நிறைபுத்தரி நெற்கதிர்களை பெற பலத்த போட்டி!- ஏன் தெரியுமா?

நிறைபுத்தரி நெற்கதிர்களை பெற பலத்த போட்டி!- ஏன் தெரியுமா?

நிறைபுத்தரி என்றால் நிறையும் புது அரிசி என்று பொருள் “இல்லம் நிற வல்லம் நிற” என்பது மலையாள பழமொழி. வீட்டை அரிசி போன்ற மங்கல பொருட்களால் நிரப்ப வேண்டிய காலம் மலையாள காலண்டரின் படி சிங்க மாதம் ( ஆவணி ) தான் வருடத்தின் முதல் மாதம் ஆகும்..!மிக முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகையும் இந்த மாதத்தில் நடைபெறும்.. அந்த மலையாள புத்தாண்டான சிங்கமாத ( ஆவணி ) பிறப்பிற்கு முன்பாக கற்கடக மாதத்தில் ( ஆடி ) அறுவடை செய்த நெற்கதிர்களை சுவாமிக்கு படைத்து கடவுள் வழிபாடு செய்து அதன் பின் புது ஆண்டையும் பண்டிகை கொண்டாட்டங்களையும் தொடங்குவது என்பது வழக்கம்.. இதுவே நிறைபுத்தரி ( நிறையும் புது அரிசி ) பூஜை ஆகும்..!

கேரளா திருவாங்கூர் சமஸ்தானமாக இருந்த போது திருவாங்கூர் அரண்மனையில் இருந்து நிறைபுத்தரி பூஜைக்குறிய முகூர்த்தம் குறிக்கபட்டு அறிவிக்கப்படும். அந்த பூஜைக்கான நெற்கதிர்கள் அரண்மனையில் இருந்தே அனைத்து கோவில்களுக்கும் அனுப்பபட்டு குறிப்பிட்ட முகூர்த்த நேரத்தில் அனைத்து முக்கிய கோவில்களிலும் சுவாமிக்கு நிறைபுத்தரி படைக்கப் பட்டு பூஜை நடைபெறும்..

காலமாற்றத்தால் அரண்மனையின் நேரடி நிர்வாகத்தில் உள்ள திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலுக்கு மட்டும் திருவாங்கூர் அரண்மனையில் இருந்து வழங்கபடுகிறது..

ஆனாலும் இப்போது வரை திருவாங்கூர் அரண்மனையில் இருந்தே நிறைபுத்தரி பூஜை முகூர்த்தம் குறிக்கபட்டு தேவசம்போர்டுக்கு பரிந்துரை செய்கிறது. அதை தேவசம்போர்டு உத்தரவாக பிறப்பிக்கிறது.. அதை தொடர்ந்து குறிக்கப்பட்ட அந்த முகூர்த்த நேரத்தில் கேரளாவில் உள்ள அனைத்து முக்கிய கோவில்களிலும் நிறைபுத்தரி பூஜை நடைபெறுகிறது..

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி திருக்கோவில், சபரிமலை அச்சன்கோவில், ஆரியங்காவு ஸ்ரீதர்மசாஸ்தா திருக்கோவில்கள், சிவன் கோவில்கள், கிருஷ்ணன் கோவில்கள், பகவதி ஷேத்திரங்கள் என்று அனைத்து முக்கிய திருக்கோவில்களிலும் நிறைபுத்தரி பூஜை சிறப்பாக நடைபெறுகிறது..

தேவசம்போர்டு கட்டுபாட்டில் இருக்கும் மற்ற கோவில்கள் அனைத்திலும் அந்தந்த கோவில் நிர்வாகத்தினர் கோவில் கமிட்டியினர் மற்றும் பக்தர்கள் ஏற்பாட்டில் நெற்கதிர்கள் கொண்டு வரபட்டு நிறைபுத்தரி பூஜை நடத்தபடுகிறது..தேவசம்போர்டின் பிரதான முக்கிய கோவிலான சபரிமலை நிறைபுத்தரி பூஜைக்கு நெற்கதிர்கள் தேவசம்போர்டு ஏற்பாட்டில் வழங்கப்படுகிறது..

தற்போது தேவசம்போர்டு உத்தரவுபடி அச்சன்கோவில் ஸ்ரீதர்மசாஸ்த்தா திருக்கோவிலில் இருந்து கொண்டு செல்லபடுகிறது.. காரணம் தேவசம்போர்டுக்கு உட்பட்ட பல கோவில்களுக்கும் பல கோடி சொத்துக்கள் இருந்தாலும் அச்சன்கோவில் ஐய்யப்பனுக்கு மட்டுமே சொந்தமாக 36 ஏக்கர் வயல் இருக்கிறது..

இந்த வயல்கள் அச்சன்கோவில் அரசனின் கால் அடியில் இருப்பது போன்று அச்சன்கோவில் நேர் கீழே தமிழ்நாடு கேரளா எல்லையில் தமிழக கிராமமான மேக்கரை அருகில் கோட்டைதிரடு கிராமத்தில் அமைந்து உள்ளது.

எனவே இங்கு இருந்து தான் நிறைபுத்தரி நெற்கதிர்கள் சபரிமலை உள்ளிட்ட முக்கிய தேவசம்போர்டு கோவில்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் தீர்மானம் செய்த தேவசம்போர்டு சில காலமாக அச்சன்கோவில் திருஆபரணபெட்டி தமிழக பொறுப்பாளர் ஏ.சி.எஸ். ஹரிஹரன் குருசாமி பெயரில் உத்தரவு வழங்கபட்டுள்ளது .

