தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் செய்திருக்கும் இந்த செயல், ஓர் அவமானச் சின்னம்!

தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் செய்திருக்கும் இந்த செயல், ஓர் அவமானச் சின்னம்!

ஆண்டாள் பிரச்னையில் திருவில்லிபுத்தூர் கோயிலுக்கு நேரில் சென்று அந்த கோயிலின் ஜீயர் சடகோபன் ராமானுஜரை சந்தித்துப்பேசி, கோயிலில்நெடுஞ்சான்கிடையாக விழுந்து மன்னிப்புக் கேட்டிருக்கிறார் தினமணி பத்திரிகையின் ஆசிரியர் வைத்தியநாதன். கட்டுரையை எழுதிய வைரமுத்து தொடக்கத்தில் வருத்தம் தெரிவித்தார். அதன் பிறகும் அவருக்கு எதிரான எதிர்ப்புகள் தொடர்ந்தாலும் அவர் இது வரை மன்னிப்புக் கேட்கவில்லை. ஆனால் அவர் எழுதிய கட்டுரையை வெளியிட்டதற்காக வைத்தியநாதன் மன்னிப்புக் கேட்டிருக்கிறார். ஒரு பத்திரிகை ஆசிரியர் என்ற பொறுப்பும், மதிப்பும் மிக்க நிலையில் இருந்து அவர் கேட்டிருக்கும் இந்த மன்னிப்பு மிகவும் வெட்கக்கேடானது.

‘தினமணியில் வைரமுத்துவுக்கு எழுத இடம் கொடுத்து பழிச்சொல்லுக்கு ஆளாகி விட்டேன். தெரியாமல் நிகழ்ந்துவிட்ட இந்த தவறுக்காக மன்னிப்புக் கேட்கிறேன்’ என்று தினமணி ஆசிரியர் தெரிவித்தார். இவர் மன்னிப்புக் கேட்டதைப் போலவே விரைவில் வைரமுத்துவும் இங்கே வருவார்’’ என்கிறார் ஜீயர் சடகோபன். அவர் அப்படி சொல்லும்போது வைத்தியநாதனும் அருகில்தான் நிற்கிறார்.‘ஆண்டாள் கட்டுரையை வெளியிட்டதில் எந்த தவறும் இல்லை; அது கருத்துரிமையின் அடிப்படையான ஓர் அங்கம்’ என்று தமிழ்நாட்டின் எழுத்தாளர்கள், அரசியல் அமைப்பினர், பத்திரிகையாளர்கள், அறிவுத்துறையினர் என பல தரப்பினரும் இணைந்து குரல் கொடுத்து வருகின்றனர்.

ஒவ்வொரு நாளும் சமூக ஊடகங்களில் இது விவாத பொருளாக உருப்பெற்று, அந்தக் குறிப்பிட்ட கட்டுரைக்கான ஆதரவுத்தளம் பெருகி வருகிறது. சொல்லப்போனால் தமிழ்நாட்டில் தேவதாசி முறை எப்படி உருவானது, யார் எல்லாம் தேவதாசிகளாக இருந்தனர், ஆண்டாள் தேவதாசியாக இருந்திருப்பதற்கான சாத்தியங்கள் உண்டா, தேவதாசி முறை ஒழிக்கப்பட்டதற்கு நடைபெற்ற போராட்டங்கள், தேவதாசி முறை தொடர்வதற்காக பாடுபட்ட ராஜகோபாலாச்சாரியார், அந்த முறையை ஒழிப்பதற்காக பாடுபட்ட டாக்டர் முத்துலட்சுமி… என வரலாறு மறுவாசிப்பு செய்யப்படுகிறது. வாசகர்களின் வாசிப்பும், வரலாற்று ஆர்வமும் பெருக காரணமான இந்த கட்டுரையை வெளியிட்டதற்காக தினமணி பெருமை கொள்ளலாம். மாறாக அதன் ஆசிரியரோ, பத்திரிகையில் மன்னிப்புக் கேட்டது போதாது என்று, நேரிலேயே சென்றுவிட்டார்.

