2018- எவ்ரி ஒன் இஸ் ஹீரோ – விமர்சனம்!
இந்த மழை இருக்கிறதே- மழை அது சில சமயங்களில் பல பாடங்களை கற்றுத் தரும். பேய் மழையானது மனிதாபிமானத்தின் கதவுகளை அறைந்து, சாத்தியிருந்த வீடுகள் கூரைகளையும் சேர்த்தே திறந்து விடும்.. இந்த அடாத மழை, அரசு இயந்திரத்தையே ஆட்டம் காணச் செய்து விடும்.. இம் மாமழை, பல இடங்களிலும் மனிதம் துளிர்க்கப் பண்ணும்..ஆம்.. ஒரு பெருமழை, என்னவெல்லாம் செய்திருக்கிறது/ செய்யும் என்பதையே 2018 படம் சொல்லி இருக்கிறது..அதாவது.. 2018ல் கேரளா சந்தித்த மழை வெள்ளமும், அதிலிருந்து கேரளா எப்படி மீண்டது என்பதையும் சொல்கிறது 2018 .
டொவினோ தாமஸ், குஞ்சாக்கோ போபன், ஆசிஃப் அலி, வினீத் ஸ்ரீனிவாசன், அபர்னா பாலமுரளி, லால், இந்திரன்ஸ், ஷிவதா என மலையாள சினிமாவின் பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் ஜூட் ஆண்டனி ஜோசப். இதற்கு முன் `ஓம் ஷாந்தி ஓசன்னா’, `சாராஸ்’ படங்களைக் கொடுத்தவர் இந்த முறை அடிவயிற்றைப் புரட்டும் கோரமான மழை வெள்ள அதிர்ச்சியும், நெகிழ்ச்சியும், மனிதமும் கலந்த ஒரு கதையைச் சொல்லியிருக்கிறார். அதாவது ஒரு இயற்கை சீற்றத்தை மையமாகக் கொண்ட சினிமா மூலம், முடிந்த அளவு மனிதர்கள் மீதான நம்பிக்கையை அதிகரித்து விட்டார் என்றும் சொல்லலாம்.
Everyone is Hero என்ற படத்தின் டேக் லைன் தான் கதையின் மையம். அதை சில மனிதர்கள் மூலமாகவும் அவர்களின் பயணம் மூலமாகவும் சொல்லத் துவங்குகிறது படம். ஷாஜி (குஞ்சாக்கோ போபன்) தனது அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு செல்ல வேண்டும், நிக்சனுக்கு (ஆசிஃப் அலி) போட்டோ ஷூட்டுக்காக வேறு நகரத்துக்கு செல்லவேண்டும், துபாயிலிருந்து கிளம்பிவரும் தினு (வினீத் ஸ்ரீனிவாசன்) கேரளா மருத்துவமனையில் இருக்கும் தனது தாயைப் பார்க்கச் செல்ல வேண்டும்; பார்வைச் சவால் கொண்ட பாஷி (இந்திரன்ஸ்) கேம்ப்புக்குச் செல்ல வேண்டும்; கேரளாவுக்கு சுற்றுலா பயணிகளாக வந்திறங்கும் வெளி நாட்டு ஜோடிக்கு கேரளாவை சுற்றிப்பார்க்க செல்ல வேண்டும். ஆனால் இவர்களது வழியை எல்லாம் மழையும் வெள்ளமும் தடுக்கிறது. இவற்றை எல்லாம் தாண்டி தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு இவர்கள் சென்றார்களா? மொத்த கேரளமும் எப்படி எல்லாம் பாதிக்கிறது, இடையே நிகழும் மரணங்கள், வெள்ளத்திலிருந்து கேரளா எப்படி மீள்கிறது, அதற்கு உதவியாக வந்தவர்கள் யார் என்பதை நெகிழ்ச்சியாகச் சொல்லி முடிக்கிறது படம்.
நடிப்பு என்றுப் பார்த்தால் எக்ஸ் மிலிட்டரி மேனாக டொவினோ தாமஸ் , ஸ்கூல் டீச்சராக தன்வி ராம் , வழக்கம் போல் மலையாளிகளுக்கு எதிரான எண்ணம் கொண்டவராக ஒரு தமிழக லாரி டிரைவர் ரோலில் கலையரசன் , போராடும் மாடலாக ஆசிப் அலி மற்றும் அவரது அண்ணனாக நரேன் , அப்பாவாக லால் , டைவோர்ஸ் வாங்கிக் கொண்டு ஃபாரினில் செட்டிலான வினீத் ஸ்ரீனிவாசன் என ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பினை பக்காவாக வழங்கி இருக்கிறார்கள். நியூஸ் ரிப்போர்ட்டராக அபர்ணா பாலமுரளி மற்றும் ஹெல்ப் லைன் கண்காணிப்பாளாராக குஞ்சாகோ போபன் என அனைவரின் நடிப்புமே சிறப்பாக உள்ளது.
அகில் ஜார்ஜின் ஒளிப்பதிவு மிக நேர்த்தியாக வெள்ளக் காட்சிகளைப் பதிவு செய்திருக்கிறது. அதற்கேற்ப கலை இயக்கமும், சிஜியும் கச்சிதமாக பிணைந்திருக்கிறது. நோபின் பால் இசையில் பல காட்சிகள் எமோஷனலாக நம்மை தொடுகிறது.
கொஞ்சம் சராசரி பாரவையில் இது வெள்ளம் பற்றிய ஒரு டாகுமெண்டரி என்று நினைக்கலாம், ஆனால் ஏகப்பட்ட அழுத்தமான, நம்பும்படிடான கேரக்டர்களாலும், காட்சி அமைபுகளாலும், காவியமாக்கியிருக்கிறார் டைரக்டர்.நிஜமாக நடந்த பல சம்பவங்களை படத்தினூடே காட்சிகளாக்கி இருக்கிறார் டைரக்டர். அதிலும் அச்சூழலில் மக்களை மீட்க மீனவர்கள் தங்கள் படகுகளுடன் கிளம்புவது, கர்ப்பிணிப் பெண்ணை ஹெலிகாப்டரில் சேர்க்க நடக்கும் போராட்டம், மாடியில் துணிகள் மூலம் எழுதப்படும் தேங்க் யூ போன்றவைகளை பார்க்கும் போது இப்போதும் மனது நெகிழ்ந்து விடுகிறது..
மொத்தத்தில் – இது சினிமா அல்ல- பிரமிப்பான வாழ்வியல் அனுபவம்
மார்க் 4/5