ரத்னம் – விமர்சனம்!

ரத்னம் – விமர்சனம்!

பிரசாந்த், சிம்ரன் நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு ரிலீசான ‘தமிழ்’ என்கிற படம் மூலம் டைரக்டராக அறிமுகமானவர் ஹரி. விக்ரம் போலீஸ் அதிகாரியாக நடித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆன சாமி திரைப்படம், இயக்குனர் ஹரிக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. இதையடுத்து சிம்பு, சரத்குமார், சூர்யா, விஷால் என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கியதன் மூலம் ஸ்டார் டைரக்டராக உயர்ந்தார். இதையடுத்து சூர்யாவை வைத்து இவர் இயக்கிய சிங்கம் திரைப்படம் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் வெற்றியின் காரணமாக அப்படத்தின் 2 மற்றும் 3-ம் பாகங்களையும் இயக்கி வெற்றி கண்டார் இயக்குனர் ஹரி. சில ஹிட் ஆகாத படங்களையும் கொடுத்த ஹரி படமென்றாலே ஸ்பீட்தான்.. ஆம் காட்சிக்குக் காட்சி ஃபாஸ்டாக மூவ் ஆகிக் கொண்டே இருக்கும் சினிமா வழங்குவதில் மாஸ்டர் டிகிரி வாங்கிய ஹரியுடன் விஷால் என்ற ஆக்‌ஷன் நாயகன் இணைந்து காலத்துக்கேற்றார் போல் வழங்கியுள்ள படமே ரத்னம்!

கதை என்னவென்றால் இளம் வயதில் அம்மாவை இழந்த ரத்னம் (விஷால்) தன்னை அடாப்ட் எடுத்து வளர்த்த பன்னீர் செல்வத்துக்காக (சமுத்திரகனி) கொலை ஒன்றை செய்துவிட்டு சிறார் கூர்நோக்கு இல்லத்துக்குச் செல்கிறார். தண்டனைக் காலம் முடிந்து அவர் வெளியே வரும்போது, பன்னீர் செல்வம் எம்எல்ஏவாக ஆன நிலையில் அவரிடமே அடியாளாக இருக்கின்றார். நல்லவராக நடமாடும் அரசியல்வாதியிடம் அடியாளாக இருக்கும் விஷால், “ கொள்கைக்காக கொலையே செய்வேன்” என்ற மனநிலையில்தான் இருக்கின்றார். இச் சூழலில் ஒருநாள் எதிர்பாராத விதமாக மல்லிகா (ப்ரியா பவானி சங்கர்) சந்திக்கும் ரத்னம் அவர் மீது அளவு கடந்த அன்பு காட்டுகிறார். அத்துடன் நிற்காமல், அன்புக் காட்டிய பெண்ணை கொல்ல வரும் வில்லன்களை அடித்து துரத்தி விட்டு, கொஞ்சம் ஓவராக அன்புக் காட்டி அவரை பாதுகாக்கும் வாட்ச்மேன் வேலையே பார்க்க ஆரம்பித்து விடுகிறார். புது பெண் மீது அவர் கொண்டிருக்கும் அன்புக்கு என்ன காரணம்? மல்லிகாவை வில்லன்கள் கொல்லத் துடிப்பது ஏன்? அப்புறம் என்ன ஆகிறது? – இதுதான் ரத்னம்.

நடிப்பைப் பொறுத்தவரை விஷால் ஆக்ஷன் படங்களுக்கு பெயர் போனவர் . அதையும் தாண்டி, ஹரியின் ஏற்பாட்டில் பத்து நிமிடத்துக்கு ஒரு ஃபைட் – அதுவும் பீட்டர் ஹெயின், கனல் கண்ணன், திலீப் சுப்பராயன் மாஸ்டர்களை வைத்துக்கொண்டு விஷாலை விட்டு அடி அடி என்று அடிக்க வைத்திருப்பது அட்டகாசமாகவே இருக்கிறது. அதிலும் ஒவ்வொரு ஆக்ஷனுக்கும் விஷால் பொருத்தமாக இருக்கிறார் என்பதுதான் ஹைலைட்.. அப்படி ஆக்ஷனில் என்றில்லாமல் நடிப்பிலும் குறிப்பாகத் தாய்ப் பாசத்தில் நெகிழ வைத்து விடுகிறார். மார்க் ஆண்டனியைத் தொடர்ந்து விஷாலுக்கு பேர் சொல்லும் படமாகி விட்டது இந்த ரத்னம். ஆனாலும் பல இடங்களில் தொண்டை நரம்புகள் புடைக்க நடிப்பதுதான் ஆக்டிங் என்பதை மறந்து விட்டால் நலம்.

