும் எண்ண ஓட்டங்களைக் குறை கூறாமலும், தீர்ப்பு (judgement) எதுவும் சொல்லாமலும், நிந்தனை செய்யாமலும் இருக்க வேண்டும். தன் மனதில் இடம் பெறும் ஒவ்வொரு எண்ணத்தையும் ஆழ்ந்து கவனித்து வர வேண்டும். இப்படி அவன் ஒவ்வொரு எண்ணத்தையும் ஆழ்ந்து கவனித்து வரும்போது, தன் மனதின் ஆழத்தில் மறைந் திருக்கும் பொறாமை, பயம், ஏக்கம், ஆசை போன்றவைகளைக் கண்டுகொள்ள முடியும்.

தன்னைப்பற்றி நன்கு அறிந்து கொண்டவனால்தான் தியானம் செய்வதில் வெற்றி பெற முடியும். தன் மனதில் இருக்கும் அழுக்குகளைக் கண்டு கொள்ளாதவன், எவ்வளவு கடினமாக முயற்சி செய்து தியானம் செய்து வந்தாலும், ஒரு நல்ல பலனையும் பெற முடியாது.

ஒருவர் இனிமையாகப் பாடிக் கொண்டிருக்கிறார். அந்தப் பாட்டில் உங்கள் மனம் லயித்து விடுகிறது. முழு கவனத்துடன் (total attention) நீங்கள் பாட்டைக் கேட்டு வருகிறீர்கள். அப்போது உங்கள் மனதில் எண்ண ஓட்டம் முற்றிலுமாக நின்று விடுகிறது. அப்போது மனதில் அமைதி நிலைத்து நிற்கிறது. நாம் முழுமையாகக் கவனம் செலுத்தும்போது நம்மனதில் எண்ணங்கள் உருவாவதில்லை.

அப்படிப்பட்ட சமயங்களில் அமைதி நிறைந்த ஒரு அசைவற்ற மனம் (still mind) உருவாகிவிடுகிறது. அப்படிப்பட்ட மனம் தனக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று எதிர் பார்ப்பதில்லை. கட்டுப்பாட்டின் மூலம் (control) மனதில் எண்ணங்களைத் தடுத்து நிறுத்தி அமைதியை உருவாக்க முடியாது. நாம் செய்து வரும் செய்கையில் முழு கவனம் செலுத்தும்போது மனதில் எண்ணம் உருவாவது நின்று விடுகிறது.

இப்படிப்பட்ட மனநிறையை வளர்த்துக் கொள்ளுவதைத்தான் நாம் தியானம் என்று கூறுகிறோம். ஒருவர் தன் குழந்தையைப் பார்க்கும்போது, “என் பையன் சரியாகப் படிப்பதில்லை. நிறைய பொய்களைச் சொல்லி வருகிறான். மிகவும் முரட்டுத்தனமாக நடந்து வருகிறான்” என்பதைப் போன்று நினைக்க ஆரம்பிக்கிறார்.

இப்போது தந்தையும் அவருடைய மகனும் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து தனித்து நிற்கிறார்கள். இந்த நிலையில் காண்பவனுக்கும் (observer) காண்பதற்கும் (one which is observed) இடையே இடைவெளி ஏற்பட்டு விடுகிறது. எங்கு பிரிவுகள் இருக்கின்றனவோ, அங்கு சண்டை, மனக்குழப்பம் போன்றவைகள் இருக்கத்தான் செய்யும். எங்கு இடைவெளி இருக்கிறதோ, அங்கு எண்ணச் சூறாவளி வீசத்தான் செய்யும்.

இதற்கு மாறாக தந்தையும் தனயனும் ஒன்றாகி விடும் போது, அங்கு ஒரு பரவச நிலை உருவாகிவிடும். அந்த நிலையில் எண்ணம் எதுவும் உருவாவதில்லை. அதாவது காண்பவன் தான் கண்டு வருவதோடு ஒன்றாக இணைந்து விடுகிறான். இப்போது காண்பவன் மறைந்து விடுகிறான். அவனுக்கு கண்டுவருவதுான் தெரிய வருகிறது. இந்த நிலையில் பிரிவுகள் இல்லை. இடைவெளி எதுவும் இல்லை. இப்போது எண்ணம்
முற்றிலுமாக உருவாகாத நிலை ஏற்பட்டு விடுகிறது.

மனதில் எண்ண ஓட்டங்கள் உருவாவதைத் தடுக்க, எண்ணுபவன் (thinker) எண்ணமாகவும் (thought), கட்டுப்படுத்துவதாகவும் (one which is controlled) ஆராய்ச்சி செய்பவன் ஆராய்ச்சியாகவும், அனுபவிப்பவன் (experiencer), அனுபவித்து வருவதாகவும் (experience) ஒன்றாகக் கலந்து மாறி நிற்க வேண்டும். இந்த நிலையை அடைவதுதான் தியானமாகும்.

 

error: Content is protected !!