எம்.எல்.ஏ.கள் சம்பளம் எகிறிடுச்சு! ம்.. அப்புறம்..?.

எம்.எல்.ஏ.கள் சம்பளம் எகிறிடுச்சு! ம்.. அப்புறம்..?.

 நம் தமிழக அரசு, நிதி பற்றாக்குறையால், தவித்து வருகிறது. ஆண்டுதோறும் கடன் சுமை அதிகரித்தபடி உள்ளது. 1984 – 85ம் நிதிஆண்டில்,  2,129.59 கோடி ரூபாய் கடன் இருந்தது. பின், 2015 – 16ல், அரசின் கடன் சுமை, ஒரு லட்சத்து, 94 ஆயிரத்து, 95 கோடியே, 65 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, கடன் சுமை, இரண்டு லட்சம் கோடி ரூபாயை தாண்டி உள்ளது. நடப்பு நிதியாண்டில், ஜி.எஸ்.டி., வரி விதிப்பு காரணமாக, தமிழக அரசுக்கு வருவாய் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், நிதி பற்றாக்குறை அதிகரித்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே தமிழகம் முழுதும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் தங்களது ஊதிய உயர்வுக்காகவும், ஓய்வுபெற்ற பின் கிடைக்கும் பணப் பலன் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை எதிர்த்தும் 7 நாட்களாகப் போராடி வருகிறார்கள். போக்குவரத்து ஊழியர்களோடு அவர்களது குடும்பத்தினரும் போராட்டத்தில் குதிக்க, பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.


இந்த நிலையில்  நேற்று (ஜனவரி 10) எம்.எல்.ஏ.க்களின் ஊதிய உயர்வுக்கான மற்றும் படிகள் உயர்வுக்கான சட்டத் திருத்த மசோதாவை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். எம்.எல்.ஏ.க்களுக்கான சம்பள உயர்வு பற்றி கடந்த ஜூலை மாதமே முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி இதுவரை 55 ஆயிரமாக இருக்கும் எம்.எல்.ஏ.க்களின் மாதச் சம்பளம் இனி ஒரு லட்சத்து 5 ஆயிரமாக அதிகரிக்கும். இந்த அம்சங்களை முன்னிறுத்தி தற்போது சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  மேலும் இந்த மசோதா நிறைவேறிய பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் முதலே எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் உயர்த்தப்படும். அந்த வகையில் ஆகஸ்டு முதல் டிசம்பர் வரையிலான சம்பள உயரவு மட்டும் மூன்று லட்ச ரூபாய் நிலுவைத் தொகையாக வழங்கப்படும்.

இந்த மசோதாவை எதிர்த்தும் இன்று வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், ‘’இந்த மசோதாவை அறிமுக நிலையிலேயே திமுக எதிர்த்தது. அதுவும் இப்போது போக்குவரத்து ஊழியர்கள் ஊதியத்துக்காகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். அரசுக்கு நிதிச் சுமை அதிகம் என்று ஆளுந்தரப்பிலேயே சொல்கிறார்கள். இந்நிலையிலே சட்டப்பேரவை  உறுப்பினர்களுக்கு சம்பள உயர்வு என்றால், மக்கள் எள்ளி நகையாடுவார்கள்’’ என்று குறிப்பிட்டார்.

முன்னதாக இது குறித்து கார்டூனிஸ்ட் பாலா-வின் லைன்ஸ் மீடியாவில்  பிரபல பத்திரிகையாளர் ஏகலைவன் எழுதிய ஒரு ரிப்போர்ட் உங்கள் பார்வைக்காக இதோ:

அது சரி.. எம்.எல்.ஏக்களின் சம்பளம் உயர்த்தப்பட்டிருக்கிறது. வெளியே தெரியாத கிம்பளம் எவ்வளவு என்பதை விசாரித்ததில் கிடைத்த தகவல் இது. இது கூடுமே தவிர குறைய வாய்ப்பில்லை.

அந்த கிம்பள கணக்கு என்ன என்று பார்க்கலாம்.

ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு வருடத்திற்கு 2 கோடி தொகுதி மேம்பாட்டு நிதியாக ஒதுக்கப்படுகிறது. அதில் 15 சதவீதம் கமிஷன். 30 லட்சம் வருமானம்.

ஒரு தொகுதியின் ஐவேஸ் வேலைகளுக்காக ஆண்டிற்கு 15 கோடி ஒதுக்கப்படுகிறது. அதில் அமைச்சருக்கு, மாவட்ட செயலாளருக்கு, EE:க்கு என போக எம்.ஏ.வின் கைக்கு 5 சதவீத கமிஷன் வருகிறது. 75 லட்சம் வருமானம்.

பொதுப்பணி துறை வேலைகளுக்கு என ஆண்டிற்கு 5 கோடி ஒதுக்கப்படுகிறது. அதிலும் மாவட்ட அமைச்சர், மாவட்ட செயலாளர் EE;க்கு என போக நம்ப எம்.எல்.விற்கு 5 சதவீதம் கமிஷன். இதில் 25 லட்சம் வருமானம்.

உள்ளாட்சி துறை சார்பாக ஒரு ஆண்டிற்கு 20 கோடி ஒதுக்கப்படுகிறது. இதில் 20 சதவீத கமிஷன். எல்லாருக்கும் போக நமது எம்.எல்.ஏ.வின் கைக்கு 5 சதவீதம். அதாவது ஒரு கோடி வருமானம்.

பாரத பிரதமர் நிதி உதவி என்று தொகுதிக்கு சுமார் 4 லிருந்து 5 கோடி, ஆண்டொன்றுக்கு ஒதுக்கப்படுகிறது. இதில் நேரடியாக 15 சதவீத கமிஷன். நம்ப சட்டமன்ற உறுப்பினருக்கு 60 லட்சம் வருமானம்.

ஒரு தொகுதிக்கு சுமார் 500 பசுமை வீடு திட்டம் நிதி ஒதுக்கப்படுகிறது. ஒவ்வொரு வீட்டிற்கும் 20 ஆயிரம் கமிஷன். இதில் மா.செ, வட்டம் ஒன்றியம், அதிகாரிகள் என பலருக்கும் போக சட்டமன்ற உறுப்பினருக்கு மட்டும் 50 வீடு. அதாவது ஒரு கோடி ரூபாய் வருமானம்.

இதுவே ஆண்டிற்கு 3 கோடியே 90 லட்சம். சுமார் 4 கோடி ரூபாய் கிடைக்கின்றது. இதெல்லாம் வெளியில் தெரிந்த வருமானம்.

தெரியாத பட்டியலில் நிறைய இருக்கின்றது. அந்தந்த பகுதி மணல் கொள்ளையர்கள், குவாரி கொள்ளையர்கள், டூப்ளிகெட் பொருட்களை விற்பவர்கள், கம்பெனிகள், கட்டப்பஞ்சாயத்துகள், இடமாற்றம், புதிய நியமனம், என்று குவியும் வருமானங்கள் கணக்கில் சேர்க்க(முடியவில்லை)வில்லை. மாதத்திற்கு பல கோடி வருமானம்? ஆண்டிற்கு பல பல கோடிகள்!

இப்படியான ‘வறுமையில் வாடும்’ சட்டமன்ற உறுப்பினர்களுக்குதான் மாத சம்பளம் 55 ஆயிரத்திலிருந்து 1 லட்சத்து ஐந்தாயிரமாக உயர்த்தியிருக்கிறார்கள். அதாவது வருடத்திற்கு வெறும் ஆறு லட்சத்தை உயர்த்தி கொடுத்திருக்கிறார் முதல்வர்.

ஒருவர் சட்டமன்ற உறுப்பினராக வேட்புமனு தாக்கல் செய்த போது எவ்வளவு சொத்துக்களை வைத்திருக்கிறார். ஐந்தாண்டு முடிவில் எவ்வளவு சொத்துக்களை வைத்திருக்கிறார் என்று அந்தந்த தொகுதியில் உள்ள பாமர மக்கள் பார்த்து சலித்துவிட்டார்கள்.

-பா.ஏகலைவன்

படம் : லைன்ஸ்மீடியா

Related Posts

error: Content is protected !!