‘விஸ்வகுரு’வின் மௌனம்: பதிலற்ற கேள்விகளும் ‘சிந்தூரின்’ நிழலும்!

‘விஸ்வகுரு’வின் மௌனம்: பதிலற்ற கேள்விகளும் ‘சிந்தூரின்’ நிழலும்!

ரண்டு நாள்களாக நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட எதிர்க்கட்சிகளின் எந்தக் கேள்விக்கும் முழுமையான அல்லது சரியான பதில் சொல்லப்பட்டதாகவே தெரிய வில்லை. ‘இந்தியா-பாகிஸ்தான் போர், நான் சொல்லித்தான் நிறுத்தப்பட்டது’ என டிரம்ப் முப்பது முறை சொல்லிவிட்டார். அதற்கு நம் இந்தியாவின் பதில் என்ன? ‘பாகிஸ்தான் தரப்பில் கெஞ்சிக் கேட்டுக் கொண்டதுதான் காரணமே தவிர, வேறு யாரும் காரணமல்ல.’ இதுதான் பதில். டிரம்ப் காரணமல்ல என்று அவர் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்வதில்விஸ்வகுருவுக்கு என்ன தயக்கம்? அறுபத்தியொரு ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்ட நேருவின் பெயரை பதினான்கு முறை உச்சரிக்க முடிந்தவருக்கு, டிரம்ப் பெயரை ஒருமுறைகூட உச்சரிக்க முடியாமல் போனதேன்?

அதோடு, பாகிஸ்தானுக்கு உதவும் சீனாவின் பெயரையும் உச்சரிக்கத் தயங்குவதேன்? என்பன எதிர்க் கட்சிகளின் கேள்விகள். இவற்றுக்குப் பதில் இல்லை. சொன்ன பதில்களெல்லாம், கொட்டைப் பாக்கு விலை என்னவென்றால், பட்டுக்கோட்டைக்கு வழி சொன்ன ரகம்தான்.சரி, ஏப்ரல் 22-ல் பெஹல்காமில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்த கொடூரத்தைச் செய்த தீவிரவாதிகள், ஏதோ வாக்கிங் வருவதுபோல் நம் நாட்டுக்குள் சர்வசாதாரணமாக ஊடுறுவி வந்து, அந்த சுற்றுலாப் பயணிகளை இந்துவா, முஸ்லிமா என்று நிதானமாகச் சோதித்துப் பார்த்து, இந்துக்களை மட்டுமே சுட்டுக் கொன்றனர். மனைவியர் கண் முன்னால் கணவர்கள் கொல்லப்பட்ட கொடூரம். கொன்றுவிட்டு, ஏதோ அலுவலகம் முடிந்து வீட்டு திரும்புவதுபோல் நிதானமாகத் தப்பி… அல்ல அல்ல திரும்பிச் சென்றனர் என்பதுதான் எதிர்க் கட்சிகளின்

குற்றச் சாட்டு. அதோடு, இந்தக் கொடூரம் நடப்பதற்கு மூன்று நாள்களுக்கு முன்பு, அதே பகுதிக்கு நமது பிரதமர் செல்வதாக இருந்தது. உளவுத்துறையின் எச்சரிக்கை காரணமாக, பிரதமர் பயணம் ரத்து செய்யப்பட்டு விட்டது. மிக நல்ல முடிவுதான். இந்த நிலையில், அந்த சுற்றுலா தலத்திற்கான பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டிருக்க வேண்டாமா? ஏன் செய்யவில்லை? சுற்றுலாப் பயணிகளின் உயிரெல்லாம் நமக்கொரு பொருட்டேயில்லையா? அந்தக் கொடூரக் கொலைகள் நடந்த பிறகு, உள்ளூர் போலீஸ்கூட மிகத் தாமதமாக வந்ததற்கு என்ன காரணம்? இது எதிர்க் கட்சிகளின் அடுத்த கேள்வி.

இதற்கெல்லாம் ஆளுங்கட்சியின் பதில் என்ன தெரியுமா? இப்படிக் கேட்பவர்களெல்லாம் பாகிஸ்தான் ஆதரவாளர்கள்; தேசவிரோதிகள் என்பதுதான். இன்றைக்கு எல்லாமே மாறிவிட்டன. அன்றைக்குத் தேசவிடுதலைக்காக அடிபட்டு மிதிபட்டு, போராடிச் சிறை சென்றவர்களெல்லாம் இன்றைக்குத் தேச விரோதிகளாகி விட்டார்கள்; சிறைக்கொடுமைகளுக்குப் பயந்து மன்னிப்புக் கேட்டு விடுதலை பெற்றவர்களெல்லாம் தேசபக்தர்களாகிவிட்டார்கள்.

செ. இளங்கோவன்

Related Posts

error: Content is protected !!