இந்தியாவில் செல்போன் சேவையின் துவக்க தினமின்று!
இன்றைய தினம் (ஜூலை 31) இந்திய தொலைத்தொடர்பு வரலாற்றில் ஒரு பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாளாகும். சரியாக 1995 ஆம் ஆண்டு இதே நாளில் தான், இந்தியாவில் முதன்முதலில் வணிக ரீதியிலான செல்போன் சேவை தொடங்கப்பட்டது. அன்றைய மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் சுக்ராம் டெல்லியில் இருந்தபடி, மேற்கு வங்க முதலமைச்சர் ஜோதி பாசுவுடன் கொல்கத்தாவில் பேசினார். இதுவே இந்திய மண்ணில் பதிவான முதல் அதிகாரப்பூர்வ செல்போன் அழைப்பு. ஆனாலும் அதற்கு அடுத்த ஆண்டு 1996 ஏப்ரல் மாதமே இது வாடிக்கையாளர் பயன்பாட்டுக்கு வந்தது.

முதல் செல்போன் மற்றும் அதன் சவால்கள்
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அழைப்பை மேற்கொள்ளப் பயன்படுத்தப்பட்ட தொலைபேசி Motorola DynaTAC 8000X ஆகும். இதுவே உலகின் முதல் வயர்லெஸ் போனாகும். கிட்டத்தட்ட ஒரு கிலோ எடையுள்ள இந்த போனை வெளியே எடுத்துச் செல்வது அன்றைய காலத்தில் சற்றே சிரமமாக இருந்தது. அந்த போனின் மற்றொரு பெரிய சவால், அதன் பேட்டரி ஆயுள். முழுமையாக சார்ஜ் செய்ய 10 மணி நேரத்திற்கும் மேலானது, ஆனால் முழு சார்ஜில் வெறும் அரை மணி நேரம் மட்டுமே பேச முடிந்தது. மோட்டோரோலா போன் அறிமுகமான பின்னரே, நோக்கியா மற்றும் சாம்சங் போன்ற நிறுவனங்கள் இந்திய சந்தையில் நுழைந்தன.
ஆரம்பகால நெட்வொர்க் மற்றும் கட்டணங்கள்
ஆரம்பத்தில், மோடி – டெல்ஸ்ட்ரா நெட்வொர்க் என்ற நிறுவனம்தான் இந்தியாவில் செல்போன் கம்யூனிகேஷன் சேவைகளை நடத்தி வந்தது. இது இந்தியாவின் பி.கே. மோடி மற்றும் ஆஸ்திரேலியாவின் டெல்ஸ்ட்ரா நிறுவனங்களின் கூட்டு அமைப்பாகும். முதல் நெட்வொர்க் கொல்கத்தாவையும் டெல்லியையும் இணைத்தன.

அன்றைய காலகட்டத்தில் தொலைபேசி கட்டணங்கள் மிகவும் அதிகமாக இருந்தன. வெளிச்செல்லும் (Outgoing) மற்றும் வரும் அழைப்புகளுக்கு (Incoming) ஒரு நிமிடத்திற்கு ரூ. 8.40 நிர்ணயிக்கப்பட்டது. பிஸியான நேரங்களில் (Peak Hours) இது நிமிடத்திற்கு ரூ. 16.80 ஆக வசூலிக்கப்பட்டது. பண மதிப்பு சற்று அதிகமாக இருந்த அக்காலத்தில், இந்த செல்போன் பில் மிக செலவுமிக்கதாகவே கருதப்பட்டது. செல்போன் வைத்திருப்பது என்பது மிகவும் வசதி படைத்தவர்களுக்கான ஒரு ஆடம்பரப் பொருளாகவே பார்க்கப்பட்டது.
தொலைத்தொடர்பு புரட்சியும் இன்றைய நிலையும்
நாட்கள் செல்லச் செல்ல, எளிதாக பயன்படுத்தும் வகையில் கையடக்க போன்களை நிறுவனங்கள் தயாரிக்கத் தொடங்கின. ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாக செல்போன் டெலிகாம் துறை வளர்ச்சியடைந்து, இன்று நாம் காணும் 4G, 5G, ஒரு வருட திட்டங்கள், அனைத்து திட்டங்களுக்கும் அன்லிமிடெட் கால் வசதி போன்ற அதிரடி மாற்றங்களை அடைந்துள்ளது.
குறிப்பாக, 2016 ஆம் ஆண்டில் ஜியோவின் வருகைக்குப் பிறகு இந்திய செல்போன் தொழில்நுட்பத் துறையில் ஒரு புரட்சிகரமான மாற்றம் ஏற்பட்டது. தரவு (Data) பயன்பாடு பன்மடங்கு பெருகி, கட்டணங்கள் வெகுவாகக் குறைந்தன.
1995 ஆம் ஆண்டு நடந்த முதல் செல்போன் அழைப்பு மற்றும் இன்றைய சூழலை ஒப்பிட்டுப் பார்த்தால், தொழில்நுட்பத்தின் வளர்ச்சி எந்த அளவுக்கு மனித வாழ்வை மாற்றியுள்ளது என்பதை தெளிவாக உணர முடியும். தற்போது, 50 வருடங்களுக்குப் பிறகு, மனிதர்களின் வாழ்வில் ஒரு நிமிடம் கூட போன் இல்லாமல் இருக்க முடியாத சூழலுக்கு நாம் வந்துவிட்டோம். ஸ்மார்ட்போன் என்பது இன்றைய உலகில் அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றாக மாறிவிட்டது என்பது மறுக்க முடியாத உண்மை.