அவரால் நெற்கதிர்கள் தயார் செய்யபட்டு தேவசம்போர்டு அதிகாரிகள் அச்சன்கோவில் தேவசம் நிர்வாகம் மற்றும் உபதேச கமிட்டியினர் இணைந்து மிக பெரிய ஊர்வலமாக நெற்கதிர்கள் அச்சன்கோவிலில் இருந்து சபரிமலை கொண்டு செல்லபட்டு ஒப்படைக்கப்பட்டு நிறைபுத்தரி பூஜை நடைபெறுகிறது..

*முன்னதாக நிறைபுத்தரி பூஜைக்கான நெற்கதிர்கள் அறுவடை செய்யபட்டு அச்சன்கோவில் கொண்டு வந்து ஒப்படைக்கப்பட்டு உபதேச கமிட்டி உறுப்பினர்களால் சுத்தம் செய்யபட்டு 108 சிறு சிறு கட்டுகளாக கட்டபட்டு பட்டு வஸ்திரம் சுற்றபட்டு புண்ணியதான பூஜை செய்யபடுகிறது.

பின்னர் இதற்கென தயாரான வாகனத்தில் நெற்கதிர்கள் ஏற்றபட்டு “நிறைபுத்தரி கோஷயாத்திரை” எனப்படும் ஊர்வலம் துவங்கும் .

தமிழக எல்லையான மேக்கரை, செங்கோட்டை, புளியரை வழியாக ஆரியங்காவு சென்று அடையும்.. .. பின் ஆரியங்காவு, புனலூர் பத்தனாபுரம் கோவில், புன்னலை சிவன் கோவில், தேவி ஷேத்திரம், கலஞ்சூர் சிவன் கோவில், கல்லேளி ஊராளி அப்புப்பன் கோவில், கோணி திருக்கோவில், மலையாளபுழா பகவதி அம்மன் கோவில், பத்தனம்திட்டா சிவன் கோவில், பிரயார் சிவன் கோவில், பெருநாடு ஐயப்பன் கோவில், நிலக்கல் சிவன் கோவில் உள்ளிட்ட முக்கிய திருக்கோவில்களில் அந்தந்த கோவில்களுக்குறிய நிறைபுத்தரி பூஜைக்கான நெற்கதிர்களை தேவசம்போர்டு சார்பாக ஒப்படைத்து விட்டு ஊர்வலம் பம்பை சென்று அடையும்..

அங்கு பம்பை கனபதி கோவிலில் நிறைபுத்தரி நெற்கதிர்கள் கட்டுகளை இறக்கி வைத்து விட்டு பம்பையில் நீராடி நடை திறக்கபட்டதும் கணபதியை வணங்கி நெற்கதிர் கட்டுகளுக்கு பூஜை செய்யபட்டு 108 கட்டுகளை விரதம் இருந்த 108 பக்தர்கள் தலையில் சுமந்து சன்னிதானம் நோக்கி கொண்டு செல்வார்கள்..

நிறைபுத்தரி நெற்கதிர்கள் ஊர்வலத்தை வலிய நடை பந்தலில் சன்னிதான நிர்வாக அதிகாரிகள் வரவேற்று பஞ்சவாத்தியம் முழங்க அழைத்து செல்வார்கள்.. கொடிமரத்தில் தந்திரி , மேல்சாந்தி , சன்னிதான நிர்வாகிகள் தேவசம்போர்டு அதிகாரிகள் நிறைபுத்தரி நெற்கதிர்களை பெற்று கொள்வார்கள்.. பின் நிறைபுத்தரி ஊர்வலத்தில் பங்கேற்ற உறுப்பினர்களுக்கு சிறப்பு தரிசனம் செய்து வைப்பார்கள்.. இதுவே நிறைபுத்தரி கோஷயாத்திரையாகும்

மறுநாள் அதிகாலை நடைதிறக்கப்பட்டதும் காலை நிறைபுத்தரி நெற்கதிர்களுக்கு தந்திரி சிறப்பு பூஜை செய்து பின் சுவாமி முன் அலங்கரித்து படைக்கபட்டு நிறைபுத்தரி பூஜை நடைபெறும்..!பின் பூஜை செய்த நெற்கதிர்களில் இருந்து நெல்மணிகள் எடுத்து கைகுத்தல் மூலம் அரிசியாக்கி அந்த புது அரிசியில் சுவாமிக்கு நைவேத்தியம் செய்து படைக்கபட்டு பூஜை செய்யபடும்.. இது தான் நிறைபுத்தரி பூஜை ..

கேரளாவின் பிரபலமானவர்கள் முக்கியஸ்தர்கள் என அதிகமானோர் இந்த பூஜையில் கலந்து கொள்வார்கள்.. பூஜைக்கு பின் நெல்கதிர்கள் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கபடும்.. இதை வாங்கி வீட்டில் வைத்தால் ஐஸ்வர்யம் என்பது ஐதீகம்..

எனவே பக்தர்கள் இடையே நிறைபுத்தரி நெற்கதிர்களை பெற பலத்த போட்டி இருக்கும்.. பின் வழக்கமான மற்ற பூஜைகள் முடித்து அன்று இரவு திருநடை அடைக்கபடும்..

— தென்காசி தேவா

Related Posts

error: Content is protected !!