பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவும் ‘தோழி’ – சென்னை போலீஸில் அறிமுகம்!
பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனதளவிலும், உளவியல் மற்றும் சட்ட ரீதியாக ஆலோசனைகளை வழங்கவும், உதவி புரியவும் தோழி என்ற புதிய திட்டத்தை சென்னை காவல் ஆணையர் ஏகே விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.
சென்னை வேப்பேரியில் உள்ள கமிஷனர் அலுவலகத்தில் இதன் தொடக்க விழா நடைபெற்றது. இத்திட்டத்திற்காக, சென்னையில் உள்ள 35 அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் இருந்து தலா 2 பெண் காவலர்கள் வீதம் தேர்ந்தெடுக்கப்பட்டு மொத்தம் 70 பெண் போலீசாருக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
மனநல மருத்துவர் ஷாலினி, லயோலா கல்லூரி பேராசிரியர் ஆன்ட்ரூ ஜேசுராஜ் ஆகியோர் பங்கேற்று பயிற்சி அளித்தனர். நிகழ்ச்சியில் பேசிய கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கூறுகையில், தோழி திட்டம் போக்சோ சட்டத்தின் கீழ் உருவாக்கப்படது. பாலியல் குற்றங்கள் நடந்த பின் குழந்தைகள், பெண்களுக்கு மனம் மற்றும் உளவியல் ரீதியிலான ஆலோசனைகள் வழங்க, ஒவ்வொரு மகளிர் காவல் நிலையத்தில் இருந்து இரண்டு பெண் காவலர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். இவர்கள், பாதிக்கபட்டவர்களுக்கு சட்ட ஆலோசனைகள் வழங்குவார்கள். ஒவ்வொரு பாதிக்கப்பட்ட குழந்தையின் வாழ்க்கையும் பெண் காவலர்கள் கையில் உள்ளது. தோழி திட்டத்தை பெண் காவலர்கள் சிறப்பாக செய்ய வேண்டும். கடந்த ஜூன் மாதம் முதல் போக்சோ சட்டத்தின்கீழ், 103 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. போக்சோ சட்டம் கொண்டுவரப்பட்ட 2012-ம் ஆண்டு முதல் 1,039 வழக்குகள் பதிவாகியுள்ளது, என்றார்.
இந்த நிகழ்ச்சியில், தோழி அமைப்பிற்காக செயல்பட 70 பெண் காவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவர் களுக்கு பாதிக்கப்பட்ட குழந்தைகளை அணுகும் முறை குறித்தும் பெண்கள் மற்றும் குழந்தை களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை துணை ஆணையர் ஜெயலட்சுமி தலைமையில் மனநல மருத்துவர் ஷாலினி பயிற்சி அளித்தார்.
அதன் பின்னர் தோழி அமைப்பிற்காக செயல்படும் பெண் காவலர்களுக்கு நிர்பயா முத்திரையும், இளஞ்சிவப்பு வண்ண சீருடையும் வழங்கப்பட்டது.
இதன் பின்னர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப் பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமி பத்திரிகையாளர்களை சந்தித்தபோது, சென்னையில் உள்ள 35 காவல் நிலையங்களில் இதற்கென 72 பெண் காவலர்கள் பேர் தேர்வு செய்யப்பட்டதாகத் தெரிவித்தார். மேலும் இந்தப் பிரிவின் கீழ் வெளியிடப்பட்ட தகவலில் கடந்த 2012ம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து 2019 மாதம் வரை ஜூன் மாதம் வரை சென்னையில் குழந்தைகளுக்கு எதிரான குற்றம் குறித்து 936 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் , இதேபோல் கடந்த 2012-ம் ஆண்டிலிருந்து ஜூன் மாதம் 2019 வரை பெண்களுக்கு எதிரான 411 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த அமைப்பு தொடங்கப்பட்ட கடந்த ஜூன் மாதத்தில் இருந்து அக்டோபர் மாதம் வரை 103 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று பெண்களுக்கு எதிரான வழக்குகள் 145 பதிவு செய்யப்படாத இந்த பிரிவின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பிரிவு தொடங்கப்பட்ட பின்னர் 29 வரதட்சணை கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இக்கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெண் காவலர்களுக்கு இன்று ஒரு நாள் முழுவதும் இது குறித்த பயிற்சி அளிக்கப்படுவதாக துணை ஆணையர் ஜெயலட்சுமி தெரிவித்தார்.



