ஹெச்.எம்.டி. டிராக்டர் ஃபேக்டரியை இழுத்த மூட கேபினட் அனுமதி!

ஹெச்.எம்.டி.  டிராக்டர் ஃபேக்டரியை இழுத்த மூட கேபினட் அனுமதி!

அரியானா மாநிலத்தில் இயங்கி வரும் இந்துஸ்தான் மெஷின் டூல்ஸ் (ஹெச்.எம்.டி) டிராக்டர் தயாரிப்பு ஆலை நஷ்டமடைந்ததையடுத்து மூடுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து விட்டது.

hmt oct 29

பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான அந்த ஆலையின் ஊழியர்களின் ஊதியம், இதர நிலுவைத் தொகைகளை வழங்குவதற்காக, ரூ.718.72 கோடியை ஒதுக்கீடு செய்யவும் முடிவு செய்யப்பட்டது. டில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று(27-10-16) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

இதுகுறித்து, மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:நாட்டின் தொழில் துறையை மேம்படுத்தும் வகையில், இயந்திரங்களைத் தயாரிப்பதற்காக, இந்துஸ்தான் மெஷின் டூல்ஸ் ஆலை, பெங்களூரில் கடந்த 1953-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. நாட்டின் உற்பத்தி, பொறியியல் துறைகளில் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டதில், இந்த ஆலை முக்கியப் பங்கு வகித்தது.அதைத் தொடர்ந்து, அரியானா மாநிலம், பிஞ்சூரில் கடந்த 1971-ஆம் ஆண்டு ஹெச்எம்டி ஆலையின் டிராக்டர் உற்பத்தி பிரிவும் தொடங்கப்பட்டது.

1990-களில் தாராளமயமாக்கல் கொள்கை நடைமுறைக்கு வந்த பிறகு, டிராக்டர் உற்பத்தி பிரிவின் செயல்பாடுகள் குறையத் தொடங்கிவிட்டன.சர்வதேச நிறுவனங்களின் வருகை, மலிவான விலையில் சந்தையில் பொருள்கள் கிடைப்பது ஆகியவற்றால் ஹெச்.எம்.டி ஆலை கடும் போட்டியைச் சந்திக்க நேரிட்டது. ஆலையின் வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்துவதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அவை பலனளிக்கவில்லை.இந்நிலையில் ஆலையை மூடவும், ஹெச்.எம்.டி ஆலையின் இதர பிரிவுகளில் கவனம் செலுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், ஊழியர்களுக்கு கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் ஊதியம் வழங்கப்படவில்லை. கடந்த 2013-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல், அவர்களுக்கு இதர சலுகைகள் வழங்கப்படவில்லை. எனவே, அவர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியம், இதர நிலுவைத் தொகை வழங்குவதற்காக, ரூ.718.72 கோடியை ஒதுக்கீடு செய்யவும் மத்திய அமைச்சரவை முடிவு செய்தது அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.