கிரிகோரியன் நாட்காட்டி (Gregorian Calendar) அங்கீகரிக்கப்பட்ட தினமின்று!
நாம் எத்தனையாம் தேதி என்று பார்ப்பதற்கும், திட்டமிடுவதற்கும் பயன்படுத்தும் காலண்டர் முறை உருவான கதை மிகவும் சுவாரசியமானது. சரியாக 444 ஆண்டுகளுக்கு முன்பு, இதே பிப்ரவரி 24-ஆம் தேதியன்றுதான் (1582) இன்று நாம் பயன்படுத்தும் காலண்டர் முறைக்கான அடித்தளம் அமைக்கப்பட்டது. ஆம்.. உலகம் முழுவதும் பல மொழிகள், பல மதங்கள், ஆயிரக்கணக்கான கலாச்சாரங்கள்… ஆனால் அத்தனை பேரையும் ஒரு புள்ளியில் இணைப்பது நாம் பயன்படுத்தும் ‘தேதி’. இன்று பிப்ரவரி 24. உலகம் முழுமைக்கும் இது பிப்ரவரி 24 தான். இந்த ஒற்றைத்தன்மையை நமக்குத் தந்ததுதான் கிரிகோரியன் காலண்டர் (Gregorian Calendar) அங்கீகரிக்கப்பட்ட தினம்!

🦉 லத்தீன் முதல் நைல் நதி வரை
‘காலண்டர்’ (Calendar) என்ற ஆங்கிலச் சொல், ‘கணக்குக் கூட்டுவது’ எனும் பொருள் தரும் ‘கலண்டே’ (Calende) எனும் இலத்தீன் சொல்லிலிருந்து உருவானது. ஆதிகாலத்தில் புவியியல் மற்றும் கால நிலைகளில் ஏற்பட்ட பெரும் மாற்றங்களே துவக்க கால காலண்டர்களுக்கு அடிப்படையாக அமைந்தன. இதற்குச் சான்றாக, நைல் நதியில் ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளப்பெருக்கை அடிப்படையாகக் கொண்டு புராதன எகிப்தியர் உருவாக்கிய காலண்டரைக் கூறலாம்.
🛡️ ஜூலியன் காலண்டரின் சிக்கல்
இன்று நம் முன்னே இருக்கும் காலண்டரின் அடிப்படை, கி.மு. 45-இல் ஜூலியஸ் சீசரால் உருவாக்கப்பட்ட ஜூலியன் காலண்டரே. இதற்கு முன் நிலவை அடிப்படையாகக் கொண்ட நாட்காட்டி பயன்படுத்தப்பட்டு வந்தது. அதில் பண்டிகைகளும் தேதிகளும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருந்தன. சூரியன் வடக்கிலிருந்து தெற்காகவும் (தட்சிணாயணம்), தெற்கிலிருந்து வடக்காகவும் (உத்தராயணம்) பயணிப்பதோடு பண்டிகை தினங்கள் ஒத்துப்போகாமல் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தன.
உதாரணத்திற்கு, ஈஸ்டர் பண்டிகையைக் கூட தவறான பருவங்களில் கொண்டாட வேண்டிய சூழல் ஏற்பட்டது. 1582-ஆம் ஆண்டு வாக்கில் சூரியனை அடிப்படையாகக் கொண்ட நாட்காட்டியோடு ஜூலியன் நாட்காட்டி ஒருங்கிணையாமல் சுமார் பத்து நாட்கள் வேறுபட்டு நின்றது.
⏳ போப் கிரிகோரியின் அதிரடித் திருத்தம்
ஒவ்வொரு நான்கு ஆண்டுகள் கழியும் போதும் இந்த பிரச்சனை அதிகரித்ததே ஒழிய குறையவில்லை. எனவே, 13-வது போப் கிரிகோரி இப்பிரச்சனைகளைச் சரி செய்யத் தீர்மானித்தார். அலோயி ஷியஸ் ல்லியஸ் என்னும் மருத்துவரின் உதவியுடன், ஜூலியன் நாட்காட்டியில் இருந்த குறைபாடுகளைத் திருத்தி 1582 பிப்ரவரி 24-இல் புதிய ஆணையைப் பிறப்பித்தார்.
இதன் விளைவாக, 1582-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10 நாட்கள் நாட்காட்டியிலிருந்து அப்படியே நீக்கப்பட்டன. அதன்பிறகே ஈஸ்டர் பண்டிகை வசந்த காலத்திலும், உத்திராயண தட்சிணாயன காலங்கள் சரியான தேதிகளிலும் அமையத் தொடங்கின.

🌏 உலக அங்கீகாரமும் தமிழ் உறவும்
இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினத்தை அடிப்படையாகக் கொண்டு ஒழுங்கமைக்கப்பட்ட இந்த முறையை ஸ்பெயின், போர்ச்சுக்கல், இத்தாலி போன்றவை 1582 அக்டோபர் முதல் பயன்படுத்தத் துவங்கின. ஆனால் இங்கிலாந்தும் அமெரிக்காவும் 1752-க்குப் பிறகே அங்கீகரித்தன. 1923 பிப்ரவரி 15-இல் அங்கீகரித்த கிரீஸே இப்பட்டியலில் இணைந்த கடைசி நாடு.
இன்று உலகம் முழுவதும் கிரிகோரியன் காலண்டரைப் பின்பற்றினாலும், தமிழினம் போன்ற ஆதிக்குடிகள் தங்களுக்கு எனத் தனி நாட்காட்டிகளை இன்றும் வைத்துள்ளன. சித்திரை, வைகாசி எனத் தமிழ் மாதங்களைப் பார்த்துச் சுப காரியங்களுக்குத் தேதி குறித்துவிட்டு, அதன் பின்னரே ஆங்கிலத் தேதியைக் குறிப்பிடுவதை இன்றும் பார்க்க முடிகிறது.
அடிசினல் ரிப்போர்ட்
பிப்ரவரி 24 (1582): இதுதான் அந்தப் புதிய காலண்டருக்கான அதிகாரப்பூர்வ ஆணை (Papal Bull – Inter gravissimas) போப் கிரிகோரியால் வெளியிடப்பட்ட நாள். அதாவது, “இன்று முதல் இந்தச் சட்டம் அமலுக்கு வருகிறது” என்று கையெழுத்திட்ட நாள் இது.
அக்டோபர் 4 (1582): இது அந்தச் சட்டம் செயல்படுத்தப்பட்ட நாள். ஆணை பிப்ரவரியில் வெளியானாலும், நடைமுறைக்கு வர சில மாதங்கள் ஆனது. அதனால் அக்டோபர் 4-ஆம் தேதி வியாழக்கிழமை முடிந்து, அடுத்த நாள் வெள்ளிக்கிழமை காலண்டரில் 5-ஆம் தேதிக்கு பதில் 15-ஆம் தேதியாக மாற்றப்பட்டது.
ஏன் இந்த மாற்றம்? ஜூலியன் காலண்டரில் ஒரு வருடம் என்பது சூரிய ஆண்டை விட 11 நிமிடங்கள் அதிகமாக இருந்தது. இது சின்ன விஷயமாகத் தெரிந்தாலும், 1,600 ஆண்டுகளில் இது 10 நாட்களாக வளர்ந்து நின்றது. இதனால் வசந்த கால சமபகல் (Spring Equinox) தேதிகள் மாறி, ஈஸ்டர் பண்டிகை கொண்டாடுவதில் சிக்கல் ஏற்பட்டது. அதைச் சரிசெய்யவே இந்த 10 நாட்களை வரலாற்றில் இருந்து ‘கட்’ செய்தார்கள்.
சுருக்கமாகச் சொன்னால்: பிப்ரவரி 24 ‘அறிவிக்கப்பட்ட’ நாள்; அக்டோபர் 4 ‘அமல்படுத்தப்பட்ட’ நாள்.
டாக்டர்.ரமாபிரபா


