ஆதார் அட்டைக்கு பதில் புதிய விர்சுவல் கார்ட்! – மத்திய அரசு அறிமுகம்
ஆரம்பத்தில் மான்ய உதவி பெற வழங்கப்பட்டு வந்த ஆதார் தற்போது டாய்லெட்டுக்குள் நுழையக் கூட அவசியம் என்ற சூழல் உருவாகி வருகிறது. இதையடுத்து மத்திய அரசால் கட்டாயப்படுத்தி நாடு முழுவதும் 90 சதவீதம் பேருக்கு ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டுவிட்டது. இந்த ஆதார் அட்டையில் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே 12 இலக்க பிரத்யேக எண்கள் வழங்கப்பட்டுள்ளன. கண் விழித்திரை, கைரேகைகள், முகவரி, செல்போன் எண் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் ஆதார் அடையாள அட்டையில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. ஆதார் அட்டையில் உள்ள தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
எனினும் இந்த விவரங்கள் வெளியாவதாக கூறி சர்ச்சை எழுந்து வருகிறது. 500 ரூபாய்க்கு ஆதார் விவரங்கள் கிடைப்பதாக கூறி அதுபற்றிய தகவல்களை, பத்திரிக்கையாளர் ஒருவர் புலனாய்வு செய்து செய்தி வெளியிட்டார்
இதனால், ஆதார் தொடர்பான பதிவு செய்த தங்கள் விவரங்கள் பாதுக்கப்பட வேண்டும் என்ற கவலை மக்களிடம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தனிநபர் ரகசியங்கள் காக்கப்படும் நோக்கத்துடன், குறைவான தகவல்களை மட்டுமே கொண்ட, தற்காலிக மெய்நிகர் அடையாள அட்டையை தேசிய தனிநபர் அடையாள ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இனி மொபைல் போன் சிம்கார்டு உள்ளிட்டவற்றிற்கு, இந்த மெய்நிகர் அடையாள அட்டையை பயன்படுத்தலாம். இதன் மூலம் ஆதாரில் பதிவு செய்துள்ள முழு விவரங்களின் ரகசியம் வெளியாகக்கூடும் என்ற அச்சம் எழாது. ஆதார் எண் பதிவு செய்தவர்கள், தேவை ஏற்படின், இணையதளத்தில் இருந்து, குறைந்த தகவல்களுடன் கூடிய இந்த மெய்நிகர் அடையாள அட்டையை தாங்களே உருவாக்கிக் கொள்ள முடியும். ஏற்கனவே ஆதார் அட்டையில் உள்ள புகைப்படம், பெயர் விவரம் போன்ற அனைத்து விவரங்களும் இப்புதிய அட்டையில் இடம் பெற்று இருக்கும்.
ஆனால் ஆதார் அட்டையில் உள்ள 12 இலக்க எண்ணுக்கு பதிலாக இந்த புதிய அடையாள அட்டையில் 16 இலக்க எண் இருக்கும். சம்பந்தப்பட்ட நபரே இந்த எண்ணை தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம். ஒரு குறிப்பிட்ட பணிக்காக அல்லது விரும்பும் குறிப்பிட்ட காலவரை வரை இந்த புதிய அட்டையை பயன்படுத்தலாம். தேவைப்படும் போதெல்லாம் இந்த அடையாள அட்டையில் உள்ள 16 இலக்க எண்ணை மாற்றி புதிய அட்டையை பெற்றுக் கொள்ளலாம். அப்படி புதிய அட்டை பெறும் பட்சத்தில், ஏற்கனவே பெற்று இருந்த மெய்நிகர் ஆதார் அட்டை தானாக ரத்தாகிவிடும்.
இதன்மூலம் சம்பந்தப்பட்ட நபரின் உண்மையான ஆதார் எண் மற்ற இடங்களில் பகிர்ந்து கொள்ளப்படுவது தவிர்க்கப்படும். முக்கியமாக தனிநபர் ரகசியம் காக்கப்படுவதோடு, தகவல் திருட்டும் தடுத்து நிறுத்தப்படுகிறது. ஆதார் அட்டை எந்தெந்த இடங்களில் எல்லாம் தேவைப்படுமோ, அந்த இடங்களில் இந்த மெய்நிகர் ஆதார் அட்டையை பயன்படுத்தலாம். சம்பந்தப்பட்ட நபரை தவிர வேறு யாரும் இந்த மெய்நிகர் ஆதார் அட்டையை மோசடியாக தயாரிக்க முடியாது.
குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே பயன்படுத்தக்க இந்த அடையாள அட்டை தற்காலிகமானதாக இருக்கும். தேவை ஏற்படின், ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும், இதுபோன்ற தற்காலிக அடையாள அட்டையை பெற முடியும். வருகிற மார்ச் 1–ந் தேதி முதல் இந்த மெய்நிகர் ஆதார் அடையாள அட்டையை நடைமுறைக்கு கொண்டு வர இந்திய தனிநபர் அடையாள ஆணையம் தீர்மானித்து உள்ளது. மேலும் ஆதார் அட்டை எங்கெங்கெல்லாம் தேவைப்படுகிறதோ அந்த இடங்களில் இந்த மெய்நிகர் ஆதார் அட்டையை ஜூன் 1–ந் தேதி முதல் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளும் நடைமுறையை செயல்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது.