மூன்று முறை தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்யும் நடைமுறை முஸ்லிம் மதத்தில் பின்பற்றப்படுகிறது. இதை எதிர்த்து முஸ்லிம் பெண்கள் சிலர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள், தலைமை நீதிபதி கெஹர் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட கோடை விடுமுறைக்கால அமர்வு முன்பு விசாரிக்கப்படுகிறது. தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் குரியன் ஜோசப், ஆர்.எஃப்.நரிமன், யு.யு.லலித் மற்றும் அப்துல் நசீர் ஆகியோர் கொண்ட அமர்வில் முத்தலாக் வழக்கு தினசரி விசாரணையாக நடைபெற்றுவருகிறது.
மூத்த வழக்கறிஞரும், முன்னாள் சட்ட அமைச்சருமான கபில் சிபல், முத்தலாக் விவகாரத்தில் அகில இந்திய முஸ்லீம் தனிச்சட்ட வாரியம் அமைப்புக்கு ஆதரவாக ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கில் இன்று ஆஜராகி வாதாடிய கபில் சிபல், வாய்மொழியாக விவாகரத்து செய்வது என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கை. அயோத்தியில்தான் ராமர் பிறந்தார் என்பது நம்பிக்கை. அதில் எப்படி நீதிமன்றம் குறுக்கிடுவதில்லையோ, அதுபோல முத்தலாக் விஷயத்திலும் நீதிமன்றம் தலையிடக்கூடாது. முத்தலாக் முறை 637 ஆம் ஆண்டிலிருந்து கிட்டத்தட்ட 1400 ஆண்டுகளாக பழக்கத்தில் உள்ளது. அந்த மதநம்பிக்கைக்கு சட்டக்குறுக்கீடு இருக்கக்கூடாது என்றார். இந்நிலையில், தற்போது முத்தலாக் இஸ்லாமிற்கு எதிரானது என்று கூற நாம் யார்?’’ என்று கபில் சிபல் கேள்வி எழுப்பினார்.
‘ராமர் அயோத்தியில் பிறந்ததாக இந்துக்கள் நம்புகிறார்கள். அவர்களின் இந்த நம்பிக்கையில் அரசியலமைப்பு மற்றும் அறநெறி சார்ந்த கேள்விகளுக்கு இடம் உண்டா?’ என்று கபில் கேள்வி எழுப்பினார்..மேலும் ‘‘ முத்தலாக் நடைமுறை குறித்து முகமது நபிகளின் காலத்திற்கு பின் உருவாக்கப்பட்ட அவரது கருத்துகள் அடங்கிய ஹாடித் (Hadith) குறிப்புகளில் கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து முகமது நபிகளின் காலத்திற்கு பின் முத்தலாக் நடைமுறைக்கு வந்தது தெளிவாகிறது’’ என்று கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
இதனிடையே நேற்று நடந்த விசாரணையில் முத்தலாக்கிற்கு தடை விதிக்கப்பட்டால், முஸ்லிம் பெண்களுக்கான தனி திருமணம் மற்றும் விவாகரத்து தொடர்பாக புதிய சட்டம் இயற்றப்படும் என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.