2026 கோடைக்காலம்: கொளுத்தப்போகும் கத்திரி வெயிலும்.. எல்-நினோ எச்சரிக்கையும்!
தமிழகத்தில் பனிக்காலத்தின் தாக்கம் மெல்லக் குறைந்து, சூரியன் தனது சுட்டெரிக்கும் கரங்களால் நிலத்தைத் தழுவத் தயாராகிவிட்டான். இந்த ஆண்டு கோடைக்காலம் என்பது வெறும் பருவகால மாற்றம் மட்டுமல்ல, ‘எல்-நினோ’ எனும் உலகளாவிய வானிலை மாற்றத்தின் தொடக்கப் புள்ளியாகவும் அமையப்போகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாகக் குளிர்ச்சியான நிலையைத் தந்த ‘லா-நினா’ விடைபெற்று, வெப்பத்தை வாரி வழங்கப்போகும் ‘எல்-நினோ’ களம் இறங்குவதால், வரப்போகும் நாட்கள் அக்னி நட்சத்திரத்திற்கு முன்பே அனலாக வீசப்போகின்றன.
வானிலை மாற்றமும் எல்-நினோ வருகையும்
உலக வானிலை அமைப்பில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் எல்-நினோ (EL-NINO), இந்த ஆண்டு அக்டோபர் மாதம் உருவாக வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. தற்போது பசிபிக் பெருங்கடலின் வெப்பநிலை சமநிலையில் (Neutral) இருந்தாலும், ஜூன் மாதத்திலிருந்து அது படிப்படியாக வெப்பமடையத் தொடங்கி எல்-நினோவை நோக்கி நகரும்.

குறிப்பாக, 2020 முதல் 2025 வரையிலான ஐந்து ஆண்டுகள் லா-நினா காலங்களாக இருந்த நிலையில், 2026 மற்றும் 2027 ஆகிய ஆண்டுகள் எல்-நினோ ஆண்டுகளக அமையவுள்ளன. அக்டோபரில் தொடங்கும் இந்தத் தாக்கம் 2027-ல் உச்சத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக 2023 அக்டோபர் முதல் 2024 ஏப்ரல் வரை குறுகிய கால எல்-நினோ நீடித்தது நினைவுகூரத்தக்கது.
எப்படி இருக்கும் 2026 கோடை?
-
அனல் காற்று: கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். மார்ச் முதல் மே வரையிலான காலத்தில், சுமார் 4 முதல் 6 வாரங்கள் வரை வெயில் வாட்டி வதைக்கும்.
-
பனி விலகல்: மார்ச் முதல் வாரத்திலிருந்து பனிப்பொழிவு முழுமையாக விலகி, கோடைக்காலம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கும்.
-
இடிமழை: ஏப்ரல் மாதத்தில் வெப்பச்சலனம் காரணமாக ஆங்காங்கே இடிமழை பெய்ய வாய்ப்புள்ளது. கோடை வெப்பத்திற்கு இது தற்காலிக மருந்தாக அமையும்.
-
நீண்ட கோடை: தமிழகத்தைப் பொறுத்தவரை மே மற்றும் ஜூன் மாதங்களில் வெயில் உச்சத்தில் இருக்கும். இந்த வெப்ப நிலை செப்டம்பர் இறுதி வரை நீடிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
தேர்தல் களம்: அரசியல் கட்சிகளுக்கு எச்சரிக்கை!
தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பிரச்சாரம் செய்யத் திட்டமிட்டுள்ள அரசியல் தலைவர்கள் கவனமாக இருக்க வேண்டும். நண்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலான நேரத்தில் பொதுக்கூட்டங்கள், மக்கள் சந்திப்பு மற்றும் பிரச்சாரங்களைத் தவிர்ப்பது நல்லது.
நிழற்குடை இல்லாத சமவெளி பகுதிகளில் அதிக மக்கள் கூடுவது, அந்த இடத்தின் வெப்பநிலையை மேலும் அதிகரிக்கச் செய்து, உயிருக்கு ஆபத்தான நீர் வறட்சியை (Dehydration) ஏற்படுத்தும். இதனை மாவட்ட ஆட்சியர்களும், தமிழக அரசும் உறுதி செய்ய வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.
பாதுகாப்பு வழிமுறைகள்
-
விவசாயிகளுக்கு: நண்பகல் நேரத்தில் வேளாண் பணிகளைத் தவிர்க்க வேண்டும். நெற்பயிர்கள், தென்னை மற்றும் வாழைக்குத் தகுந்த இடைவெளியில் நீர் பாய்ச்சுவது அவசியம்.
-
முதியவர்கள் மற்றும் குழந்தைகள்: உடல் நலம் குறைந்தவர்கள் மற்றும் முதியவர்கள் அத்தியாவசியத் தேவையின்றி நண்பகல் நேரத்தில் வெளியே செல்ல வேண்டாம்.
-
உணவு முறை: பொதுமக்கள் நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள் மற்றும் நீர் ஆகாரங்களை அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இயற்கையின் மாற்றத்தைப் புரிந்து கொண்டு, தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் இந்த ‘அனல்’ கோடையை நாம் பாதுகாப்பாகக் கடக்க முடியும்.


