தீராக் காதல் – விமர்சனம்!

தீராக் காதல் – விமர்சனம்!

காதல் ஒரு மாயத் திரை. அதை எந்த  வரையறைக்குள் கொண்டு வர முடியாது. இப்படி இப்படி இருந்தால் காதல் அப்படி அப்படி நடந்து கொண்டால் காதல் என்றெல்லாம் யாரும் ஆணித்தரமாக கூறி விட முடியாது. இந்தக் காதல் என்பதில் பார்த்தவுடன் காதல், பழக பழக காதல், நட்புக்கு பிறகு வரும் காதல் இதையெல்லாம் தாண்டி காதல் குறித்த எல்லைகள் பலவும் உண்டு. இதை எல்லாம் தாண்டி ஒரு எல்லை மீறலான காதல் கதையை தீராக் காதல் என்ற பெயரில் வழங்கி இருக்கிறார்கள்.. அதிலும் ‘அந்த 7 நாட்கள்’ தொடங்கி ‘ராஜா ராணி’ மற்றும் 96 என காதல் தோல்வியடைந்தவர்கள் மீண்டும் சந்தித்துக் கொள்ள நேரிடும் சூழலில் ஏற்படும் மன மாற்றங்களை மையமாக வைத்து பாலச்சந்தர் & பாலுமகேந்திரா ஸ்டைலில் சிலபல படங்கள் வந்திருந்தாலும், தற்போதைய காலக்கட்டத்தைக் கவனத்தில் கொண்டு பல தரப்பினரும் தங்களது காதல் அனுபவங்களை நினைத்து பார்க்கும் விதத்தில் ஒரு கதையை கொடுத்து அசத்த முயன்றிருக்கிறார் டைரக்டர் ரோகின் வெங்கடேஷன்.

அதாவது சிட்டி லைஃப்ஃபில் ஓரளவு வசதியான ஜெய் தனது மனைவி ஷிவாதா மற்றும் குழந்தையுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். ஒரு நாள் வேலை காரணமாக மங்களூருவுக்கு செல்கிறார். அங்கு எதிர்பாராத விதமாக தனது எக்ஸ் லவ்வரான ஐஸ்வர்யா ராஜேஷை சந்திக்கிறார். சந்தர்ப்ப சூழலால், ஐஸ்வர்யா ராஜேஷ் தனது கணவரை பிரிய, அவருக்கு ஆறுதல் வார்த்தை கூறுகிறார் ஜெய். இதனால், மீண்டும் அவரை காதலிக்கத் தொடங்குகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். ஒரு பக்கம் மனைவி, இன்னொரு பக்கம் காதலி. இதை எப்படி சமாளிக்கிறார் ஜெய்? என்பதே படத்தின் கதை.

நவீன கால மைக் மோகன் என்று வர்ணிக்கப்படும் நாயகன் ஜெய் ஆச்சரியமூட்டும் வகையில் நல்ல நடிப்பை கொடுத்து அசத்தியுள்ளார். குழந்தையிடம் கொஞ்சும் போதும், மனைவியிடம் மன்றாடும் போதும், லவ்வரை பார்த்து தவிக்கும் போதும் அந்த உணர்வுகளுக்கு ஏற்ற நடிப்பை கொடுத்து டிஸ்டிங்ஷன் வாங்குகிறார்.

ஜெய்யின் எக்ஸ் லவ்வராக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். கணவனிடம் அடிவாங்கி வதைபடும் காட்சிகள், ஜெய் மீதான காதலை வெளிப்படுத்தும் காட்சிகளில் கைத்தட்டல் பெறுகிறார். ஒரு பெண்ணின் காதல் வலி என்னவாக இருக்கும் என்பதை உள்வாங்கி நடித்துள்ளார். குறிப்பாக தன் மீது இரக்கம் ஏற்பட வைத்துவிட்டு பிறகு திடீரென வில்லி அவதாராம் எடுப்பது அதிர்ச்சியளித்தாலும், அனைத்துக்கும் காரணம் காதலே…என்று சொல்வதோடு அதே காதல் மூலம் அவர் மீது மரியாதை ஏற்படும்படி காட்சிகளை பார்வையாளனுக்கு உணர வைப்பதில் ஜெயித்து விட்டார்..

ஜெய்யின் ஒய்ஃபாக வரும் ஷிவதா, வழக்கமான மனைவிமார்களின் குணாதிசயங்களை பிரதிபலிக்கும் வேடத்தில் பக்காவாக நடித்திருக்கிறார். ஆண்கள் தவறு செய்துவிட்டு மன்னிப்பு கேட்டு விட்டால், அனைத்தும் சரியாகி விடுமா? என்ற அவரது கேள்வி தவறு செய்யும் ஆண்களுக்கு சாட்டை அடி. ஐஸ்வர்யா ராஜேஷின் கணவராக நடித்திருக்கும் அம்ஜன் கான், ஜெய்யின் நண்பராக நடித்திருக்கும் அப்துல் லீ, பேபி வரித்தி விஷால் என படத்தில் குறைவான கதாபாத்திரங்கள் வந்தாலும், அனைவரும் மனதில் நிற்கும்படி நடித்திருக்கிறார்கள்.

ரவிவர்மன் நீலமேகமின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம். கண்ணை உறுத்தாத ரம்மியமான ஒளிப்பதிவைக் கொடுத்துள்ளார். காட்சிமொழிக்கு ஏற்ற பின்னணி இசையைக் கொடுத்துள்ளார் சித்து குமார். அதாவது ஐஸர்யா ராஜேஷ் – ஜெய் இருவருக்குமான சந்திப்பின் போது வரும் பீஜியமும், ஐஸ்வர்யா ராஜேஷின் மிரட்டல், ஜெய்யின் தடுமாற்றம் என அனைத்து காட்சிகளிலும் கவனம் ஈர்க்கும் விதத்தில் பின்னணி இசை அமைத்திருக்கிறார். அதே சமயம் இரண்டு பாடல்கள் ஈர்க்கவில்லை என்பதோடு படம் ஓடும் போது செல்போனை நோண்ட வைத்து விட்டதென்னவோ நிஜம்.

எழுத்தாளர் ஜி.ஆர் சுரேந்திரநாத் எப்போதோ எழுதிய கதைக்கு திரைக்கதை, வசனம் எழுத வைத்து ரோகின் வெங்கடேசன் இப் படத்தை டைரக்ட் செய்து இருக்கிறார். ஏகப்பட்ட படங்களில் பார்த்துப் சலிப்படைந்த கதைதான் தீராக் காதல் என்றாலும், ’பிரேக்கப் எல்லாம் காதலர்களுக்குத்தான், காதலுக்கு இல்லை’, ‘பிரிவுக்கு பின் நம்ம காதல் மனசுல ரகசியமாகவே இருக்கட்டும்’ என்பது போன்ற வசனங்களாலேயே இப்படத்தில் பலக் காட்சிகளை ரசிக்க முடியாமல் கடக்க முடியவில்லை!

மொத்தத்தில் – தீராக் காதல் முள்ளோடு மலர்ந்த ரோஜா

மார்க் 3/5

error: Content is protected !!