விஜய் மில்டன் இயக்கிய ‘கடுகு’ – விமர்சனம்!

விஜய் மில்டன் இயக்கிய ‘கடுகு’  – விமர்சனம்!

இப்போதெல்லாம் நாளிதழ்கள் உள்ளிட்ட எல்ல ஊடகங்களிலும் பாலியல் குறித்த செய்திகள் தவறாமல் இடம் பெறுவது வாடிக்கையாகி விட்டது. அதிலும் தற்போதைய சமூகத்தில் நிலவி வரும் பாலியல் சீண்டல்கள் எந்த வயது பெண்களாக இருந்தாலும் அவர்களை தொடர்ந்து வரும் மிகப் பெரிய ஆபத்தாகவே சுற்றிக் கொண்டிருக்கிறது. இதுபற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு இருந்தால்தான் இந்தக் கொடூரங்கள் கொஞ்சமேனும் குறையும் என்பதை வலியுறுத்தும் படமாக அமைந்துள்ளது கடுகு.

kadugu mar 24

அதற்காக ஒட்டு மொத்த படத்தையும் சீரியஸாக காட்டாமல் கொஞ்சூண்டு நகைச்சுவையும் கொடுத்து ரசிக்கும்படியான ஒரு படத்தை கொடுத்திருக்கிறார். இப்படத்திற்கு மேலும் பலம் சேர்ப்பதுபோல் வசனங்களை சேர்த்துள்ளது சபாஷ் சொல்ல வைக்கிறது .குறிப்பிட்டு சொல்வதென்றால் புளூபிலிம்ல நடிக்கிற நடிகைகளை தேடிப்பிடித்து ஆட்டோகிராப் வாங்குறீங்க. ஆனால் உங்க பக்கத்து வீட்ல இருக்குற தப்பே செய்யாத பெண்ணை பார்த்து தப்பா பேசுறீங்களே..? என்னதாண்டா உங்க பிரச்சினை…? என்று ராஜகுமாரன் கேட்கும் கேள்விக்கும் ”எழுத படிக்க தெரியாதவங்க கூட பேஸ்புக், ட்விட்டரால எழுத்தாளாராயிட்டங்க”, ”மத்தவங்க நம்மை எப்படி பார்க்கிறார்கள் என்பதை விட, நாம் நம்மை எப்படி பார்க்கிறோம் என்பது தான் முக்கியம்” உள்ளிட்ட பல வசனங்கள் கைதட்டல் பெறுகின்றது. அதேபோல், விஜய் மில்டனின் ஒளிப்பதிவும் பாராட்டும்படி இருக்கிறது. கதை நடக்கும் கிராமத்தின் அழகை அவர் பதிவாக்கியிருக்கும் விதமும், ஒருசில காட்சிகளில் அவர் வைத்திருக்கும் கேமரா கோணமும் பார்ப்பவர்களை கதையோடு ஒன்றி பயணிக்க உதவியிருக்கிறது.

கதை என்னாப்பா என்று கேட்டால் புலி வேஷம் போடுபவர் ராஜகுமாரன், அந்த தொழில் நலிந்தது போய் விட்டதால் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷுக்கு குக்காக வேலை பார்த்து வருகிறார். வெங்கடேஷ் டிரான்ஸ்பர் ஆகி வேறு ஊருக்கு போகும் போது அவருடனே ராஜகுமாரனும் சென்றுவிட, அந்த ஊர் போலீஸ் ஸ்டேஷனில் எடுபிடி வேலை செய்து வரும் பரத் சீனிக்கு நண்பராகிவிடுகிறார்.

இதனிடையே அப்படி போன ஓர் ஊரில், பெரிய பணக்காரராக இருக்கும் பரத், சுயேட்சையாக வெற்றி பெற்று ஊர் தலைவராக இருப்பதுடன், குத்துச்சண்டை வீரராகவும் இருக்கிறார். நிகழ்ச்சி ஒன்றுக்காக ஊருக்கு வரும் அமைச்சரை பரத் தனது வீட்டில் தங்க வைக்க விரும்ப அதற்கு அமைச்சரும் சம்மதம் தெரிவிக்கிறார். அப்போது அந்த ஊரில் உள்ள சிறுமி ஒருவரிடம் அமைச்சர் தவறாக நடக்க, அதைப் பார்த்துவிடும் பரத், அமைச்சருக்கு சாதகமாக நடந்துக் கொள்கிறார். இதனால் அந்த சிறுமி பெரிதும் பாதிக்கப்படுவதுடன், தற்கொலை செய்துக் கொள்கிறார். இதனை அறிந்துக் கொள்ளும் ராஜகுமாரன், அமைச்சருக்கும், அவருக்கு உடந்தையாக இருந்த பரத்திற்கும் தண்டனை வாங்கித்தர போராடுகிறார். அதே சமயம் எம்.எல்.ஏ சீட்டுக்காக அமைச்சருக்கு ஆதரவாக இருக்கும் பரத் ராஜகுமாரனை அடக்க நினைக்க இறுதியில் யார் யாரை அடக்கினார்கள் என்பதுதான் மிச்சம்.

இந்த படத்தில் ராஜகுமாரன் ஹீரோவானது பொறுத்தமாக அமைந்திருப்பது போலவேபரத் வில்லன் கேரக்டருக்கு பாந்தமாய் அமைந்திருப்பதுதான் மிகப்பெரிய ஆச்சரியம். இயக்குநராக இருந்த ராஜகுமாரன் தனக்கு என்ன வருமோ அதையே நடிப்பாக வெளிப்படுத்தியுள்ளவரின் ஆக்டிங்கைக் காட்டிலும் அவரது கேரக்டர் ரசிகர்கள் மனதில் பதிந்துவிடுகிறது. அதேபோல, பரத்தின் காதலியை ஒருதலையாக காதலித்து, பரத்திடம் வாங்கி கட்டிக்கொள்ளும் பரத் சீனியும் ஒரு இடத்தில் தன்னை ஹீரோவாக காட்டிக்கொள்கிறார். அருணகிரியின் இசையில் பாடல்கள் நினைவில் நிற்கவில்லை என்றாலும், அனூப் சீலியின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

ஆனாலும் படம் ஆரம்பம் முதல் முடியும் வரை ரொம்ப மெதுவாக நகர்வதும் க்ளைமாக்ஸ் காட்சியில் ராஜகுமாரனுக்கு கொடுக்கும் பில்டப் மசாலாவெல்லாம் வியாபாரத்துக்காக திணிக்கப்பட்டதை ஒவ்வொருஇ ரசிகனும் உணர்ந்து கொள்கிறான்.

தனது‘கோலி சோடா’வை இன்னொரு வடிவில் கொடுத்துள்ள விஜய் மில்டனின் ‘கடுகு’ கடுகுதான்!

error: Content is protected !!