ரயில்வே உணவுகளுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி.!,

ரயில்வே  உணவுகளுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி.!,

நம் இந்தியன் ரயில்களில் விற்கப்படும் உணவு பொருட்களுக்கு  கூடுதல் விலை வசூலிக்கப்படு கிறது என்ற  புகார்கள் அதிகளவில் வரத் துவங்கி இருந்தன. கடந்தாண்டு ஏப்ரல் முதல், அக்டோபர் வரையிலான காலத்தில் மட்டும் 7,000 புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இதையடுத்து ரயில்களில் விற்கப்படும் உணவுப் பொருட்களுக்கு பில் தருவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அனைத்து ரயில்களிலும் விளம்பரம் செய்யப்படும். ‘வாங்கும் உணவு பொருட்களுக்கு பில் தராவிட்டால், அதற்கான பணத்தை பயணியர் செலுத்த வேண்டியதில்லை’ என, ரயில்வே கூறி இருந்தது. இந்நிலையில் தற்போது ரயில் நிலையங்களிலும், ரயில்களில் விற்பனை செய்யப்படும், உணவுகள், குளிர்பானங்கள், டீ, காபி உள்ளிட்டவற்றுக்கு 5 சதவீதம் சரக்கு மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி) வசூலிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அதாவது நாடு முழுவதும் மத்திய அரசு ஒரே வரிவிதிப்பு முறையாக ஜிஎஸ்டி வரியைக் கடந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி நடைமுறைப்படுத்தியது. இதில் ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் விற்பனை செய்யப்படும் உணவுகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுமா என்ற சந்தேகம் ரயில்வே துறைக்கு இருந்து வந்தது. அதைத் தெளிவுபடுத்தி மத்திய அரசு கடந்த 31-ம் தேதி கடிதம் அனுப்பியுள்ளது.

அந்தக் கடிதத்தில் ரயில்வே, ரயில்களில் விற்பனை செய்யப்படும் உணவுகள், குளிர்பானங்கள், டீ, காபி உள்ளிட்டவற்றுக்கு இனி 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி இனி விதிக்கப்படும். இதில் எந்தவிதமான சந்தேகமும், நிலையற்ற தன்மையும் தேவையில்லை. ரயில் நிலையங்கள், நடைமேடைகள், ரயில்களில் விற்பனை செய்யப்படும் அனைத்து உணவுகள், குடிநீர், பானங்கள், குளிர்பானங்கள் அனைத்தும் சரிசமமாக 5 சதவீதம் வரி இனி விதிக்கப்படும் என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts