ரூபாய் கணக்கில் ஏற்றியவர்கள் பைசா அளவில் குறைத்து மக்களை ஏமாற்றப்பார்க்கிறார்கள்!

ரூபாய் கணக்கில் ஏற்றியவர்கள் பைசா அளவில் குறைத்து மக்களை ஏமாற்றப்பார்க்கிறார்கள்!

தமிழகம் முழுவதும் கடந்த 15 நாட்களுக்கு முன்பு பேருந்து கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியது. சுமார் 66 சதவீத கட்டண உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த கட்டண உயர்வை திரும்ப பெற கோரி பொதுமக்களும் அரசியல் கட்சி தலைவர்களும் போராட்ட நடத்தினர். இந்நிலையில் பேருந்து கட்டணத்தை சிறதளவு குறைத்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 66 சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், 10 பைசா, 5 பைசா வீதம் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. மாற்றியமைக்கப்பட்ட கட்டணங்கள் நாளை முதல் அமலுக்கு வரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த கட்டண குறைப்பு மூலம் நாள் ஒன்றுக்கு 4 கோடி வீதம் நட்டம் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைக்கப்பட்ட கட்டணத்தின் விவரம்

அதாவது சாதாரண பேருந்துகளின் கட்டணம் 60 பைசாவிலிருந்து 58 பைசாவாகவும், விரைவு பேருந்துகளின் கட்டணம் 80 பைசாவிலிருந்து 75 பைசாவாகவும், சொகுசு பேருந்துகளில் 90 பைசாவிலிருந்து 85 பைசாவாகவும், அதிநவீன பேருந்துகளில் 110 பைசாவிலிருந்து 100 பைசாவாகவும் குளிர்சாதன பேருந்துகளில் 140 பைசாவிலிருந்து 130 பைசாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

நகர மற்றும் மாநகர பேருந்துகளில் குறைந்த பட்ச கட்டணம் ரூ.5 லிருந்து ரூ. 4 ஆக குறைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரப் பேருந்துகளில் குறைந்தபட்சக் கட்டணம் 4 ரூபாயாகவும் அதிகபட்சக் கட்டணமாக 22ரூபாயாகவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மற்ற மாவட்ட பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.4 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.18 ஆகவும் மாற்றி தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தத் திட்டம் நாளை ( ஜனவரி 29) முதல் அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது. பேருந்து கட்டண குறைவு காரணமாக நாளொன்றுக்கு ரூ.4 கோடி நஷ்டம் ஏற்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. கட்டண குறைப்பைத் தொடர்ந்து மக்கள் போராட்டத்தை கை விட வேண்டும் என்று அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

அதே சமயம்  இதுதொடர்பாக திமுகவைச் சேர்ந்த துரைமுருகன் கூறியதாவது:

இது தமிழக அரசின் கண் துடைப்பு நடவடிக்கை தான். தமிழகம் முழுவதும் போராட்டங்கள் அதிகரித்து உள்ளதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கையை அவர்கள் மேற்கொண்டு உள்ளார்கள். இதனால் மக்களுக்கு எந்த விதத்திலும் நன்மை கிடையாது என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், விலை ஏற்றத்தின் போது மட்டும் ரூபாய் கணக்கில் ஏற்றியவர்கள் தற்போது, பைசா அளவில் குறைத்து மக்களை ஏமாற்றப்பார்க்கிறார்கள். பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து திமுக அறிவித்திருந்த போராட்டம் திட்டமிட்டபடி நடக்கும் என்றும் துரைமுருகன் தெரிவித்து உள்ளார்.

.

error: Content is protected !!