’டிரெண்டிங்’ – விமர்சனம்!
யூடியூப், இன்ஸ்டாகிராம் என சமூக வலைத்தளங்கள் மூலம் பணம் சம்பாதிப்பது இன்றைய காலத்தில் ஒரு ‘டிரெண்ட்’ ஆகிவிட்டது. ஆனால், இந்த போக்கில் ஒளிந்திருக்கும் ஆபத்துகளையும், மாயைகளையும், அதனால் ஏற்படும் உறவுச் சிக்கல்களையும் நெத்தியடியாகப் பேச வந்திருக்கிறது ‘டிரெண்டிங்’ திரைப்படம். ஒரு தம்பதியின் வாழ்வில், யூடியூப் வருமானம் திடீரென நின்றுபோக, அதை மீட்க அவர்கள் ஒரு மர்மமான ரியாலிட்டி ஷோவில் பங்கேற்பதும், அதனால் ஏற்படும் எதிர்பாராத விளைவுகளும்தான் படத்தின் மையக்கரு.
கதைச் சுருக்கம்:
கலையரசன் – பிரியாலயா தம்பதி, தங்களின் யூடியூப் சேனல் மூலம் மாதம் லட்சக்கணக்கில் சம்பாதித்து, ஆடம்பர பங்களா, கார் என வசதியாக வாழ்கிறார்கள். சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் அவர்களைப் பின் தொடர்கிறார்கள். ஒரு நாள், அவர்களின் யூடியூப் சேனல் மர்மமான முறையில் நீக்கப்பட, வருமானமின்றி கடன்பிரச்சனையில் சிக்கித் தவிக்கிறார்கள்.
அப்போது, தொலைபேசி மூலம் ஒரு மர்ம நபர் அவர்களைத் தொடர்புகொண்டு, ஒரு ரியாலிட்டி ஷோ நடத்துவதாகவும், அதில் பங்கேற்று வெற்றி பெற்றால் கோடிக்கணக்கில் பணம் கிடைக்கும் என்றும் ஆசை காட்டுகிறார். ஆனால், இந்த ஷோ பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது, 7 நாட்கள் தங்களின் வீட்டிலேயே விளையாட வேண்டும், ஒவ்வொரு டாஸ்க்கிலும் வெற்றி பெற்றால் பரிசுத் தொகை அதிகரிக்கும், ஆனால் தோல்வியடைந்தால் வென்ற தொகையையும் இழக்க நேரிடும் போன்ற பல கடுமையான விதிகளை அவர் விதிக்கிறார்.
கடன் பிரச்சனையில் இருந்து மீளவும், பணத்தேவைக்காகவும் இந்த விசித்திரப் போட்டியில் பங்கேற்கும் தம்பதி, ஆரம்பத்தில் எளிமையான டாஸ்க்குகளில் வெற்றி பெற்று சில லட்சங்களை வெல்கிறார்கள். ஆனால், போட்டி தீவிரமாகி, அவர்கள் எதிர்பாராத சிக்கல்களைச் சந்திக்கிறார்கள். இவை என்ன? இதனால் அவர்களின் வாழ்க்கையில் எத்தகைய பிரச்சனைகள் உருவாகின்றன? சமூக ஊடகங்கள் மூலம் பணம் சம்பாதிப்பவர்களின் மனசாட்சியை உலுக்கும் வகையில் இவை காட்சிப்படுத்தப்பட்டிருப்பதுதான் ‘டிரெண்டிங்’ படத்தின் மைய அம்சம்.
நடிப்பு மற்றும் தொழில்நுட்பம்:
கதாநாயகனாக நடித்திருக்கும் கலையரசன் மற்றும் கதாநாயகியாக நடித்திருக்கும் பிரியாலயா இருவரும் முழுப் படத்தையும் தங்கள் நடிப்பால் தாங்கிப் பிடித்திருக்கிறார்கள். இவர்களுக்கு இடையே நடக்கும் உரையாடல்கள், உணர்வுப்பூர்வமான தருணங்கள் கொண்ட திரைக்கதையை இருவரும் தங்கள் இயல்பான நடிப்பு மூலம் சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்கிறார்கள்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு கலையரசன் தன் நடிப்புத் திறமையை முழுமையாக வெளிப்படுத்தும் கதாபாத்திரத்தைப் பயன்படுத்திக் கொண்டு பாராட்டு பெறுகிறார். பல இடங்களில் வசனம் பேசாமல், தனது கண்களின் மூலமாகவே நடித்திருக்கும் கலையரசன், தனது கதாபாத்திரத்தின் குணாதிசயங்கள் மாற்றம் அடையும் இடங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார்.