பிரியா பவானி சங்கர் கேரக்டர் அருமை . அந்த கதாபாத்திரத்தின் கனத்தை உணர்ந்து சிறப்பாக நடித்து இருக்கிறார், விஷால் மீது அக்கறை காட்டும் இடத்தில் கவனிக்க வைத்து இருக்கிறார்!

சமுத்திரகனி . விஷாலுக்காக எடுக்கும் முயற்சிகள் ரசிக்க வைக்கிறது.இவர்களின் கூட்டணி படத்திற்கு பெரிய பலம் ! அதே சமயம் சமுத்திரக்கனி இன்னும் கொஞ்சம் ஹோம் ஒர்க் செய்து நடிக்க வரலாமென்று சொல்ல வைத்து விடுகிறார்.

சிறிது நேரமே வந்தாலும் ஹரி படமிது என்று எக்ஸ்போஸ் செய்து விட்டு போகிறார் கவுதம் வாசுதேவ் மேனன். !

முரளி சர்மா வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்.!அந்தப் பார்வையே பகீரென்று இருக்கிறது. அவரது சினிமா வாழ்க்கையில் இந்த வேடம் அவருக்கு எக்ஸ்ட்ரா சான்ஸை வாங்கித் தரும்.

ஹரிஷ் பெரடி, முத்துகுமார் பங்களிப்பு சிறப்பு !

மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு இவர்கள் கூட்டணி சிரிக்க வைக்க முயற்சி செய்து இருக்கிறார்கள்- அவ்வளவே. மேலும் ஒய் ஜி மகேந்திரன், விஜயகுமார், டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் சின்ன சின்ன ஆனால் முக்கிய வேடங்களில் வந்து போகிறார்கள்.

வேலூர் மற்றும் ஆந்திராவை களமாகக் கொண்டு கதை முன்னரே சொன்னது போல் பரபரவென்று நகர்கின்றது. பரபரப்பாக நகரும் ஹரியின் படத்திற்கு பலம் என்றால் அது படத்தின் திரைக்கதையாக இருக்கும், ஆனால் இந்த படத்தில் திரைக்கதையை விடவும் மிகவும் பலமானது என்றால் சுகுமாரின் கேமராதான். டைரக்டரின் மைண்ட் வாய்ஸைப் புரிந்து கேமராவை சுற்றி சுழன்று அடித்திருக்கிறார். அது மட்டுமின்றி சிங்கிள் ஷாட்டும், சண்டைக்காட்சி ஒன்றில் அருவாளுடன் கேமரா பயணிக்கும் இடமும் பலே சொல்ல வைத்து விடுகிறார்.

அதேபோல் படத்தொகுப்பும் கதைக்கு பெரும் தூணாக அமைந்துள்ளது. படம் முழுக்க வரும் கனல் கண்ணன், திலீப் சுப்புராயனின் சண்டைக்காட்சிகள் பில்டப் காட்சிகளாக இல்லாமல், படத்தின் கதையோட்டத்திற்கு ஏற்றவாறே, அமைந்துள்ளது.

படத்திற்கு இன்னொரு பலம் என்றால் அது தேவிஸ்ரீ பிரசாந்தின் இசை. படத்தில் இரண்டு பாடல்கள் மட்டும் இருந்தாலும் பின்னணி இசையில் ஸ்கோர் செய்துள்ளார் தேவிஸ்ரீ பிரசாந்த்.

மொத்தத்தில் சினிமா ரசிகன் ஒவ்வொருவரும் ஏற்கும்படியான ஒன் – லைன், இன்னும் கொஞ்சம் அக்கறைக் காட்ட வேண்டிய திரைக்கதை, அமர்களப்படுத்தும் ஒளிப்பதிவு, பிரமாதமான பின்னணி இசை என  விஷால் & ஹரி ரசிகர்கள் லைக் பண்ணத் தகுந்த சினிமா பட்டியலில் இணைந்து விட்டது.

மார்க் 3.5/5

error: Content is protected !!