கலைஞர் கருணாநிதியின் “தலைமகன்” மு.க.முத்து காலமானார்!
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கலைஞர் மு. கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து (82) உடல்நறைக்குறைவு காரணமாக இன்று (ஜூலை 19, 2025) காலமானார். அவரது மறைவு திமுக தொண்டர்களிடையேயும், திரையுலக வட்டாரத்திலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மறைவு மற்றும் அஞ்சலி
கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த மு.க.முத்து, சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் இன்று காலை காலமானார். அவரது உடல் அஞ்சலிக்காக அவரது இல்லத்திலேயே வைக்கப்பட்டுள்ளது. அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவர் நடிகர் விக்ரமின் உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது

மு.க.முத்துவின் பின்னணி
கலைஞர் கருணாநிதிக்கும், அவரது முதல் மனைவி பத்மாவதி அம்மாளுக்கும் பிறந்த மூத்த மகன் மு.க.முத்து. 1970களில் திரைப்படங்களில் நாயகனாக நடித்துப் பிரபலமானவர். ‘பிள்ளையோ பிள்ளை’, ‘சமர்ப்பணம்’, ‘பூக்காரி’, ‘அலைபாயும் தேசம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவரது சில படங்களுக்கு கருணாநிதி கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். திரையுலகில் ஒரு பாடகராகவும் மு.க.முத்து அறியப்பட்டவர். எம்.ஜி.ஆரைப் போலவே இவரும் தனது படங்களில் பாடல்கள் பாடி நடித்துவந்தார். குறிப்பாக. இவரின் ’நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா’, ’சொந்தக்காரங்க எனக்கு ரொம்ப பேருங்க’ ஆகிய பாடல்கள் மக்களால் மிக விரும்பப்பட்டவை.
இருப்பினும், அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்வில் ஏற்பட்ட சில சவால்களால், அவர் படிப்படியாக திரையுலகிலிருந்தும், பொதுவாழ்விலிருந்தும் விலகினார். ஒரு சூழலில் தனது தந்தையுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக தனித்து வசித்து வந்த மு.க.முத்து, அரசியலிலிருந்தும் விலகியே இருந்தார். ஒரு கட்டத்தில், ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது அவரை சந்தித்த மு.க முத்து, தனது வறுமை நிலைப் பற்றி கூறினார். இதனைத் தொடர்ந்து அவருக்கு அதிமுக சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்து ஜெயலலிதா உதவினார். இது தமிழக அரசியலில் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு சில காலமாக மு.க முத்து எங்கே இருக்கிறார் என்பது பலருக்கும் தெரியாமல் இருந்து வந்தது.
குடும்பத்தின் சோகம்
மு.க.முத்துவின் மறைவு, கலைஞர் குடும்பத்திற்கு மேலும் ஒரு பேரிழப்பாகும். கலைஞர் கருணாநிதி மறைவுக்குப் பிறகு, அவரது குடும்பத்தினர் தொடர்ச்சியான இழப்புகளை சந்தித்து வருகின்றனர். மு.க.முத்துவின் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மு.க.முத்துவின் உடல் பொதுமக்களின் பார்வைக்காக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்படும். அன்னாரது இறுதி ஊர்வலம் மாலை 5 மணிக்கு நடைபெறும். சென்னை, பெசன்ட் நகர், மின் மயானத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும்.


