தேசிய நெடுஞ்சாலைகளை அட்சய பாத்திரங்களாக மாற்றிப்புட்டாய்ங்க!

தேசிய நெடுஞ்சாலைகளை  அட்சய பாத்திரங்களாக மாற்றிப்புட்டாய்ங்க!

நம்மை பார்த்து சொல்லப்படுவது ஒரே வார்த்தைதான்.. ”சாவுங்கடா” …!

தரமான சாலைகள் வேண்டுமென்றால் சுங்கக்கட்டணம் அவசியம் என்று அசால்ட்டாக சொல்கிறார் நண்பர்.. இவரையெல்லாம் காஞ்சிபுரம்- பூந்தமல்லி நாலுவழிப்பாதையில் காரில் தூக்கிப்போட்டுக்கொண்டு வேகமாக போகவேண்டும்.. ரோடு லட்சணத்தில் குலுங்கலிலேயே பரலோகம் போய்விடுவார் நண்பர். நீதிமன்றமே காரித்துப்பி அரைக்கட்டணத்தை வசூலிக்கச் சொல்கிறது.

டோல்கொள்ளையில் எவ்வளவு பெரிய அபாயத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கிறோம் என்பது இந்த மாதிரி மரமண்டைகளுக்கு புரிவதேயில்லை. விக்கிரவாண்டி டூ ஆத்தூர் (மேல் மருவத்துர் அருகே) வரை 47 கிலோ மீட்டர் தூரம். காரில் ஒரு முறை பயணிக்க 80 ரூபாய் சுங்கக்கட்டணம். அதாவது ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 1 ரூபாய் 70 காசுகள். இதே கார், ஒரு கிலோ மீட்டரை கடக்க பெட்ரோல் செலவே மூன்றே முக்கால் ரூபாய்தான்.. அதாவது பெட்ரோல் டீசல் செலவில் பாதி அளவுக்கு, ரோட்டுக்கு தனியாக மொய்…!

நாம் இங்கே குறிப்பிடுவது வெறும் காருக்கு மட்டுமே. லாரி பஸ் என்று எடுத்துக்கொண்டால் அது தனி வரலாறு.. கார் என்பதால் வெறும் பயணத்தோடு, தனி மனித புலம்பலோடு போய் விடுகிறது. ஆனால் சரக்கு லாரி என்றால். பல்வேறு பொருட்களின் விலைவாசி மேலும் மேலும் எகிறச்செய்யும்..

இந்த பணமெல்லாம் எங்கே போகிறது? உண்மையான வசூல் விவரங்கள் யாரிடம் கிடைக்கும்? மத்திய அரசை தாங்கிப்பிடிப்பவர்கள் பதில் சொல்லட்டும்.. தேசிய நெடுஞ்சாலைகளின் ஒவ்வொரு கிலோ மீட்டரையும் கோடிகோடியாய் கொட்டும் அட்சய பாத்திரங்களாக மாற்றி எவரெவர்க்கோ தாரை வார்த்துக்கொண்டிருக்கிறார்கள்..வெளிப்படைத்தன்மை மறைய மறைய, சர்வாதிகாரம்தானே பிறக்கும்? இதையெல்லாம், சூப்பர் சாலை வேண்டுமென்றால் எவ்வளவு பணம் கேட்டாலும் கொடுத்துதானே ஆகவேண்டும் என்று சொல்லும் மூளை சலவை செய்யப்பட்ட நண்பருக்கு எப்படி புரிய வைப்பது..

கொரோனா காலத்தில் ஈ பாஸ் என்ற விஷயத்தால் நடமாட்ட சுதந்திரத்தை பறிகொடுத்தோமே நினைவிருக்கிறதா? அவசரத்திற்கு ஈ பாஸ் பெற நாலாயிரம்வரை லஞ்சமாக கொடுக்க நேர்ந்தது என்று பலரும் கதறினார்கள். அதே போல, சாலை ஒப்பந்த நிறுவனங்களே கட்டணத்தை நிர்ணயித்துக்கொள்ளலாம் என்றுமத்திய அரசு கைகழுவிவிட்டு ஒரு நிலையை ஏற்படுத்தினால், யோசித்துப்பாருங்கள்.. சாலைகளில் சம்மந்தப்பட்டவர்கள் வைத்துதான் சட்டமாக இருக்கும். இப்படியெல்லாம் நடக்குமா? ரோட்டில் வண்டியை ஓட்டி செல்லவே ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் இரண்டு ரூபாய் தர வேண்டியிருக்கும் என்று முப்பதாண்டு களுக்கு முன்பு சொன்னால் நம்பியிருப்பீர்களா? அதேதான் இதுவும்.

ஏழுமலை வெங்கடேசன்

Related Posts