மதவாதிகளிடம் தாழ்ந்து பணிந்து மன்னிப்புக் கேட்கும் வைத்தியநாதன் இதே வாய்ப்பை ஊழல்வாதிகளுக்கும், கிரிமினல் களுக்கும் வழங்குவாரா என்பதை விளக்க வேண்டும். ஜீயர், மடாதிபதிகள் அல்லாது வேறு ஏதேனும் ஒரு பிரிவினர் இப்படி எதிர்த்து குரல் கொடுத்தால், அப்போதும் இப்படித்தான் நேரில் சென்று மன்னிப்புக் கேட்பாரா? அல்லது ‘கருத்துரிமைக்கு அபாயம்’ என்று காவல்துறைக்குப் போவாரா?

தனிப்பட்ட வைத்தியநாத அய்யராக அவர் எந்த கோயிலுக்கும் சென்று பாவ மன்னிப்புக் கோரலாம். அது அவருடைய தனிப்பட்ட ஆன்மிக நம்பிக்கை. ஆனால் ஒரு பத்திரிகையின் ஆசிரியராக, அவர் அதன் வாசகர்களுக்கு கடமைப்பட்டவர். அந்த நிலையில் இருந்துகொண்டு மிரட்டும் மடாதிபதி களிடம் அடிபணிவதும் மன்னிப்புக் கோருவதும் அருவருப்பானது. ‘பத்திரிகையாளர்’ என்ற பெயரில் செய்யப்படும் இந்த இழிவான செயலுக்கு எங்கள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்கிறோம்.

‘எழுத வாய்ப்புக் கொடுத்து தவறிழைத்துவிட்டேன்’ என வைத்தியநாதன் சொன்னதாக ஜீயர் தெரிவிக்கிறார். அதை அருகில் நின்று வைத்தியநாதன் ஆமோதிக்கிறார். அப்படியானால் இந்த மன்னிப்பைக் கோர வேண்டிய இடம் திருவில்லிபுத்தூர் கோயில் அல்ல; தினமணியின் நடுப்பக்கம். ஏனெனில் ஆண்டாள் கட்டுரை அங்குதான் வெளியானது. அந்தக் கட்டுரையை வெளியிட்டதில் தவறு என்ன என்பதை விளக்கி, இனி ’எந்த தகுதியின் அடிப்படையில் எழுதும் வாய்ப்பு’ வழங்கப்ப டும் என்பதையும் வைத்தியநாதன் தன் வாசகர்களுக்கு கூற வேண்டும். ராமலிங்க அடிகளார் துவங்கி பலர் குறித்து கடந்த ஓராண்டாக வைரமுத்து தினமணியில் எழுதி வரும் நிலையில், திடீரென தகுதி குறித்து வைத்தியநாதன் தன்னிலை விளக்கம் தருகிறார் என்றால், அந்த தகுதி திறமை அடிப்படையிலானதா? பிறப்பின் அடிப்படையிலானதா?தமிழக ஊடக வரலாற்றில் கருத்துரிமைக்காகவும், எழுதும் சுதந்திரத்திற்காகவும் போராடிய பலர் உள்ளனர்.அதற்காக சிறை சென்ற நக்கீரன் கோபால் உள்ளிட்டோர் உண்டு. சின்னக்குத்தூசி, முதல் ஞாநி வரையிலும் தன் எழுத்து சுதந்திரத்தை நிலைநாட்ட வாழ்நாள் முழுக்க போராடியவர்கள் இருக்கிறார்கள். ஆனால் தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் செய்திருக்கும் இந்த செயல், ஓர் அவமானச் சின்னமாக அமைந்துவிட்டது. ‘குரல்’ பத்திரிகையாளர்கள் அமைப்பு சார்பில் தினமணி ஆசிரியர் வைத்தியநாதனின் இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறோம்.

இவன்
குரல்

Journo’s voice for the masses
For contact: [email protected]

error: Content is protected !!