திருப்பதி:கோயிலில் உள்ளூர் மக்கள் 90 நாட்களுக்கு ஒரு முறையே தரிசனம் – தேவஸ்தானம் அறிவிப்பு.

திருப்பதி:கோயிலில் உள்ளூர் மக்கள் 90 நாட்களுக்கு ஒரு முறையே தரிசனம் – தேவஸ்தானம் அறிவிப்பு.

திருப்பதி ஏழுமலையான்கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை புரிகின்றனர். இலவச தரிசனம், நேர ஒதுக்கீடு தரிசனம், 300 ரூபாய் கட்டண தரிசனம், விஐபி தரிசனம் என பல்வேறு முறைகளில் பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் திருப்பதி உள்ளூர்வாசிகளும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஏழுமலையானை இலவசமாக தரிசனம் செய்தனர்.ஆனால் கடந்த சில ஆண்டுகளாக உள்ளூர் மக்கள் தரிசனம் செய்ய வழங்கப்பட்ட இலவச டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டன. சில அரசியல் காரணங்களால் உள்ளூர் மக்களுக்கான இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் திருப்பதியில் உள்ளூர் மக்கள் தரிசனம் செய்ய மீண்டும் இலவச டிக்கெட்டுகளை வழங்க கடந்த மாதம் நடைபெற்ற முதல் திருப்பதி தேவஸ்தான வாரியக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

உள்ளூர் மக்களுக்கு இலவச தரிசனம்

இதனைத் தொடர்ந்து உள்ளூர் மக்களுக்கு இலவச தரிசன டிக்கெட் வழங்கும் முறை நேற்று முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தான (TTD) தலைவர் பி.ஆர்.நாயுடு, பாலாஜி நகர் சமுதாயக் கூடத்தில் உள்ளூர் எம்எல்ஏ ஸ்ரீனிவாசலுவுடன் இணைந்து திருமலை உள்ளூர் மக்களுக்கு தரிசன டோக்கன் வழங்கும் பணியை நேற்று தொடங்கி வைத்தார்.திருமலை, திருப்பதி கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறம், ரேணிகுண்டா மற்றும் சந்திரகிரி ஆகிய பகுதிகளில் உள்ள உள்ளூர் மக்களுக்கான தரிசன ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. திருப்பதி, திருமலை, ரேணிகுண்டா, சந்திரகிரி ஆகிய பகுதிகளை சேர்ந்த பக்தர்களில் 3 ஆயிரம் பேர் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை இலவசமாக ஏழுமலையானை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் உள்ளூர் மக்களுக்கான இந்த இலவச தரிசனத் திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. இதற்காக திருப்பதியில் உள்ள மகத்தி கலையரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள கவுண்டரில் ஒவ்வொரு வாரமும் 2500 பேருக்கு டிக்கெட் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் திருப்பதி மலையில் உள்ள சமுதாயக் கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள கவுண்டரில் ஒவ்வொரு வாரமும் 500 பேருக்கு இலவச தரிசன டிக்கெட் வழங்கப்படும் என தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.

டிக்கெட் பெற தேவையான பக்தர்கள் தங்களின் ஆதார் அட்டையை காண்பித்து டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மக்கள் தரிசனம் செய்ய மீண்டும் இலவச டிக்கெட்டுகள் வழங்கப்பட்டாலும் சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி உள்ளூர் மக்களான திருமலை, திருப்பதி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் தேவஸ்தானத்தின் இலவச தரிசன திட்டத்தில் ஏழுமலையானை ஒருமுறை வழிபட்டால் அடுத்த 90 நாட்களுக்கு தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

CLOSE
CLOSE
error: Content is protected !!