நடனம் மூலம் அறியப்பட்ட நடிகை பிரியாலயா, இந்தப் படத்தில் ஒரு சிறந்த நடிகையாக முத்திரை பதித்துள்ளார். நாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தில், போட்டி போட்டு நடித்திருக்கும் அவர், தனது உணர்வுப்பூர்வமான நடிப்பு மூலம் ரசிகர்களைக் கவர்ந்திழுத்து விடுகிறார்.
சிறிய வேடம் என்றாலும் பிரேம் குமாரின் கதாபாத்திரமும், அவரது நடிப்பும் திரைக்கதைக்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. பெசண்ட் நகர் ரவி, வித்யா போர்கியா, ஷிவனயா போன்றோரின் வருகை திரைக்கதையில் எதிர்பாராத திருப்பங்களுக்கு உதவியிருக்கிறது.
ஒரே வீட்டில் நடக்கும் கதை என்றாலும், வெவ்வேறு கோணங்கள் மூலம் காட்சிகளில் வித்தியாசத்தைக் காட்டியிருக்கும் ஒளிப்பதிவாளர் பிரவீன் பாலு, கதாபாத்திரங்களின் உணர்வுப்பூர்வமான நடிப்பை பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் படமாக்கியிருக்கிறார்.
இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கின்றன. ‘தடுமுட்டு’ சத்தங்களைத் தவிர்த்துவிட்டு, பின்னணி இசையை அளவாகக் கையாண்டிருக்கும் சாம்.சி.எஸ், மர்ம நபரின் குரல் மற்றும் அவரது ‘எண்ட்ரி பீஜியம்களை’ கவனம் ஈர்க்கும் வகையில் கொடுத்திருக்கிறார். படத்தொகுப்பாளர் நாகூரான் ராமச்சந்திரன், சில இடங்களில் விறுவிறுப்பாகவும், பல இடங்களில் பார்வையாளர்களின் யூகங்களுக்கு ஏற்பவும் காட்சிகளைத் தொகுத்திருக்கிறார்.
படத்தின் நோக்கம் மற்றும் விமர்சனம்:
யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலம் பணம் சம்பாதிக்கும் பலர், அதற்காகப் பல்வேறு யுத்திகளைக் கையாளுகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்வியல் சம்பவங்களைப் பகிர்ந்துகொள்வதோடு, சில அந்தரங்க விஷயங்களையும் பகிரும் அவலங்கள் தற்போது அதிகரித்து வருகின்றன. அத்தகையவர்களுக்கு அறிவுரையாக மட்டும் இன்றி, ஒரு ‘எச்சரிக்கை மணி’ அடிக்கும் வகையிலும் இந்தப் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சிவராஜ்.
தம்பதியின் யூடியூப் சேனல் திடீரென்று டெலிட் ஆவது, அந்த நேரத்தில் ரியாலிட்டி ஷோ பற்றிய அழைப்பு, அதனால் ஏற்படும் பிரச்சனைகள் எனப் படம் ஆரம்பத்தில் சுவாரஸ்யமாக நகர்கிறது. இருப்பினும், தம்பதி சந்திக்க இருக்கும் சிக்கல்கள் அனைத்தும் பார்வையாளர்கள் யூகிப்பது போலவே இருப்பது சற்று தொய்வைக் கொடுக்கிறது. இருப்பினும், பிரேம் குமாரின் வருகைக்குப் பிறகு தொடங்கும் இரண்டாவது சீசன் போட்டியும், அதில் தம்பதிக்குக் கொடுக்கப்படும் டாஸ்க்குகளும் அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்திருப்பது படத்தின் திருப்பத்திற்கு உதவுகிறது.
ஒரே இடத்தில் நடக்கும் கதை, போட்டியின் மூலம் கணவன் – மனைவிக்கு இடையே ஏற்படும் பிரச்சனைகள் யூகிப்பது போல் இருப்பது ஆகியவை திரைக்கதையைச் சில இடங்களில் தொய்வடையச் செய்தாலும், கலையரசன் மற்றும் பிரியாலயா இருவரின் உணர்வுப்பூர்வமான நடிப்பு படத்தை ரசிக்க வைத்து விடுகிறது.
மொத்தத்தில், ‘டிரெண்டிங்’ திரைப்படம், சமூக ஊடகப் புகழ் மற்றும் பணத்தின் மாயையில் சிக்கி, மனித உறவுகள் எப்படிச் சிதைக்கப்படலாம் என்பதற்கான ஒரு எச்சரிக்கை என்றாலும் சுவாரஸ்யம் மிகக் குறைவு
மார்க் 2.5/5


